ரஜினி, கமல் இருவரையும் ஒரே நாளில் சந்தித்த சிங்கப்பூர் நாயகன்

ரஜினி, கமல் இருவரையும் ஒரே நாளில் சந்தித்த சிங்கப்பூர் நாயகன்

3 mins read
5707d241-cef8-4686-87c6-92d795799863
சென்னையில் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்தைச் சந்தித்த சிங்கப்பூர்ப் பிரபலம் யங் ராஜா. - படம்: யங் ராஜா

பாலர் பருவம் முதற்கொண்டே நடிகர் ரஜினிகாந்தைத் தமது ‘சூப்பர்ஹீரோ‘வாகப் பார்த்து வளர்ந்ததாகக் கூறும் சிங்கப்பூரின் புகழ்பெற்ற நட்சத்திரம் ‘யங் ராஜா’, ஒருநாள் அவரை நேரில் பார்த்தே தீரவேண்டும் என்ற வேட்கையில் இருந்தார்.

அந்தக் கனவு கடந்த மாதம் 20ஆம் தேதி யங் ராஜாவிற்குக் கைகூடியது.

ஒருவரையல்ல, புகழ்பெற்ற இரு நட்சத்திரங்களை ஒரே நாளில் பார்த்து, ஆரத்தழுவி, அளவளாவும் வாய்ப்பு தனக்கு வரமாக அமைந்தது என்றார் அவர்.

தம் வாழ்வின் பொன்னாளாகக் கருதும் அன்றைய நாளில், ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினி மட்டுமன்றி ‘உலக நாயகன்’ கமல்ஹாசனையும் சந்தித்தார் ‘யங் ராஜா’.

“தலைவரைப் பார்த்த உடனேயே பெருவியப்பில் ஆழ்ந்து போனேன். அவரிடம் நான் பேசிய முதல் சில சொற்கள் என்னை அறியாமல் வந்தவை,” என்றார் அவர்.

“எப்படி சார் இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? என் வாழ்நாளில் எப்போதாவது உங்களைப் பார்த்தே தீருவேன் என்று எனக்குத் தெரியும். என்னுடைய 30வது வயதில் இப்போதுதான் அது நிறைவேறியுள்ளது,” என்று திரு ரஜினியிடம் பேசத் தொடங்கியதாக யங் ராஜா குறிப்பிட்டார்.

சென்னையில் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்தைச் சந்தித்த சிங்கப்பூர்ப் பிரபலம் யங் ராஜா.
சென்னையில் ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்தைச் சந்தித்த சிங்கப்பூர்ப் பிரபலம் யங் ராஜா. - படம்: யங் ராஜா

“பார்த்தவுடன் கையெடுத்துக் கும்பிட்டேன்,” என்று சொன்ன அவர், ‘சூப்பர் ஸ்டாரை’ அரவணைக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறினார்.

“அறிமுகச் சொற்களைக் கூறியவுடனே அவரைக் கட்டிப்பிடித்தேன். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் அவருடன் பேசினேன். மொத்தம் மூன்று முறை அவரை அரவணைக்கும் பெரிய அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது,” என்று உற்சாகம் பொங்க விவரித்தார் யங் ராஜா.

“சிரித்தார். சிரித்துக்கொண்டே பேசினார். விரைவில் சிங்கப்பூர் வருவேன் என்று கூறினார்,” என்று தெரிவித்த யங் ராஜா, நீண்ட காலமாக அவரைச் சந்திக்க முயற்சி செய்ததைக் கூறி, ரஜினியின் வாழ்த்துடன் விடைபெற்றுக் கொண்டதாகச் சொன்னார்.

சிறு வயதில் யங் ராஜா.
சிறு வயதில் யங் ராஜா. - படம்: யங் ராஜா

‘சூப்பர்ஸ்டார்’ மீதான மோகம் மூன்று வயதில் யங் ராஜாவிற்குத் தொடங்கியது. படையப்பா, அருணாச்சலம், முத்து போன்ற திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்த அவர், ரஜினியின் அழகு, ஸ்டைல், ‘மாஸ்’, ‘கூல்’ போன்ற அம்சங்களால் ஈர்க்கப்பட்டு, தீராத பற்று கொண்டார்.

“சிறு வயதில் நான் சாப்பிடாமல் அடம்பிடித்தால் என் அம்மா ரஜினி படத்தைப் போட்டுப் பார்க்கச் சொல்வார். உடனே சாப்பிடுவேன். எப்போது அடம்பிடித்தாலும் ரஜினி படம்தான் என்னை அடக்கக்கூடிய ஒரே ஆயுதம். நான் அத்திரைப்படங்களைப் பார்த்துப் பார்த்து ‘கேசட்’டிலிருக்கும் ‘டேப்’ பிய்ந்துபோனதும் உண்டு,” என்று தமது வளரும் பருவச் சுவாரசியத் தருணங்களை யங் ராஜா குறிப்பிட்டார்.

