- ஜெசிகா ஜீவா
காலாங் ஆற்றில் 13 வயது இளையர் ஒருவர் மூழ்கியதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
புதன்கிழமை (பிப்ரவரி 25) பிற்பகல் சுமார் 4.30 மணிக்கு, ஆற்றில் அந்த இளையர் மூழ்கியிருக்கலாம் எனக் காவல்துறைக்குத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் எந்தச் சூதும் நிகழவில்லை என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விசாரணை தொடர்கிறது.
இரவு 9 மணியளவில் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை, காவல்துறை ஆகியவற்றின் வாகனங்கள் சம்பவ இடத்தைவிட்டு அகன்றன.
தமிழ் முரசின் கேள்விகளுக்குப் பதிலளித்த குடிமைத் தற்காப்புப் படை, ‘டார்ட்’ (DART) எனப்படும் பேரிடர் உதவி, மீட்புக் குழுவைச் சேர்ந்த மீட்புப் பணியாளர்களும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த தீயணைப்பாளர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தது.
காணாமல்போன நபர் கடைசியாகக் காணப்பட்டதாகக் கூறப்படும் பகுதியில் மீட்புப் பணியாளர்கள் நீர்மட்டத்திற்குக் கீழ் தேடுதலை நடத்தியதாகவும் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
காணாமல்போன இளையர்; அதிகாரிகளின் மீட்பு முயற்சி
நான்கு மணி நேரத்திற்கு மேல் நீடித்த தேடுதல் பணிகளுக்குப் பிறகு, இரவு நேரம் காரணமாகப் பாதுகாப்புக் கருதி அந்தப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகவும், மறுநாள் காலை தேடல் பணிகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அப்பர் பூன் கெங் ரோடு (Upper Boon Keng Road) அருகே இந்தச் சம்பவம் பிற்பகல் 4.30 மணியளவில் நடந்ததாகக் கேள்வியுற்றதாக வழிப்போக்கர்கள் தமிழ் முரசிடம் தெரிவித்தனர்.
ஆற்றில் இளையர் விழுந்ததாகக் கூறப்படும் பகுதியைச் சுற்றிக் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்திருந்தனர்.
சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள புளோக் ஒன்றின் கீழ், இரவு சுமார் 7.45 மணியளவில் மூன்று இளம் ஆடவர்களும் ஒரு தம்பதியரும் நின்றிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு அருகே மாலை சுமார் 5 மணியளவில் வழிப்போக்கர்கள் கூடியிருந்ததாக 47 வயது கனி என்ற வட்டாரவாசி தெரிவித்தார்.
“இளையர்கள் மூவரை அதிகாரிகள் விசாரித்து வருவதைக் கண்டேன். நடந்தது பற்றி அருகில் இருந்தவர்களிடம் தெரிந்துகொண்டேன். மிகவும் வருத்தமாக இருக்கிறது,” என்று திருவாட்டி கனி கூறினார்.
அதிகாரிகள் தங்கள் தேடுதல் பணியைத் தொடர்ந்து நடத்தி வந்ததைச் சற்று தொலைவிலிருந்து கண்டதாக 33 வயது போஷியா தெரிவித்தார்.
“பொதுமக்கள் அங்கு நிற்காமல் தொடர்ந்து செல்லும்படி காவல்துறையினர் கேட்டுக்கொண்டிருந்ததைக் கண்டேன்,” என்றார் போஷியா.
அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.

