'திருவள்ளுவரே என்னிடம் பேசுவதுபோல் இருக்கும்'

'திருவள்ளுவரே என்னிடம் பேசுவதுபோல் இருக்கும்'

2 mins read

மூதா­தை­யர்­கள் மொழி, கலா­சா­ரம் வழி­யாக தங்­க­ளுக்­குப் பின் வரும் தலை­மு­றை­யி­ன­ரு­டன் உரை­யாடி வரு­கின்­ற­னர் எனக் கரு­து­வ­தா­கக் கூறு­கி­றார் திரு விக்­னேஷ் சுந்­த­ரே­சன், 32 (படம்).

அண்­மை­யில் $69 மில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் (S$93 மில்­லி­யன்) மதிப்­பு­டைய மின்­னி­லக்க நாண­யம் கொண்டு, உல­கி­லேயே ஆக விலை உயர்ந்த ஒரு மின்­னி­லக்­கக் கலைப்­ப­டைப்பை வாங்கி உல­கையே தம்­பக்­கம் திரும்­பிப் பார்க்க வைத்த சிங்­கப்­பூர் தொழில்­மு­னை­வர் இவர்.

"திருக்­கு­ற­ளைத் தமி­ழில் படித்­தால் திரு­வள்­ளு­வரே என்­னி­டம் பேசு­வ­து­போல இருக்­கும். தமிழ் மொழியை இழந்­து­விட்­டால் திரு­வள்­ளு­வர் எப்­படி என்­னி­டம் பேசு­வார்? மொழி­பெ­யர்த்­துச் சொல்­லும்­போது அது மொழி­பெ­யர்த்­த­வரின் கருத்­தா­கி­வி­டும், திரு­வள்­ளு­வ­ரின் கருத்­தாக இராது.

"ஒரு மொழியை இழக்­கும்­போது மூதா­தை­ய­ரு­டன் பேசும் வாய்ப்பை இழக்­கி­றோம். அந்த இழப்பு எனக்கு ஒரு பொரு­ளி­யல் பிரச்­சி­னை­யா­கத் தெரி­கிறது," என்று திரு விக்­னே‌ஷ் சொன்னார்.

தமி­ழுக்கு ஒரு பொரு­ளி­யல் தேவை இல்லை என்­றால் அது அழிய நேரி­டும் என்று குறிப்­பிட்ட திரு விக்­னே‌ஷ், மெய்­நி­கர் உல­கில் தமி­ழுக்­கென ஒரு நினை­வுச்­சின்­னத்தை உரு­வாக்­கத் திட்­ட­மிட்டு வரு­வ­தா­கக் குறிப்­பிட்­டார்.

மெய்­நி­கர் நிலத்தில் ஒன்­பது நினை­வுச்­ சின்­னங்­களை எழுப்­பிய பின்­னர் பத்­தா­வ­தா­கத் தமிழ் மொழிக்­கும் ஒரு நினை­வுச் சின்­னத்­தைக் கட்­டி­யெ­ழுப்­ப­வுள்­ளார் இவர்.

2013ஆம் ஆண்­டில் இருந்து மின்­னி­லக்க நாணய வர்த்­த­கத்­தில் ஈடு­பட்டு வரும் திரு விக்­னே‌ஷ், முத­லீடு செய்­வ­தைத் தவிர்த்து மெய்­நி­கர் உல­கில் நிலச்­சொத்­து­களை­யும் வாங்கி வைத்­துள்ளார்.

"வெளி­யி­லி­ருந்து பார்க்­கும்­போது மின்­னி­லக்க நாண­யம் ஏதோ ஒரு முத­லீடு தொடர்பான வி‌ஷ­ய­மாகத்தான் தெரி­யும். ஆனால், அதை­யும் தாண்டி ஒரு சமூ­கத்­தையே உரு­வாக்­கும் தன்மை அதற்கு உண்டு. ஒரு கோவிலைக் கட்­டு­வது பொருளீட்டுவதற்கு அல்ல, அமைதியைத் தேடு­வ­தற்கு. அதைப் போன்ற ஓர் இட­மாக மெய்­நி­கர் உல­கத்­தைப் பார்க்­கி­றேன். அமெ­ரிக்­கா­வில் வசிக்கும் ஒரு 12 வயதுப் பையன் இந்­தி­யா­வில் வாழும் ஒரு­வரை இந்த மெய்­நி­கர் உல­கத்­தில் சந்­திக்­க­லாம், தமிழ் கற்­க­லாம்," என்கிறார் இவர்.

தமிழ்­நாட்­டைச் சேர்ந்த விக்­னே‌ஷ் 2017ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூ­ரில் குடி­யே­றி­னார். 'போர்ட்கீ டெக்­னா­ல­ஜிஸ்' (Portkey Technolo gies) என்ற நிறு­வ­னத்தை தம் கூட்­டாளி திரு ஆனந்த் வெங்­க­டேஸ்­வ­ர­னு­டன் இவர் தொடங்கினார். பல்வேறு தக­வல் தொழில்­நுட்ப சேவை­களை வழங்­கு­வ­து­டன் மின்னிலக்க நாண­யம், மின்­னி­லக்கக் கலை ஆகிய துறை­களிலும் அந்­நி­று­வ­னம் ஈடு­ப­டு­கிறது.

"தமிழ்­நாட்­டில் மின்­னி­லக்க நாண­யம் குறித்து எதிர்ப்பு வந்­த தால் வேறொரு நாட்­டிற்குச் செல்ல முடிவு செய்­தேன். காலை­யில் எழுந்­தால் எனக்கு இட்லி சாப்பிட வேண்டும். அத­னால் தமி­ழர்­கள் வாழும் சிங்­கப்­பூ­ருக்கு வர முடிவு­செய்தேன்," என்­றார் இவர்.

தமிழ்மொழி தொடர்ந்து நிலைத்­தி­ருக்க மெய்­நி­கர் உல­கம் வழி­வகுக்­கும் என்று திரு விக்­னே‌ஷ் நம்­பிக்கை கொண்­டுள்­ளார்.

"ஃபேஸ்புக், டுவிட்­டர் போன்ற சமூக ஊட­கங்­க­ள் வந்தபோது, அதையெல்­லாம் பயன்­ப­டுத்­தக்­கூடாது என்று மக்­கள் சொன்ன காலம் நினைவில் உள்­ளது.

"கைபே­சியைக் கண்­டு­பி­டித்­த­வரே இணை­யம் வரும் என்று எதிர்­பார்க்­க­வில்லை. அப்­ப­டியே மாறி­விட்­டது. மின்­னி­லக்க நாண­யத்­திற்­கும் எதிர்­கா­லம் உள்­ளது என்று நம்­பு­கி­றேன்," என்­றார் திரு விக்­னே‌ஷ்.