சாதாரணமானதொரு மூன்றரை வீவக வீட்டில் திரு யூசுஃப் காசிம் (படம்) குடும்பத்துடன் கூடைகளில் உள்ள இரு மலைப்பாம்புகளும் வசிக்கின்றன. 'சார்லி', 'மிஸ்டர் பீன்' என்று திரு யூசுஃபால் அழைக்கப்படும் இவ்விரு பாம்புகளும், அவருடன் ஏறக்குறைய இருபது ஆண்டுகளாகப் பயணித்துள்ளன. சிங்கப்பூரின் கடைசிப் பாம்பாட்டியாக திகழும் திரு யூசுஃப், தம் வாழ்நாளை இத்தொழிலுக்காக அர்ப்பணித்துள்ளார்.
சமூக நிகழ்வுகளின் கேளிக்கை அங்கங்களிலும் செந்தோசா பகுதியிலும் யூசுஃபையும் அவரது பாம்புகளையும் வழக்கமாக காணலாம். கடந்த இருபது ஆண்டுகளாய் செந்தோசாவில் முழுநேரமாகப் பணியாற்றி வருகிறார் அவர்.
கொள்ளுத் தாத்தாவின் காலத்திலிருந்தே தம் குடும்பத்தினர் பாம்பாட்டித் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக பகிர்ந்துகொண்டார் திரு யூசுஃப். பிரிட்டிஷ் காலத்தில் அவரின் தாத்தாவும் 1950களில் அவரின் தந்தையும் இத்தொழிலைச் செய்துவந்தனர். 1970களில், ஐந்து வயதிலிருந்து தந்தை திரு காசிமுக்குத் துணையாக பாம்பாட்டும் நிகழ்ச்சிகளுக்குச் சென்று வந்தார் யூசுஃப்.
ராஜ நாகம் முதலிய ஆபத்தான பாம்புகளுடனே வளர்ந்த யூசுஃப், அப்பாவின் திடீர் மறைவுக்குப் பின்னர் பதினைந்து வயதில் குடும்பத் தொழிலில் முறையாகக் காலெடுத்து வைத்தார். பிழைப்புக்காக இத்தொழிலுக்கு வந்திருந்தாலும் தமக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள அவர் உழைத்தார். தாத்தாவின் தம்பி, மாமா என தம் குடும்பத்தில் பாம்பாட்டிகளாக இருந்தோரிடமிருந்து உடுக்கை, புல்லாங்குழல், மகுடி ஆகியவற்றை வாசிக்கக் கற்றுக்கொண்டார். நஞ்சுடைய, நஞ்சில்லாத பாம்புகளைக் கையாளும் முறையானது அவரது பதின்ம வயதுக்குள் கைவந்த கலையாகிவிட்டது.
அவருடைய அப்பா காலத்தில், பாம்புகளைக் கையைக் கடிக்கவிட்டு, தைலத்தைத் தடவி, பின் தைலத்தை மக்களிடம் விற்கும் வழக்கம் இருந்தது. அவ்விற்பனைகள் அவர்களது வருமானமாகவும் இருந்தது. காலப்போக்கில், அத்தகைய தொழில்முறை சாத்தியப்படாது என்பதை யூசுஃப் உணர்ந்தார்.
"மக்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாயவித்தைகள் காட்டுவது, நகைச்சுவையுடன் படைப்பது, பாம்புடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள மக்களுக்கு வாய்ப்பளிப்பது போன்றவற்றைச் செய்து நிகழ்ச்சிகளைப் படைக்கத் தொடங்கினேன்," என்றார் 60 வயது யூசுஃப்.
தொடர்ந்து விடாப்பிடியாக பாம்பாட்டித் தொழிலில் உள்ள திரு யூசுஃபை, அவரின் பிள்ளைகள் கண்டிப்பதுண்டு. உடலை, மனதை வருத்திக்கொண்டு யூசுஃப் வேலைக்குச் செல்லும்போது கவலை தெரிவிக்கும் பிள்ளைகள், தனது தொழிலைப் புரிந்துகொண்டது ஒரு வரம் என அவர் கூறினார்.
பாம்பாட்டித் தொழில் என்பதை ஒரு கலையாகக் கருதாமல் இழிவாகவும், தீங்காகவும் பார்க்கும் ஏராளமானோரை யூசுஃப் கடந்து வந்துள்ளார்.
முற்காலத்தில் பாம்பாட்டிகளுக்குக் கிடைத்த மரியாதையும் வரவேற்பும் தற்போது குறைந்துள்ளதில் வருத்தம் கொள்கிறார் அவர். இக்கலைக்கு வருங்காலமே இல்லை என்பதையும் கூறி நெகிழ்ந்தார்.
"என்னை நம்பி என் மனைவியும் பிள்ளைகளும் இருக்கிறார்களா என்றால், இல்லை. இந்த கடைசிப் பாம்பாட்டியை நம்பி சிங்கப்பூர் மக்கள் அனைவரும் உள்ளனர் என சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். ஆனால், இந்த கலையைக் கற்றுக்கொள்ள யாரேனும் முன்வருவார்களா என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை," என்றார் அவர்.
சிங்கப்பூரைத் தவிர்த்து, மலேசியா, தாய்லாந்து, இந்தோனீசியா ஆகிய நாடுகளிலும் திரு யூசுஃப் நிகழ்ச்சிகள் படைத்துள்ளார். தனது காலம் முடியும் வரை பாம்பாட்டித் தொழிலில் இருக்க உறுதி பூண்டுள்ளார் திரு யூசுஃப்.

