சில வாரங்களிலேயே தீவிரவாதப் பாதைக்கு ஈர்க்கப்படும் இளையர்கள்: நிபுணர்கள்

சில வாரங்களிலேயே தீவிரவாதப் பாதைக்கு ஈர்க்கப்படும் இளையர்கள்: நிபுணர்கள்

4 mins read
ef5301eb-4b39-4bf8-84d6-a450d71f4c71
இவ்வாண்டு ஜூலை 27ஆம் தேதி தீவிரவாதச் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட மூன்று பதின்ம வயதினரை உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தடுத்து வைத்துள்ளதாக தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சரான கா. சண்முகம் அறிவித்தார். உடன் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

தற்போதைய சூழல்களில் இளையர்கள் சில வாரங்களிலேயே தீவிரவாதப் பாதைக்கு ஈர்க்கப்படுகின்றனர்.

சமூக ஊடகங்கள், இணைய விளையாட்டுகளில் உள்ள வழிகாட்டும் நெறிமுறைகள் அதற்குக் காரணமாக இருக்கின்றன.

மேலும், எளிதில் பாதிக்கப்படக்கூடிய பலவீனமான இளையர்களைத் தீவிரவாதக் கட்டமைப்புகள் தங்களுக்குச் சாதமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

சிட்னியைத் தலைமையகமாகக் கொண்ட ‘ஐஇபி’ எனும் பொருளியல், அமைதிக்கான நிறுவனம், கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட கட்டுரையில், ஐரோப்பா, வட அமெரிக்காவில் பயங்கரவாதம் தொடர்பான அனைத்து விசாரணைகளிலும் 18 வயது வரையிலான சுயமாக தீவிரவாதப் போக்கைக் கொண்டவர்கள் 42 விழுக்காடாக உள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

இது, 2021ஆம் ஆண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றும் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தீவிரவாதப் பாதைக்கு மாறுவதற்கான கால அளவும் குறைந்திருக்கிறது. 2005ல் 18 மாதங்களாகவும் 2016ல் 13 மாதங்களாகவும் அது குறைந்தது. தற்போது இக்கால அளவு சில வாரங்களாகச் சுருங்கியுள்ளது என்று கட்டுரை குறிப்பிட்டது.

இந்த நிலைமை சிங்கப்பூரிலும் எதிரொலிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் 14 முதல் 20 வயது வரையிலான 23 இளையர்கள் மீது பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளுக்காக உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஐஇபி-யின் அறிக்கை மற்றொரு கவலையையும் சுட்டிக்காட்டியது. இளையர்களுக்கு ‘தனிநபர் பயங்கரவாதம்’ என்பதில் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், மேற்கத்திய நாடுகளில் நிகழ்ந்த 93 விழுக்காடு உயிரிழப்பை ஏற்படுத்திய பயங்கரவாதத் தாக்குதல்களைத் தனி ஒருவரே நடத்தியுள்ளார். மேலும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்களைக் கொண்ட குழுக்களைவிட அவர்களது தாக்குதலை வெற்றிகரமாக நடத்துவதற்கான வாய்ப்பு மூன்று மடங்கு அதிகம்.

சிங்கப்பூரில் சில அசம்பாவிதங்கள் நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளன.

ஏப்ரல், ஜூன் மாதங்களுக்கு இடையே 14, 15, 19 வயதுடைய மூன்று பதின்ம வயதினர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டதாக மூத்த அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்தார். அந்த 14 வயதுச் சிறுவன் தனது பள்ளியில் உள்ள மாணவர்களையும் ஆசிரியர்களையும் தாக்குவதற்கான திட்டங்களைச் செயல்படுத்துவதற்குச் சில வாரங்களே இருந்த நிலையில் பிடிபட்டதாகவும் ஜூலை 27ஆம் தேதியன்று அவர் கூறினார்.

2024ஆம் ஆண்டில் 17 வயதான சுயதீவிரவாதப் போக்கைக்கொண்ட சிங்கப்பூரர் ஒருவர், தெம்பனிசில் உள்ள வீவக குடியிருப்புப் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்குச் சற்று முன்பாகக் கைது செய்யப்பட்டார்.

பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வாளர்கள், சமூக ஊடகத் தளங்கள் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைக் கொண்டு தேடலைத் தூண்டிவிடுவதாகக் கூறியுள்ளனர்.

ஒரு சோதனையில், 13 வயதுடையவர்களின் சமூக ஊடகக் கணக்குகளைப் பதிவுசெய்த ஆய்வாளர்கள் குழு, சராசரியாக ஐந்து நிமிடங்களுக்குள் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களுக்கு உட்படுத்தப்படுவது கண்டறியப்பட்டது.

முதன்முறையாகச் சமூக ஊடகங்களில் சேரும் இளையர்கள் எவற்றையெல்லாம் எதிர்கொள்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்காக ‘அல்கோரிதம்’ எனப்படும் அவற்றின் வழிகாட்டும் நெறிமுறைகளை தேசியக் கல்விச் சங்கம் சோதனையிட்டது.

