மின்னல் தாக்கி மாண்டவர் திறன்மிக்க பயிற்றுநர் எனப் புகழாரம்

மின்னல் தாக்கி மாண்டவர் திறன்மிக்க பயிற்றுநர் எனப் புகழாரம்

2 mins read
f691adf4-a6be-4d42-9fb5-1b84d147a6a2
உயிரிழந்த மிகைல் பென்யாமின். - படம்: மிகைல் பென்யாமின்/ஃபேஸ்புக்

பாசிர் ரிஸ் கடற்கரையில் சாகச நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது மின்னல் தாக்கியதால் செங்காங் பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இளையர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுயநினைவின்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 24 வயது ஆடவர் இறந்துவிட்டதாகக் காவல்துறை திங்கட்கிழமை (ஜூலை 6) காலை தெரிவித்தது.

அந்த மரணத்தில் சூது எதுவும் இல்லை என ஆரம்பகட்ட விசாரணை தெரிவிப்பதாகவும் சம்பவம் குறித்து விசாரணை தொடர்வதாகவும் அது குறிப்பிட்டது.

நீர் விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது மின்னல் தாக்கியதாகக் கூறப்பட்ட இதர ஆறு பேரும் சுயநினைவோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அவர்கள் 13 வயதுக்கும் 54 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

கடற்கரையில் சாகச நீர் விளையாட்டு, துடுப்புப் பலகை சவாரி போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது அந்த ஏழு பேரையும் மின்னல் தாக்கியதாகச் சொல்லப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5), 131 பாசிர் ரிஸ் ரோட்டில் நிகழ்ந்த சம்பவம் குறித்து அன்றைய தினம் மாலை 4.50 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்திருந்தது.

பாதிக்கப்பட்டவர்களில் நால்வர் சுயநினைவுடன் செங்காங் பொது மருத்துவமனைக்கும் பிள்ளைகள் இருவர் கேகே மகளிர், சிறார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

இதற்கிடையே, உயிரிழந்த இளையரைப் பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளன.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அவரது பெயர் மிகைல் பென்யாமின் என்பதும் ‘சீஓப்ஸ்’ எனப்படும் வெளிப்புற சாகச நடவடிக்கைகளை நடத்தும் நிறுவனத்தில் அவர் பகுதிநேரப் பயிற்றுநராக வேலை செய்து வந்தார் என்பதும் தெரியவந்துள்ளது.

தமது குடும்பத்தினருடன் பாசிர் ரிஸ் கடற்கரைக்குச் சென்றிருந்த அவர், சம்பவம் நிகழ்ந்தபோது கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் இருந்தார்.

வெளிப்புற நடவடிக்கைகளுக்கான பயிற்றுநராகப் பணியாற்றி வந்த அவர், திறன்மிக்க, அர்ப்பணிப்புள்ள பயிற்றுநர் என்று அவரது நிறுவனம் தெரிவித்துள்ளது. கயாகிங் எனப்படும் படகு வலித்தல் விளையாட்டுகளில் ஈடுபடுவோருக்கு அவர் பயிற்சி வழங்கி வந்தார்.

‘கேம்ப் சேலஞ்ச்’ போன்ற இதர நிறுவனங்களுக்கும் அவர் நீர் விளையாட்டுப் பயிற்றுநராக இருந்தார் என்று ‘சீஓப்ஸ்’ நிறுவனரான ஆண்ட்ரூ சுவா கூறினார்.

குறிப்புச் சொற்கள்
பாசிர் ரிஸ்மரணம்மின்னல்