ஆயர் ராஜா விரைவுச்சாலையில் வாகனவோட்டிக்கும் டாக்சி ஓட்டுநருக்கும் இடையே சாலையில் ஏற்பட்ட விவாதம் சண்டையாக மாறியது.
அதில் 26 வயது மோட்டார் வாகனவோட்டி மார்க்கஸ் லோக் டெக் சூன், 68 வயது டாக்சி ஓட்டுநரைத் தாக்கினார்.
மார்க்கஸ் டாக்சி ஓட்டுநரின் கண்ணில் குத்திக் காயத்தை ஏற்படுத்தினார். இதனால் முதியவரின் பார்வைக்குப் பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் டாக்சி ஓட்டுநருக்கு 50 நாள்கள் மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டது. அதன்பின்னர் பார்வை பாதிப்பால் முதியவர் இனி ஓட்டுநர் வேலையிலும் ஈடுபட முடியாது என்று தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி ஆயர் ராஜா விரைவுச்சாலையில் பிற்பகல் 3 மணிவாக்கில் நடந்தது.
திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 4) நடந்த நீதிமன்ற விசாரணையில் மார்க்கஸ் தம்மீதான குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
68 வயதான ஓட்டுநர், மார்க்கசின் தாக்குதலால் வேலையின்மை, உடல் நலத்தில் தடுமாற்றம், மருத்துவச் செலவுகள் எனப் பல்வேறு சிக்கல்களில் உள்ளதாக அரசாங்கத் தரப்பு வாதிட்டது.
மார்க்கசுக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.