சிங்கப்பூர் எக்ஸ்போவில் மார்ச் 14ஆம் தேதியன்று ‘ஸாக் சலாம்’ இந்தியா சமூக விருது வழங்கும் விழா, கல்வி ஊக்கத்தொகைவழங்கும் விழா, நோன்பு துறப்பு நிகழ்ச்சி ஆகியவை இணைந்து முப்பெரும் நிகழ்ச்சியாக நடந்தேறியது.
சிங்கப்பூர்ச் சமூக மேம்பாட்டிற்குப் பங்களித்த வெவ்வேறு துறைகளைச் சேர்ந்த பத்துப் பேருக்கு ‘ஸாக் சலாம் இந்தியா சமூக விருது’ வழங்கப்பட்டது.
வளர்தமிழ் இயக்கத் தலைவர் நசீர் கனி, ஹோப் இனிஷியேடிவ் அலையன்ஸ் தலைவர் ரெவ்ரன்ட் இசகல் டான், மூத்த சமூக அடித்தளத் தலைவர் என்.ஆர். கோவிந்தன், ஓய்வு பெற்ற நூலக அதிகாரி புஷ்பலதா நாயுடு, காஸா ரவுதா எனும் குடும்ப வன்முறைத் தடுப்பு அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஸஹாரா ஆரிஃப், சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா. ஆண்டியப்பன், ஜாமியா சிங்கப்பூர் இயக்குநர் முனைவர் ஈசா ஹஸன், கல்வியாளர் முனைவர் இஸ்கந்தர் அப்துல்லாஹ், சிங்கப்பூர் தென்காசி நலனபிவிருத்திச் சங்கத் துணைத் தலைவர் முஹம்மது ஜாஃபர், முஸ்லிம் கன்வெர்ட்ஸ் அசோசியேஷன் சிங்கப்பூரின் முன்னாள் தலைவர் ஆதம் ஃபூ ஆகியோர் விருது பெற்றனர்.
குவைத்துக்கான சிங்கப்பூர்த் தூதர் அபு பக்கர் முகம்மது நூர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் பத்து மாணவர்களுக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிங்கப்பூர்த் தமிழ் அமைப்புகளின் பேராளர்கள், மலாய் முஸ்லிம் அமைப்பினர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
“ஸாக் சலாம் இந்தியா நோன்புத் துறப்பு போன்ற நற்செயல்களிலும் ஈடுபடுவது பாராட்டத்தக்கது,” என்றார் இந்திய முஸ்லிம் பேரவைத்தலைவர் முஹம்மது பிலால்.
தொடர்ந்து மறுநாளும் (மார்ச் 15) ஹர்யாசின் உணவகத்தின் ஆதரவுடன் நோன்புத் துறப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்திய முஸ்லிம் பேரவை கடந்த மூன்றாண்டுகளாக ஒருங்கிணைத்துவரும் நோன்புத் துறப்பில் இன, சமய வேறுபாடின்றி ஒவ்வோர் ஆண்டும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்துகொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.