உலக அளவிலான திறன் தரவரிசையில் இளம் சிங்கப்பூரர்கள் சிறந்து விளங்குவதாக ஆய்வு ஒன்று தெரிவித்து உள்ளது.
எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் தகவமைப்புச் சிக்கலைத் தீர்ப்பது போன்ற தகவல் செயலாக்கத் திறன்களுக்கான தேர்வில் சராசரிக்கும் மேலான தரநிலையை அவர்கள் எட்டியதாக உலகளாவிய அந்த ஆய்வு கண்டறிந்தது.
இருப்பினும், மூத்த சிங்கப்பூரர்கள், குறிப்பாக 55 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் அத்தகைய தேர்வில் சராசரிக்கும் கீழ் தேறினர்.
‘வயது வந்தோர் ஆற்றல் மீதான அனைத்துலக மதிப்பீடு’ (Piaac) என்னும் ஆய்வு அடிப்படையிலான அந்தத் தேர்வை பொருளியல் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) நடத்தியது.
அந்தத் தேர்வில் சிங்கப்பூர் பங்கேற்றிருப்பது இது இரண்டாவது முறை. இதற்கு முன்னர், 2014ஆம் ஆண்டுக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடையில் நடத்தப்பட்ட ஆய்வில் முதன்முதலாக சிங்கப்பூர் கலந்துகொண்டது.
இந்த இரண்டாவது தேர்வுக்காக, சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் உட்பட 5,011 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 2022ஆம் ஆண்டு தொடங்கிய ஆய்வு கடந்த ஆண்டு வரை நீடித்தது.
அதில் 16 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்டோர் பங்கேற்றனர்.
ஆய்வின் முடிவுகளை ஓஇசிடி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) வெளியிட்டது.
தொடர்புடைய செய்திகள்
எண்ணறிவில் சிங்கப்பூர் அதிகத் திறனை வெளிப்படுத்தியது. அதன் காரணமாக 31 நாடுகள் பங்கேற்ற தேர்வில் சிங்கப்பூர் 10வது இடத்துக்கு முன்னேறியது.
பத்தாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற தேர்வில் 39 நாடுகளில் சிங்கப்பூர் 25வது நிலையை அடைந்திருந்தது.
இருப்பினும், எழுத்தறிவில் 31 நாடுகளில் 18வது தரநிலையையே சிங்கப்பூரால் பிடிக்க முடிந்தது. இதற்கு முன்னர் 39 நாடுகளில் சிங்கப்பூர் 28வது நிலையை அடைந்து இருந்தது. எண்ணறிவு அளவுக்கு வேகமான முன்னேற்றம் இதில் இல்லை.
எழுத்தறிவிலும் எண்ணறிவிலும் ஃபின்லாந்து முதலிடத்தைப் பிடித்தது.
இம்முறை புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட தகவமைப்புச் சிக்கல் தீர்வு தேர்வில் சிங்கப்பூர் 252 புள்ளிகளைப் பெற்றது. ஓஇசிடியின் சராசரி 251 புள்ளிகளுக்கு மேலாக அது அந்த நிலையை எட்டியது.
ஆய்வின் அடிப்படையிலான இந்தத் தேர்வு, ஓஇசிடியின் அனைத்துலக மாணவர் மதிப்பீட்டுத் தேர்விலிருந்து (Pisa) வேறுபட்டது.
15 வயதுடையோரின் சிந்தனைத் திறனைப் பரிசோதிப்பது அது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் அதன் 2022ஆம் ஆண்டு ஆய்வில் சிங்கப்பூர் மாணவர்கள் கணிதம், அறிவியல் மற்றும் வாசிப்புத் திறன்களில் முதலிடம் பிடித்தனர்.

