காவல்துறை அதிகாரி ஒருவரைத் தாக்கியது, வங்கி மோசடியில் ஈடுபட்டது ஆகிய குற்றங்களைப் புரிந்ததாக குற்றஞ்சுமத்தப்பட்ட 19 வயது இளையர் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
சிறையிலிருந்து பிணையில் வெளிவந்த அவர் பெருவிரைவு ரயிலில் அமளியில் ஈடுபட்டது, 66 வயது முதியவர் ஒருவரைத் தன்னுடன் சண்டைக்கு வருமாறு அழைத்தது ஆகிய குற்றங்களை மீண்டும் புரிந்துள்ளார்.
அந்த இளையர், பாதிக்கப்பட்டவரை நாகரிகமற்ற வார்த்தைகளால் திட்டியதுடன் முதியவரை அடிக்க முயன்றதாகவும் அந்த முதியவர் அதைத் தடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, தன்மீது சுமத்தப்பட்ட அரசு ஊழியரைத் தாக்கியது, பொது மக்களுக்குத் தொல்லை ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டது ஆகிய குற்றச்சாட்டுகளை அந்த இளையர் ஏற்கெனவே ஒப்புக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2020ஆம் ஆண்டு வங்கியை ஏமாற்றிய குற்றத்தைப் புரிந்தபோது அவரது வயது 16 ஆக இருந்ததால், சிறார், இளையர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவருடைய பெயரை வெளியிட இயலாது எனத் தெரிவிக்கப்பட்டது.
அவர் முன்னதாகப் புரிந்த குற்றத்திற்கான தண்டனை புதன்கிழமை விதிக்கப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் மீதான வழக்கு தற்போது நவம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

