இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சமூக முன்னேற்றம், சமூக ஒற்றுமை, இளையர் முன்னேற்றத்துக்கு சுய உதவிக் குழுக்கள் அளிக்க வேண்டிய ஆதரவு உள்ளிட்டவை குறித்து உரையாடி, அதற்கான தீர்வுகளை வரையறுக்கும் நோக்கில் அக்டோபர் 19ஆம் தேதி இளையர் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா), சீனர் மேம்பாட்டு உதவி மன்றம், யுரேஷியர் சங்கம், மெண்டாக்கி உள்ளிட்ட சமூக அமைப்புகள் இணைந்து ஆசிய நாகரிக அரும்பொருளகத்தில் நடத்திய இந்நிகழ்ச்சியில் இளையர்கள் 108 பேர் பங்கேற்றனர்.
தொடர்ந்து இரண்டாவது முறையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர் துறை, வர்த்தக, தொழில் அமைச்சுகளின் துணை அமைச்சர் ஆல்வின் டானும் சுய உதவிக்குழுக்களைப் பிரதிநிதிக்கும் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
வேலைவாய்ப்பு, சிங்கப்பூரின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் பங்கு உள்ளிட்டவை குறித்து இளையர்களிடம் துணை அமைச்சர் பேசினார்.
“அனைத்து இனங்களையும் சேர்ந்த பல்வேறு பின்னணிகளைக் கொண்ட இளையர்கள் இணைந்து அவர்கள் சந்திக்கும் சவால்கள், சிரமங்கள் குறித்து கருத்துப் பரிமாறிக்கொள்ள சுய உதவிக் குழுக்கள் ஆதரவளிக்கின்றன. இளையர்கள்தான் சிங்கப்பூரின் எதிர்காலம். அவர்கள் சிங்கப்பூரின் தனித்துவமான பன்முகத்தன்மை, கலாசாரம் ஆகியவற்றைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும்,” என்று துணை அமைச்சர் டான் சொன்னார்.
“அனைத்துச் சமூக இளையர்களையும் ஒன்றிணைப்பது சமூகக் கட்டமைப்பை வலுப்படுத்தும். மேலும், சிங்கப்பூரின் எதிர்காலத்தை வலுவாகக் கட்டியெழுப்புவது அனைவரது பொறுப்பு எனும் எண்ணத்தையும் ஏற்படுத்தும்,” என்றார் சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன்.