இந்தச் சோதனை, டிக்டாக், ஸ்னாப்சாட், யூடியூப், இன்ஸ்டகிராம் ஆகிய தளங்களில் மேற்கொள்ளப்பட்டது.

ஆண்களாகப் பதிவுசெய்யப்பட்ட சமூக ஊடகக் கணக்குகள், பெண்களுக்கு எதிரான வெறுப்பு, இனவெறி, தீவிரவாதக் கருத்துகளுக்கு இட்டுச் செல்லப்பட்டதாகவும் பெண்களுக்கு பாலியல் சார்ந்த உள்ளடக்கங்கள், ஆரோக்கியம் அல்லது உணவுமுறை தொடர்பான உள்ளடக்கங்கள் வழங்கப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

இந்த வகையில் தொடர்ந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வரும் ஒரு தளம் ‘ரோப்லாக்ஸ்’.

இது, ஏறக்குறைய 132 மில்லியன் அன்றாட பயனாளர்களைக் கொண்டுள்ளதாக சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 16 வயதிற்குட்பட்டவர்கள்.

மில்லியன் கணக்கான விளையாட்டுகளை உள்ளடக்கிய இந்த இணைய விளையாட்டுத் தளத்தில் பயனாளர்களின் விருப்பப்படி பல்வேறு மெய்நிகர் உலகங்களை உருவாக்க முடியும். இவை, எளிமையான தடைகளைத் தாண்டும் விளையாட்டுகள் முதல் சில சமயங்களில் உண்மையான உலகக் கொடுமைகளை அப்படியே பிரதிபலிக்கும் விளையாட்டுகளும் உள்ளன.

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையால் தடுத்து வைக்கப்பட்ட 14 வயது மாணவர், 1999ஆம் ஆண்டில் நடந்த கொலம்பைன் உயர்நிலைப் பள்ளிப் படுகொலையைப் போன்று உருவாக்கப்பட்ட துப்பாக்கிச்சூட்டை நடத்தும் விளையாட்டை ரோப்லாக்ஸ் தளத்தில் விளையாடியுள்ளார்.

கேலிகளுக்கு ஆளானதால் தனது பள்ளியிலுள்ள மாணவர்களையும் ஆசிரியர்களையும் தாக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் கூறிய அந்த மாணவர், இணைய விளையாட்டில் தன்னை கேலி செய்தவர்களை கொல்லக்கூடிய கதாபாத்திரங்களாக உருவாக்கினார்.

“இது, அந்த இளையரின் சொந்த அனுபவமாக மாறியது,” என்று அரசியல் வன்முறை, பயங்கரவாத ஆய்வு தொடர்பான அனைத்துலக நிலையத்தின் மூத்த பகுப்பாய்வாளரான சாதிக் பாஷா கூறினார்.

இந்த நிலையில் இணைய விளையாட்டுகளில் விதிமீறல்கள் கண்டறியப்படும்போது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதாக ரோப்லாக்ஸ் பேச்சாளர் ஒருவர், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

“வெறுப்புக் குழுக்கள், தீவிரவாத அமைப்புகள் அல்லது அவற்றின் கோட்பாடுகளை ஆதரிக்கும் அல்லது ஊக்குவிக்கும் உள்ளடக்கம் அல்லது நடத்தைகளுக்கு ரோப்லாக்சில் இடமில்லை,” என்று அந்தப் பேச்சாளர் கூறினார்.

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்ட சிங்கப்பூரரான ஹம்சா (இயற்பெயர் அல்ல), தனது 18 வயதில் இணையத்தில் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய அமெரிக்காவில் பிறந்த தீவிரவாத மதபோதகர் அல்-அவ்லாகி, பல நாடுகளில் தடைசெய்யப்பட்ட இந்திய-முஸ்லிம் போதகரான ஸாகிர் நாயக் ஆகியோரின் போதனைகளைக் கேட்டு வந்தார்.

தீவிரப் போதகர்களின் காணொளிகளைப் பார்த்தபோது அதேபோன்ற உள்ளடக்கங்களை யூடியூப் வழிகாட்டும் முறை தனக்குக் காட்டியதாக ஹம்சா கூறினார்.

தனிநபர்களைப் பாதுகாப்பது குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றி கேட்டதற்கு, வன்முறை, தீவிரவாதம், வெறுப்புப் பேச்சுகளைத் தடைசெய்யும் கடுமையான கொள்கைகளை யூடியூப் கொண்டுள்ளதாகவும் பயனாளர்களுக்கு அது பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய குழுக்கள் செயல்படுவதாகவும் யூடியூப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தீவிரவாதிகள், தீவிரவாத அமைப்புகளைச் சித்திரிக்கும் உள்ளடக்கங்களுக்கான தேடல் பரிந்துரைகளைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட விதிகளை டிக்டாக்கும் அமல்படுத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்
பயங்கரவாதம்தீவிரவாதம்பாதுகாப்புசிங்கப்பூர்தாக்குதல்