சிங்கப்பூரின் மொத்த பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது குறித்து உள்ளூர் இளையர்கள் அறிந்திருந்தாலும், அவர்களில் 40 விழுக்காட்டினர் திருமணம் செய்துகொள்ள அவசரப்படப் போவதில்லை என்று புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.
‘ஹார்ட்வேர் நெட்வொர்க்’ என்ற லாப நோக்கற்ற இளையர் அமைப்பு, 14 முதல் 35 வயதுக்குட்பட்ட 1,114 பேரிடம் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள் சனிக்கிழமையன்று (மே 16) வெளியிடப்பட்டன. இந்த ஆய்வின்படி, 25 விழுக்காட்டு இளையர்கள் திருமணம் மற்றும் குடும்பம் குறித்து இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்காமல் இருப்பதும் தெரியவந்துள்ளது.
26 முதல் 35 வயதுடையவர்களில் 23.53 விழுக்காட்டினர் மட்டுமே விரைவில் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையைத் தொடங்க ஆர்வமாக உள்ளனர். அதே வேளையில், 22.06 விழுக்காட்டினர் தங்களுக்குக் குடும்பமே வேண்டாம் என முற்றிலும் மறுத்துள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் அர்த்தமுள்ள உறவுகளை ஏற்படுத்திக்கொள்வது எளிதல்ல என்று 57.72 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். இந்தச் சிக்கல் வயது அதிகரிக்க அதிகரிக்க மேலும் தீவிரமடைகிறது.
16 வயதுக்குட்பட்டவர்களில் 41.9% பேர் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வது ஓரளவுக்கு எளிது எனக் கருதும் வேளையில், 26 முதல் 35 வயதுடையவர்களிடம் இந்த எண்ணிக்கை 20.6 விழுக்காடாகப் பாதியாகக் குறைந்துவிடுகிறது.
இந்த ஆய்வு முடிவுகள் குறித்து சனிக்கிழமையன்று (மே 16) ‘*ஸ்கேப்’ அரங்கில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் 70 இளையர்கள், பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, கலாசார, சமூக, இளையர்துறை மூத்த நாடாளுமன்றச் செயலாளர் கோ ஹான்யான் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சிங்கப்பூரின் பிறப்பு விகிதம் 2024ஆம் ஆண்டில் 0.97 ஆக இருந்த நிலையில், 2025ஆம் ஆண்டில் 0.87 என்னும் ஆகக் குறைந்த அளவை எட்டியுள்ளது. இந்த நிலை நீடித்தால் சிங்கப்பூரின் எதிர்காலத்துக்கு அது கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று அமைச்சர் இந்திராணி ராஜா ஏற்கெனவே எச்சரித்திருந்தார். இதைக் கட்டுப்படுத்த அவரது தலைமையில் ‘திருமணம் மற்றும் பெற்றோர் மறுஅமைப்புப் பணிக்குழு’ அமைக்கப்பட்டுள்ளது.
போட்டி நிறைந்த ஒரு நகரச் சூழலில் வாழ்நாள் முழுமைக்குமான குடும்பத் திட்டமிடலில் உள்ள உளவியல், சமூக மற்றும் வாழ்வியல் சார்ந்த சவால்கள் குறித்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் 35 வயது வரையிலான இளம் வயதினர் இக்கூட்டத்தில் தங்களின் கவலைகளைப் பகிர்ந்துகொண்டனர்.