“பல முறை அத்திரைப்படங்களைப் பார்த்து, ரசித்து உள்வாங்கிய அனைத்தும் என் கண்முன்னே வந்து நின்றது,” என்று தம் வாழ்நாளில் மறக்கமுடியாத தருணத்தை வார்த்தைகளால் வருணித்தார் அவர்.

‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு நடக்கும் இடத்தில்தான் ரஜினியை அவர் சந்தித்தார்.

ரஜினிகாந்தின் அணுக்கமான தொடர்பாளரிடமிருந்து அழைப்பு வந்தபோது நண்பர்களுடன் தேனாம்பேட்டையில் இருந்த யங் ராஜா, ‘ஊபர்’ வாடகைப் பகிர்வு வாகனத்தில் 40 நிமிடங்கள் பயணம் செய்து அந்த இடத்தை அடைந்தார்.

படப்பிடிப்பு முடிந்து தமது ஒப்பனையைக் களைந்துவிட்டு ‘யங் ராஜா‘வைப் பார்க்க கிட்டத்தட்ட அரை மணி நேரம் காத்திருந்தாராம் ரஜினி.

நடிகர் ரஜினிகாந்த் தம்மை ஆரத் தழுவி, வாழ்த்தியது வாழ்நாளில் மறக்கவியலாத தருணம் என்கிறார் யங் ராஜா.
நடிகர் ரஜினிகாந்த் தம்மை ஆரத் தழுவி, வாழ்த்தியது வாழ்நாளில் மறக்கவியலாத தருணம் என்கிறார் யங் ராஜா. - படம்: யங் ராஜா

அந்த அழைப்புக்கு முன்னர்தான் அவருக்கு மற்றோர் இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது. அதிலிருந்தே தான் மீண்டிருக்கவில்லை என்றார் யங் ரஜா.

காரணம், அன்று பிற்பகல் வேளையில் தமது தோழி ஷ்ருதி ஹாசனைச் சந்திக்கச் சென்ற யங் ராஜா, உலக நாயகன் கமல்ஹாசனைப் பார்த்து அவருடன் உரையாடும் வாய்ப்பைப் பெற்றார்.

தோழி ஷ்ருதி ஹாசனைச் சந்திக்கச் சென்ற இடத்தில் ‘உலக நாயகன்’ கமல்ஹாசனைச் சந்தித்தார் யங் ராஜா.
தோழி ஷ்ருதி ஹாசனைச் சந்திக்கச் சென்ற இடத்தில் ‘உலக நாயகன்’ கமல்ஹாசனைச் சந்தித்தார் யங் ராஜா. - படம்: யங் ராஜா

“சிங்கப்பூரில் உள்ள எனது நண்பர்,” என்று ஷ்ருதி கமலிடம் அறிமுகம் செய்து வைக்க, இருவரும் சிறிது நேரம் கலந்துரையாடினர்.

2024ஆம் ஆண்டு ‘இந்தியன்-2’ பாடல் வெளியீட்டு விழாவில் அவரது முன்னிலையில் ஷ்ருதியுடன் மேடையில் பாடியதைக் கமலுக்கு நினைவூட்டினார் யங் ராஜா.

“என்னால் நம்பவே முடியவில்லை. கமல் சாரையா பார்க்கிறோம் என்று வியந்து நின்றேன். மிகவும் எளிமையாகத் தமது மகளுடன் உரையாடியவாறு இருந்தார். அவ்வப்போது என்னிடம் உரையாடினார்.

“அவரது நடிப்புப் பயணத்தின் சில சுவாரசிய தருணங்கள் குறித்து உரையாடினோம். எனது கலைப் பயணம் பற்றியும் அவர் கேட்டறிந்தார்,” என்று கூறினார் யங் ராஜா.

கிட்டத்தட்ட ஆறு, ஏழு ஆண்டுகளாக நானும் ஷ்ருதியும் நண்பர்கள். ஆனால் இதுவே முதன்முதலில் நான் கமலை நேரில் சந்தித்த தருணம்.

“அந்த நாள் என் வாழ்நாளில் மிக முக்கியமான நாள்,” என்று மீண்டும் நெகிழ்ச்சியுடன் கூறினார் யங் ராஜா.

குறிப்புச் சொற்கள்