‘ஏஐ’ திறனை மேம்படுத்தும் பொறுப்பு இளையர் கையில்

‘ஏஐ’ திறனை மேம்படுத்தும் பொறுப்பு இளையர் கையில்

2 mins read
066e2a80-80e3-48b6-8ef9-a567fd46bb1d
‘டிலாய்ட்’ கருத்தாய்வு ஒன்றின்படி, முதலாளிகளால் வழங்கப்படும் ஏஐ கருவிகள் போதுமானவை என்று மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானவர்களே கூறியுள்ளனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தில் சிங்கப்பூர் ஊழியரணி தனித்துவம் கொண்டிருந்தாலும் குறைபாடுகள் சில நிலவுவதாக ‘டிலாய்ட்’ ஆலோசனை நிறுவனத்தின் ஆய்வு குறிப்பிடுகிறது.

22,500க்கும் மேற்பட்ட இளையர்கள் பங்கேற்ற ஆய்வில் சிங்கப்பூரைச் சேர்ந்த 302 பேர் இடம்பெற்றனர்.

சிங்கப்பூரில் கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 10 பேரில் கிட்டத்தட்ட 9 பேர் தங்களது அன்றாட வேலைகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், தங்கள் முதலாளிகளால் வழங்கப்படும் ஏஐ கருவிகள் போதுமானவை என்று மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானவர்களே கூறியுள்ளனர்.

அத்துடன், தொழில்நுட்பம் வளர்ச்சியடையும்போது புதிய ‘ஏஐ’ பயிற்சி வாய்ப்புகளைத் தொடர்ந்து தேடுவோம் என்று சிங்கப்பூரில் உள்ள ‘ஜென் ஸி’ தலைமுறையினரில் 40 விழுக்காட்டினரும் ‘மில்லெனியல்’ தலைமுறையினரில் 47 விழுக்காட்டினரும் கூறுகின்றனர்.

கற்றல், மேம்பாடு ஆகியவற்றுக்கான வாய்ப்புகளைக் கண்டறியவும் வேலை தொடர்பான மன அழுத்தத்தைச் சமாளிக்கவும், தொழில் ஆலோசனைகளைப் பெறவும் அவர்கள் ‘ஏஐ’யைப் பயன்படுத்துகின்றனர் என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

ஊழியரணியும் வேலையிட நிர்வாகமும் இணைந்து திறன் மேம்பாட்டுக்கான திட்டமிடலில் இணையும்போது அது தொடர்பான அச்சமும் தயக்கமும் குறையும் என்று ‘ஏஐ’ வல்லுநர்கள் இருவர் தமிழ் முரசிடம் தெரிவித்தனர்.

பயிற்சி செய்தால் தயக்கம் குறையும்

எந்தத் துறையாக இருந்தாலும், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் என்பது மனிதர்கள் வேலை செய்வதற்கு எதிரானதன்று என ‘எடியுபட்ஸ்’ (EduBuds) நிறுவனத்தைத் தொடங்கிய நித்திஷ் செந்தூர், 34, தெரிவித்தார்.

மாறாக, ஊழியர்களின் வேலை நேரத்தைச் சேமித்து, அவர்களின் உற்பத்தித்திறனுக்கு ‘ஏஐ’ உதவி செய்யும் என்று கடந்த நான்கு ஆண்டுகளாகச் செயற்கை நுண்ணறிவுப் பயிற்சிகளை வழங்கிவரும் திரு நித்திஷ் கூறினார்.

 ‘எடியுபட்ஸ்’ நிறுவனர் நித்தி‌ஷ் செந்தூர், 34.
 ‘எடியுபட்ஸ்’ நிறுவனர் நித்தி‌ஷ் செந்தூர், 34. - படம்: நித்தி‌ஷ் செந்தூர்

‘ஏஐ’ பற்றிப் பேசும்போது, வேலை செய்பவர்கள் அதனைப் பேரச்சத்துடன் பார்க்கிறார்கள் என்பதால் அவர்களின் மனப்போக்கை மாற்றுவது சவாலாக இருப்பதாகத் திரு நித்தி‌ஷ் குறிப்பிட்டார்.

“செயற்கை நுண்ணறிவு தரும் பதில்கள் முற்றிலும் துல்லியமாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்றால் அதனை ஊழியர்கள் சரிபார்க்க வேண்டும். அந்த இடத்தை எந்தச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தாலும் முழுமையாக மாற்ற முடியாது,” என்றும் இவர் சொன்னார்.

தேவை அறிந்து கற்கவேண்டும்

கற்ற திறன்களை உடனே அல்லது விரைவில் நடைமுறைப்படுத்த முற்படும்போது தயக்கம் ஆர்வமாக மாறுகிறது என்று ‘ஸ்டோரிலேப் அகாடமி' நிறுவனர் சஞ்சய் முத்துக்குமரன், 25, தெரிவித்தார்.

கற்பவர்கள் எதைக் கற்கிறோம், எது தேவை என்ற கவனத்துடன் செயல்படும்படி திரு சஞ்சய் முத்துக்குமரன், 25, அறிவுறுத்துகிறார்.
கற்பவர்கள் எதைக் கற்கிறோம், எது தேவை என்ற கவனத்துடன் செயல்படும்படி திரு சஞ்சய் முத்துக்குமரன், 25, அறிவுறுத்துகிறார். - படம்: சஞ்சய் முத்துக்குமரன்

செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டுப் பயிற்சிகளை நான்கு ஆண்டுகளாக தமது குழுவுடன் வழங்கிவரும் சஞ்சய், “செயற்கை நுண்ணறிவு மீதான அச்சம் என்பது அவர்கள் பயன்படுத்தத் தொடங்கும் வரை மட்டுமே இருக்கும்,” எனக் குறிப்பிட்டார்.

கற்பவர்கள் எதைக் கற்கிறோம், எது தேவை என்ற கவனத்துடன் செயல்படவேண்டும் என்று திரு சஞ்சய் அறிவுறுத்துகிறார்.

“செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை, ‘பிராம்ப்ட் இன்ஜினியரிங்’ மட்டும் தெரிந்திருப்பது மிக அடிப்படையான திறன். அதைத் தாண்டி, தங்களின் குறிப்பிட்ட துறை சார்ந்த தேவைகளுக்குச் செயற்கை நுண்ணறிவை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை வேலை தேடுவோர் ஆழமாகக் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்பது இவரது ஆலோசனை.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுவேலைசவால்இளையர்