உலகளவில் தன்னைப்பேணித்தனம் அதிகரித்து வருகிறது. பல நாடுகள் தங்களது பொருளியலில் மட்டுமே ஒருமித்த கவனம் செலுத்துகின்றன. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பொருளியல்களை ஈர்க்க பல நாடுகளும் போட்டிபோட்டுச் செயல்படுகின்றன.
அதேநேரத்தில் சிங்கப்பூரில் மக்கள் தொகை பிரச்சினை தற்காலத்தில் பெரும் பிரச்சினையாக உள்ளது. வீடு வாங்கி குடும்பம் அமைக்கவும், பிள்ளைகளைப் பெற்று வளர்க்கவும் இளம் தம்பதியருக்கும் உதவி தேவைப்படுகிறது.
இத்தகைய சூழலில் சிங்கப்பூர் தொடர்ந்து வெற்றிபெற்று முன்னணியில் நிற்க வேண்டும் என்றால் நாடு, மக்கள் இரு தரப்பிலும் உற்பத்தித்திறனும் போட்டித்திறனும் அதிகரிக்க வேண்டும்.
இதற்கு எல்லாவற்றுக்கும் உதவியாக, உறுதுணையாக ஆதரவளித்து, பக்கபலமாக இருந்து, அதேநேரத்தில் எதிர்காலக் கண்ணோட்டத்தையும் கருத்தில்கொண்டு இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தை துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் தீட்டியுள்ளார்.
முதல் முறை வீடு வாங்குவோர், சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான ஆதரவுகள் இங்கே அலசப்படுகின்றன.
கடந்த மாத இறுதியில் திருமணமான விஷ்ணு - பவானி தம்பதியர் கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே வீடு வாங்கும் திட்டத்தில் இருந்தனர் (படம்).
தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரியும் விஷ்ணுவும் நிதித் துறையில் பணிபுரியும் பவானியும் திருமண ஏற்பாடுகளை முன்னிட்டு இடையில் வீடு வாங்கும் திட்டத்தைத் தள்ளிப் போட்டிருந்தனர்.
மாதத்திற்கு இருவரும் இணைந்து ஏறத்தாழ 9,000 வெள்ளி வருமானம் ஈட்டும் சூழலில் முதல் முறை வீடு வாங்குவோருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தனர.
இவ்வாண்டு இறுதிக்குள் செங்காங் பகுதியில் நான்கு அல்லது ஐந்தறை மறுவிற்பனை வீவக வீடு வாங்க இத்தம்பதி திட்டமிட்டுள்ளது.
மொத்தமாக 600,000 வெள்ளி தொகைக்குள் வீடு வாங்க இலக்குக் கொண்டுள்ள இவர்கள், தங்களுடைய சேமிப்புடன் வங்கிக் கடன் பெற்று இத்தொகையைச் செலுத்தவுள்ளனர்.
வீட்டு விலை மிகவும் அதிகரித்துள்ள நிலையில், கூடுதலாக கிடைக்கப்பெறும் மறுவிற்பனை வீட்டு மானியம் பெரிதும் உதவியாக என்றும் கூறினர்.
அதேநேரத்தில் குழந்தை போனஸ் அதிகரிப்பு, தந்தைக்கான விடுப்பு அதிகரிப்பு போன்றவையும் தங்களைப் போன்ற இளம் தம்பதியருக்கு நற்செய்தி கள் என்று இவர்கள் கூறினர்.
குழந்தைகளைப் பெற ஊக்குவிக்கும் வகையில் முதல் முறை வீடு வாங்குவோருக்கு வீட்டு மானியங்களும் அதிகமான குழந்தை போனஸ், தந்தையருக்கான விடுப்பும் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதல் இரண்டு குழந்தைகளுக்கு தலா $8,000லிருந்து $11,000க்கு உயர்த்தப்பட்டுள்ளது. மூன்றாவது குழந்தையிலிருந்து $10,000 இருந்த தொகை இனி $13,000 ஆக வழங்கப்படும்.
பிள்ளை மேம்பாட்டுக் கணக்கிற்கான அரசாங்கப் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தந்தைக்கான விடுப்பு தற்போது அரசாங்கம் வழங்கும் இரண்டு வாரம் இரட்டிப்பாகி நான்கு வாரங்களாக அதிகரிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது.
முதல் முறை வீடு வாங்கப்போகும் புதுமணத் தம்பதி:
இவர்களைப்போல் முதல் முறையாக வீடு வாங்கத் திட்டமிடும் விஷ்ணு-பவானி தம்பதியருக்குக் கிடைக்கவுள்ள அனுகூலங்கள்:
1. தற்போது, பிடிஓ விநியோகத்தின் பெரும்பகுதி, முதல் முறை வீடு வாங்கும் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
2. முதல் முறையாக நான்கறை அல்லது அதற்கும் குறைவான அறைகள் உள்ள மறுவிற்பனை வீட்டை வாங்க மத்திய சேமநிதி வீட்டு மானியத் தொகை 50,000 வெள்ளியிலிருந்து 80,000 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஐந்தறை அல்லது அதற்கும் மேற்பட்ட அறைகள் உள்ள வீடுகள் வாங்க மத்திய சேமநிதி வீட்டு மானியத் தொகை 40,000 வெள்ளியிலிருந்து 50,000 வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளது.
3. நெருக்கத்தை ஊக்குவிக்கும் வீட்டு மானியத்தின்கீழ், அதாவது பெற்றோர் வீட்டுக்கு அருகே வாங்கினால் $30,000 தொகையைப் பெறலாம்.

