வெளிநாட்டு ஊழியரான திரு வெங்கடேசன் அன்று நண்பர்களைச் சந்தித்து உணவுண்டு, உரையாடிவிட்டு இருப்பிடத்துக்குக் கிளம்பினார். கிளைவ் ஸ்திரீட்டிலிருந்து பேருந்து நிறுத்தத்துக்கு நடந்துகொண்டிருந்த அவருக்கு அவசரமாகக் கழிவறைக்குச் செல்லவேண்டியிருந்தது. அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அருகில் பொதுக்கழிவறை இல்லை. பக்கத்திலிருந்த உணவக கழிவறையைப் பயன்படுத்தவும் சற்றுப் பயமாக இருந்தது. அவர் பேருந்தையும் பிடிக்க வேண்டும். அவருக்கு வேறு வழி தெரியவில்லை. ஒதுக்குப்புறத்தில் சிறுநீர் கழித்தார்.
கூட்டம் அதிகமாக இருக்கும் விடுமுறை நாள்களிலும் விழாக்காலங்களிலும் லிட்டில் இந்தியா வட்டாரம் எதிர்நோக்கும் முக்கியப் பிரச்சினை இது.
“தேக்கா நிலையத்தின் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தின் ஓர் ஓரம் பொதுக் கழிவறைபோல் ஆகிவிட்டது. இன்றும் அங்கு சிலர் சிறுநீர் கழிக்கின்றனர். அப்பக்கமாக நடக்க முடியாது. சிறுநீர் நாற்றம் குடலைப் புரட்டும்,” என்று பஃப்ளோ சாலை அடுக்குமாடி வீட்டில் வசிக்கும் திரு யூசுப் ரஜித்தைப் போல் அந்தப் பகுதியின் குடியிருப்பாளர்கள் பலரும் குறைபட்டனர்.
கிளேங் லேன், ரோவல் சாலைக் குடியிருப்புகளின் சுற்றத்திலும் இப்பிரச்சினை இருப்பதாகக் குடியிருப்பாளர்கள் கூறினர்.
இது வெளிநாட்டு ஊழியர்களுக்கான பிரச்சினை மட்டுமல்ல. லிட்டில் இந்தியாவுக்குச் செல்லும் எல்லாத்தரப்பு மக்களும் இப்பிரச்சினையை எதிர்கொள்கின்றனர்.
“ரயில் நிலையம், பேரங்காடிகளிலிருந்து சற்று தூரம் வந்துவிட்டால் பொதுக் கழிவறைகளே இல்லாமல் சிரமமாக உள்ளது.” என்றார் வாடிக்கையாளர் உமா. அவரைப் போல், கூடுதல் கழிவறைகள் லிட்டில் இந்தியாவில் தேவையென பல பெண்களும் கருதுகின்றனர். முக்கியமாக, குழந்தைகளுக்கு டைபர் மாற்ற, லிட்டில் இந்தியா ஆர்கெட் கழிவறை, சில உணவகங்களில் மட்டுமே வசதியுள்ளது. சிறு குழந்தைகளுடன் லிட்டில் இந்தியா சென்றால் பெரும் சிரமம் என பலர் கூறினர்.
குடைக் கேண்டீன், தேக்கா நிலையம், தேக்கா பிளேஸ், லிட்டில் இந்தியா ஆர்கேட், லிட்டில் இந்தியா - ஃபேரர் பார்க் பெருவிரைவு ரயில் நிலையங்கள், பெர்செ உணவு நிலையம், சிட்டி ஸ்குவேர் மால் முதலான இடங்களில் பொதுக் கழிவறைகள் உள்ளன. வாடிக்கையாளர்களுக்காக பெரும்பாலான உணவுக் கடைகளிலும் கழிவறைகள் உள்ளன.
எனினும், கூட்டம் அதிகமாக இருக்கும் நாள்களில் கழிவறை ஒரு பிரச்சினையாகவே உள்ளது. குடைக் கேண்டீன், லெம்பு சாலை, கிளைவ் ஸ்திரீட் கழிவறைகளின் முன் நிற்கும் நீண்ட வரிசைகளே அதற்குச் சான்று.
