நல்லிணக்கத்தை நிலைநாட்ட இளையர்களுக்கு அமைச்சர் அழைப்பு

நல்லிணக்கத்தை நிலைநாட்ட இளையர்களுக்கு அமைச்சர் அழைப்பு

2 mins read
d6b0dba4-24ad-46d4-9996-9a616d2d3c9e
சிங்கப்பூரின் ஆகப்பெரிய இன, சமய நல்லிணக்க விழாவான ‘ஹார்மனி ஃபெஸ்ட்! 2026’ அதன் நான்காவது இன, சமய நல்லிணக்க மாதக் கொண்டாட்டத்தைச் சனிக்கிழமை (ஜூலை 4) தொடங்கியது. - படம்: கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு
multi-img1 of 2

நாட்டின் இன, சமய நல்லிணக்கத்தின் எதிர்காலம் இனி இளையர்களின் கைகளில்தான் உள்ளது என்றும் இந்த முக்கியப் பணியைத் தொடர இளையர்கள் அனைவரும் முன்வர வேண்டும் என்றும் கலாசார, சமூக, இளையர்துறைக்கான தற்காலிக அமைச்சரும் கல்விக்கான மூத்த துணை அமைச்சருமான டேவிட் நியோ கூறியுள்ளார். 

அதிபர் தர்மன் சண்முகரத்னம் முன்னிலையில் சனிக்கிழமை (ஜுலை 4) நடைபெற்ற நல்லிணக்க விழாவில் (ஹார்மனி ஃபெஸ்ட் 2026) பேசிய திரு நியோ, ‘‘சிங்கப்பூரின் இன, சமய நல்லிணக்கம் தற்செயலாக அமைந்ததன்று. அது வேற்றுமைகளைக் கடந்து ஒற்றுமையைத் தேர்ந்தெடுத்த, பல தலைமுறை சிங்கப்பூரர்களின் அயராத உழைப்பால் பெறப்பட்டதாகும்,” என்று குறிப்பிட்டார்.

தேசிய உறுதிமொழியின் 60ஆம் ஆண்டுநிறைவு

60 ஆண்டுகளுக்கு முன்பு, வகுப்புவாதப் பதற்றங்கள் இனக் கலவரங்களின் சாம்பலிலிருந்து சிங்கப்பூர் ஒரு புதிய நாடாக உருவெடுத்தபோது, அமரர் எஸ் ராஜரத்தினம் தேசிய உறுதிமொழியை எழுதினார் என்பதைத் தமது உரையில் அமைச்சர் நியோ நினைவுகூர்ந்தார். 

“வேறுபாடுகளைக் கடந்து நாம் அனைவரும் ஒரே மக்களாக ஒன்றிணைவோம் என்ற அந்தத் துணிச்சலான பார்வை, இன்று பல தலைமுறைகளின் கூட்டு முயற்சியால் நனவாகியுள்ளது,” என்று அவர் கூறினார். இதற்குச் சான்றாக, விழாவின் தொடக்கத்தில் பல்வேறு சமயங்களைச் சார்ந்த சமயத் தலைவர்கள் இணைந்து நடத்திய கூட்டுப் பிரார்த்தனை அமைந்தது.

கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, சமூகங்களிடையே நம்பிக்கையை வளர்க்கத் தொடங்கப்பட்ட இன, சமய நல்லிணக்கக் குழு (ஐஆர்சிசி) இப்போது ‘ஹார்மனி சர்க்கிள்’ அமைப்பாக உருவெடுத்துள்ளது என்பதைக் குறிப்பிட்ட திரு நியோ, அது அடைந்து வரும் சீரிய வளர்ச்சி பற்றியும் விவரித்தார்.

‘‘கடந்த மூன்று ஆண்டுகளில் நல்லிணக்க வட்டத்தில் (ஹார்மனி சர்க்கிள்) இளையர்களின் சேர்க்கை 40 விழுக்காடு அதிகரித்து, தற்போது 170 பேர் இணைந்துள்ளனர். கடந்த 2023ல் 1,500 ஆக இருந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை, தற்போது நாடு முழுவதும் உள்ள 97 குழுக்களில் 2,000ஐ நெருங்கியுள்ளது. இதில் பங்கேற்கும் சமய அமைப்புகளின் எண்ணிக்கையும் 200லிருந்து 450ஆக இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது,’’ என்றார் திரு நியோ.

மேலும், நல்லிணக்க வட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவுடன் இணக்கமாகச் செயலாற்றி இவ்விழாவின் பல முக்கியப் பகுதிகளை வடிவமைத்து, தொண்டூழியர்களைத் திரட்டி முன்னின்று நடத்திய இளையர்களான இர்ஃபானா பானு, பீட்டர் ஆங் ஆகியோருக்கு அமைச்சர் தமது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

“நல்லிணக்கம் என்பது ஒரு தொடர் பணி; நாம் ஒவ்வொரு நாளும் எடுக்கும் முடிவுகளில்தான் அது வாழ்கிறது,” எனக் குறிப்பிட்ட திரு நியோ, முன்னோர்கள் விட்டுச்சென்ற இந்த நல்லிணக்க அடித்தளத்தை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல இளையர்கள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்