மின்சிகரெட்டைப் பயன்படுத்திய ஆக இளையவருக்கு வயது 10

மின்சிகரெட்டைப் பயன்படுத்திய ஆக இளையவருக்கு வயது 10

2 mins read
f245d851-13e9-4f37-9cd7-7ff6630a30b8
மின்சிகரெட் வகைகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் மின்சிகரெட்டைப் பயன்படுத்தியதற்காகப் பிடிபட்டோரில் ஆக இளையருக்கு வயது 10 என்று சுகாதார அறிவியல் ஆணையத்தின் தலைமை நிர்வாகி ரேமண்ட் சுவா தெரிவித்துள்ளார்.

வயதில் குறைந்தவர்களிடையே மின்சிகரெட் பழக்கம் இருப்பது கவலை தரும் அதேவேளையில் மின்சிகரெட்டுகளில் கெட்டமின், கஞ்சா, பென்‌ஷசோல் போன்ற சட்டவிரோதப் பொருள்கள் கலக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். பென்‌ஷசோல், பார்க்கின்சன்ஸ் நோயால் பாதிக்கப்பட்டோர் போன்றவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்து வகையாகும்.

கடுமையான சட்டங்கள்

சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து மின்சிகரெட்டுகளுக்கு எதிரான மேலும் கடுமையான சட்டங்கள் நடப்புக்கு வந்தன. அதற்குப் பிறகு முதன்முறையாக திரு சுவா கடந்த புதன்கிழமை (ஜூலை 29) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசினார்.

“என்னை உறங்கவிடாமல் செய்வது தற்போது என் கண்களுக்குத் தெரிபவை அல்ல, வருங்காலத்தில் என்ன நடக்கக்கூடும் என்ற கவலைதான். இங்கு மின்சிகரெட் நிலவரம் தொடர்ந்து மாறிவருகிறது.

“அடையாளம் காணக் கூடுதல் சிரமமாக இருக்கக்கூடிய அபாயகரமான கலவைப் பொருள்கள், மேலும் ரகசியமாகப் பயன்படுத்தப்படும் மின்சிகரெட் பொருள்கள், உத்திகளில் இன்னும் கைதேர்ந்த கும்பல்கள் ஆகியவை தலைதூக்கக்கூடும்,” என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

சிங்கப்பூரில் மின்சிகரெட்டுகள் 2018ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்டன. ஆனால், பலர் தொடர்ந்து பொது இடங்களிலும் அவற்றைப் புகைத்துவந்தனர்.

பிறகு கேபோட் என்றழைக்கப்படும் எட்டோமிடேட் கலந்த மின்சிகரெட்டுகளைப் புகைத்துவிட்டு பலர் தெளிவற்ற நிலையில் இருந்தது காணப்பட்டது; சிலர் வலிப்புக்கு ஆளானதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நிலைப்பாடு

சுகாதார அறிவியல் ஆணையம் என்றுமே மின்சிகரெட்டுகளுக்கு எதிராகக் கடும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததாக திரு சுவா சொன்னார்.

எனினும், எட்டோமிடேட் கலந்த கேபோட்கள் தலைதூக்கியதுதான் இந்த விவகாரத்தில் திருப்புமுனையாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டார். அதற்குப் பிறகு பொதுமக்களின் சுகாதாரத்துக்குக் கூடுதல் அச்சுறுத்தல் எழத் தொடங்கியதால் ஆணையம் அதன் முயற்சிகளைத் தீவிரப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் உள்ளிட்ட கிட்டத்தட்ட 50 அமைப்புகளிலிருந்து 13,000க்கும் அதிகமான அதிகாரிகளுக்கு, மின்சிகரெட் பயன்படுத்துவோர்மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது, பிரச்சினையைக் கையாள்வதில் ஆணையம் மட்டுமின்றி ஒட்டுமொத்த அரசாங்கமும் ஈடுபட்டுள்ளதைக் காட்டுவதாக திரு சுவா சிட்டினார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்மின்சிகரெட்சுகாதார அறிவியல் ஆணையம்நடவடிக்கைசட்டம்