தொடர்புடைய செய்திகள்
கூடுதல் கழிவறைகள்
ஞாயிற்றுக்கிழமைகளிலும் பொது விடுமுறை நாள்களிலும் லிட்டில் இந்தியாவில் வெளிநாட்டு ஊழியர்களின் வருகையினால் அதிகரிக்கும் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு, தேசிய சுற்றுப்புற வாரியம் (என்இஏ) 2009 முதல் அந்த வட்டாரத்தின் பல பகுதிகளிலும் நகர்த்தக்கூடிய (portable) கழிவறைகளை வைத்து வருகிறது.
இவ்வாண்டு அக்டோபர் மாதம் பிற்பாதி வரை தேக்கா சந்து, சிட்டி சாலை, லெம்பு சாலை ஆகிய இடங்களில் மொத்தம் 21 நகர்த்தக்கூடிய கழிவறைகள் காணப்பட்டன. அவை வெள்ளிக்கிழமை மாலைகளில் திறக்கப்பட்டு, திங்கள்கிழமை நண்பகலுக்குள் பூட்டப்படும்.
எனினும், ஞாயிற்றுக்கிழமை கூட்டத்திற்கு லிட்டில் இந்தியாவில் போதிய பொதுக் கழிவறைகள் இல்லையென 160 பேரில் 70 விழுக்காட்டினர் தமிழ் முரசின் கருத்துக் கணிப்பில் கூறியிருந்தனர்.
இதுகுறித்து கருத்துரைத்த தேசிய சுற்றுப்புற வாரியம், லிட்டில் இந்தியாவில் உள்ள நகர்த்தக்கூடிய கழிவறைகளின் எண்ணிக்கையை 50 விழுக்காட்டுக்கும் மேல் அதிகரிக்கும் திட்டம் இருப்பதாகக் கூறியது. அதிக ஆள் நடமாட்டமுள்ள இடங்களில் அவற்றை வைக்கப்போவதாகவும் வாரியம் தமிழ் முரசிடம் தெரிவித்தது.
“கழிவறைகளின் பயன்பாட்டை நிர்வகித்து, தேவைப்பட்டால் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்போம்,” என்றும் வாரியம் கூறியது.
தேக்கா சந்தின் அருகில் கூடுதலாக இரு நகர்த்தக்கூடிய கழிவறைகளை அண்மையில் வாரியம் சேர்த்துள்ளது.
“லிட்டில் இந்தியாவில் சாதாரண நாள்களில் போதுமான அளவு கழிவறைகள் உள்ளன. எனினும், ஞாயிறுகளில் கூடும் வெளிநாட்டு ஊழியர்கள் பயன்படுத்துவதற்குப் போதிய அளவில் இல்லை,” என்றார் ‘லிஷா’ எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கத்தின் மூத்த ஆலோசகர் ராஜ்குமார் சந்திரா.
இதே கருத்தை முன்வைத்த உலகக் கழிவறை அமைப்பு, சிங்கப்பூர் கழிவறைச் சங்கத்தின் நிறுவனர் திரு ஜேக் சிம், ஞாயிற்றுக்கிழமைகளில், விழாக்காலங்களில் லிட்டில் இந்தியாவில் கூடுதல் கழிவறைகள் தேவை என்றார். கழிவறை அமைக்க வேண்டிய இடங்களையும் அவர் பரிந்துரைத்தார்.
எங்கெல்லாம் பற்றாக்குறை?
கிளேங் லேன், சந்தர் சாலை, இந்து சாலை போன்றவற்றின் சுற்றத்தில் கழிவறைப் பற்றாக்குறை இருப்பதாகத் தமிழ் முரசு கருத்துக் கணிப்புத் தெரியப்படுத்தியது.
“பொதுக் கழிவறைக்குச் செல்ல வெகுதூரம் நடக்க வேண்டியுள்ளது,” என்றனர் கிளேங் லேனுக்கு ஞாயிறுகளில் வரும் வெளிநாட்டு ஊழியர்கள்.
