இணையத்தில் தீவிரவாதப் போக்கு ஏற்படுத்தும் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அது தொடர்பான கலந்துரையாடல்களை நடத்துவதில் தங்களுக்குப் பங்குண்டு என்று பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட இளையோர் கற்றுக்கொண்டனர்.
அந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் ஆல்வின் டான், பரஸ்பர மரியாதையையும் புரிந்துணர்வையும் கொண்ட கலாசாரத்தை உருவாக்க இளையோர் உதவலாம் என்று கூறினார்.
இது, தீவிரவாதப் போக்கால் ஏற்படும் தாக்கத்திலிருந்து சமூகத்தைப் பாதுகாக்கும் என்றார் அவர்.
‘தீவிரவாதப் போக்கு பாரபட்சம் பார்க்காதது. அது யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். நாம் இணையத்திலும், இணையத்திற்கு வெளியிலும் விழிப்புடன் இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 17 வயது சிங்கப்பூரர் கடந்த ஆகஸ்ட் மாதம் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, சிவில் சர்விஸ் கிளப்பில் சனிக்கிழமை (நவம்பர் 23) அந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு ஆதரவு அளித்தது.
அந்த இளையர், செப்டம்பர் பள்ளி விடுமுறையின்போது முஸ்லிம் அல்லாத ஆண்களைக் கொல்லத் திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், ‘தி ரேடிக்கல் ஷிஃப்ட்’ (The Radical Shift) கருத்தரங்கில் 150க்கும் மேற்பட்ட இளையோர் கலந்துகொண்டனர். இன, சமய நல்லிணக்கக் கட்டமைப்பு அதற்கு ஏற்பாடு செய்தது.
அந்த இளையோர் சமய, சமூக அமைப்புகள், உயர்கல்விக் கழகங்கள், நல்லிணக்கக் கட்டமைப்புகள், இன, சமய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் சமூகக் கட்டமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள்.
தொடர்புடைய செய்திகள்
வெவ்வேறு பின்னணிகளையும் நம்பிக்கையையும் கொண்டவர்களுடன் உரையாடியது பரிவைப் பேணி வளர்ப்பதற்கு முக்கியம் என்று கருத்தரங்கில் கலந்துகொண்ட இர்ஃபானா பானு கீதர் முகம்மது, 31, கூறினார்.
இனவாதம், பாரபட்சம், தீவிரவாதம் ஆகியவற்றுக்கு எதிராக நிற்க, இளையோர் மிக முக்கியப் பங்கு வகிப்பதாக கருத்தரங்கில் கலந்துகொண்ட திரேசாபிரியா சிதம்பரம் கூறினார்.
இந்நிலையில், 2015ஆம் ஆண்டுமுதல், 20 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுடைய தீவிரவாதப் போக்குடைய 14 சிங்கப்பூரர்கள்மீது உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.