முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் ஸாக்கி முகம்மது மக்கள் செயல் கட்சியின் (மசெக) மத்திய செயற்குழுவுக்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
அதோடு மசெக மத்திய செயற்குழு, 51 வயது ஸாக்கியை அக்கட்சியின் மலாய் விவகாரப் பிரிவின் தலைவராக புதன்கிழமை (ஜூலை 22) நியமித்தது. இதற்கு முன்பு அப்பதவியை வகித்த இணைப் பேராசிரியர் ஃபைஷால் இப்ராஹிமின் பொறுப்பை திரு ஸாக்கி ஏற்கிறார்.
நடத்தை தொடர்பில் இணைப் பேராசிரியர் ஃபைஷால், மரீன் பரேட்-பிராடல் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் மசெகவிலிருந்தும் திங்கட்கிழமை (ஜூலை 20) பதவி விலகினார்.
சென்ற ஆண்டு நடந்துமுடிந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு இணைப் பேராசிரியர் ஃபைஷால் மசெக மத்திய செயற்குழுவுக்குத் தேர்வுசெய்யப்பட்டார். இப்போது திரு ஸாக்கியின் தெரிவைத் தொடர்ந்து மசெக மத்திய செயற்குழுவில் 18 உறுப்பினர்கள் இடம்பெறுவர்.
இணையத்தில் ஒரு பெண்ணுடனான உரையாடலின்போது சரிவர நடந்துகொள்ளாததால் உள்துறை மூத்த துணை அமைச்சராகவும் பொறுப்பு வகித்த இணைப் பேராசரியர் ஃபைஷால் அரசியலிலிருந்து விலகிக்கொண்டார்.
இணைப் பேராசிரியர் ஃபைஷாலும் சம்பந்தப்பட்ட பெண்ணும் தங்களுக்குத் தொந்தரவு இழைக்கப்பட்டதாக ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டினர். அதனைத் தொடர்ந்து அந்த விவகாரம் விசாரணைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

