சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த இளையருக்குச் சீர்திருத்தப் பயிற்சி

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த இளையருக்குச் சீர்திருத்தப் பயிற்சி

2 mins read
74acd9bc-ce33-45bd-9279-f5b274185ecc
இரு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்தை இளையர் ஒப்புக் கொண்டார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கட்டுப்படுத்த முடியாத பாலியல் பழக்கங்களைக் கொண்டிருந்த 20 வயது இளையர் ஒருவரை, 13, 14 வயதுடைய இரு சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காகக் குறைந்தபட்சம் ஓராண்டு காலச் சீர்திருத்தப் பயிற்சித் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று ஜூன் 3ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த இளையர், இரு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளையும் உறவினரின் 17 வயது மகளின் ஆபாசப் படங்களை வைத்திருந்த மற்றொரு குற்றச்சாட்டையும் ஒப்புக்கொண்டார்.

பாதிக்கப்பட்ட அந்த 17 வயதுப் பெண்ணின் அடையாளம் தெரியக்கூடாது என்பதால் அவரது பெயரை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இளையரின் பெயரும் வெளியிடப்படவில்லை.

சீர்திருத்தப் பயிற்சித் தண்டனையின்போது, இளம் குற்றவாளிகள் ஒரு நிலையத்தில் வைக்கப்பட்டு கடுமையான உடற்பயிற்சிகள், அணிவகுப்புகள் மற்றும் ஆலோசனைகள் உள்ளிட்ட கடுமையான ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்படுத்தப்படுவர்.

கடந்த 2023ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், ‘ஒமேகல்’ என்ற தளத்தின் வழியாக முதல் சிறுமியிடம் பழகினார். இந்தத் தளத்தின்மீது அதிக புகார்கள் வந்ததால் அது 2023ஆம் ஆண்டில் மூடப்பட்டது. கடந்த 2023 ஜூன் மாதத்தில் அவர்கள் உடலுறவு கொள்வதற்காகச் சந்திக்கத் திட்டமிட்டனர். சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள வீவக புளோக்கின் படிக்கட்டுப் பகுதியில் இளையர் அச்சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தார்.

இதேபோல், அப்போது 14 வயதாக இருந்த இரண்டாவது சிறுமியையும் இளையர் ‘ஒமேகல்’ செயலி மூலமாகப் பழகி அவரை பாலியல் வன்கொடுமை செய்தார்.

கடந்த 2023 ஜூலையில் தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறி முதல் சிறுமியின் தாயார் புகார் அளித்ததைத் தொடர்ந்து இளையர் கைது செய்யப்பட்டார்.

இளையரின் கைப்பேசியைக் காவல்துறை பறிமுதல் செய்து சோதித்ததில் அவரது சொந்த உறவினர் மகளின் இரண்டு ஆபாசப் படங்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்