சந்தர் சாலையில் இருக்கும் குடைக் கேண்டீனுக்கு அதிகமானோர் வருகின்றனர். அங்குள்ள கழிவறையும் போதுமானதாக இல்லை என்று பலரும் தெரிவித்தனர். மேலும், இரவு 9.15 மணியளவில் அக்கழிவறைகள் மூடப்பட்டு விடுவதால் இரவு 10.30 மணியளவிலும் குடைக் கேண்டீனில் அமர்ந்து உணவு உண்போர் கழிவறையைப் பயன்படுத்த லிட்டில் இந்தியா பெருவிரைவு ரயில் நிலையத்துக்கோ தேக்கா நிலையத்துக்கோ செல்ல வேண்டும்.
“பஃபளோ சாலை, கின்டா சாலை, பொலி@கிளைவ் ஸ்திரீட் போன்ற இடங்களிலும் நிறைய வெளிநாட்டு ஊழியர்கள் கூடுகின்றனர்; உணவு உண்கின்றனர். அங்கு நிச்சயம் கூடுதல் கழிவறைகள் தேவை,” என்றார் லிஷா கெளரவச் செயலாளர் ருத்ரா கண்ணன்.
லிட்டில் இந்தியாவெங்கும் உணவகங்களில் கழிவறைகள் இருந்தாலும், அவை வாடிக்கையாளர்களுக்கானவை.
அளவுக்கதிக பயன்பாடு - விரைவில் அசுத்தமாகும் கழிவறைகள்
“உள்ளே சென்றாலே நாற்றத்தினால் குமட்டல் வருகிறது,” என நகர்த்தக்கூடிய கழிவறைகள் குறித்து கூறினார் லிட்டில் இந்தியாவிற்கு அடிக்கடி செல்லும் வெளிநாட்டு ஊழியர் ஃபிலிப்.
கழிவறைகளில் தண்ணீர்க் குழாய்க்குப் பதிலாக டிசுத்தாளே இருப்பதால், அவற்றைப் பயன்படுத்துவது கடினமாக இருப்பதாகவும் சிலர் கூறினர்.
டிசுத்தாள், மதுபானங்கள், புகையிலை ‘பேக்கெட்டுகள்’, என நகர்த்தக்கூடிய கழிவறைகளில் குப்பை நிரம்பி வழிவதும் வழக்கமானது.
“சாதாரண நாளில் நான்கைந்து முறை சுத்தம் செய்தால் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்ய வேண்டும்,” என்றார் திரு ஜேக் சிம்.
தமிழ் முரசு அறிந்தவரையில் வார இறுதிகளில் ஒரு முறையாவது பிற்பகலில் அவை சுத்தம் செய்யப்படுகின்றன. ஆனால், சுத்தம் செய்த சில மணி நேரங்களிலேயே கழிவறைகள் அசுத்தமாகி விடுகின்றன.
“கழிவறைகள் தூய்மையாக இருப்பது முக்கியம். வெள்ளி, சனி, ஞாயிறுகளில் சுத்தம் செய்ய கூடுதலானோர் இருந்தால் நன்றாக இருக்கும்.” என்றார் திரு ருத்ரா.
கூடுதல் துப்புரவு இருந்தால், கழிவறையை இலவசமாக வழங்கமுடியுமா என்பது ஒரு கேள்விக்குறி. தற்போது நகர்த்தகூடிய கழிவறைகளை இலவசமாகப் பயன்படுத்தலாம். இரு மணி நேரத்திற்கு ஒரு முறை சுத்தப்படுத்தப்படும் தேக்கா நிலையக் கழிவறைகளின் துப்புரவுச் செலவுகளுக்காக, பயன்படுத்துவோரிடமிருந்து $0.20 கட்டணம் வசூலிப்பதாகக் கூறியது அவற்றை நிர்வகிக்கும் தஞ்சோங் பகார் நகர மன்றம்.
தேக்கா நிலையம், லிட்டில் இந்தியா எம்ஆர்டி கழிவறைகள் மேம்பாடு
தேக்கா நிலையக் கழிவறைகளில் கூடுதல் துப்புரவுப் பணிகளால், அதிக ஆள் நடமாட்டம் இருப்பினும் அக்கழிவறைகள் தற்போது சுத்தமாக உள்ளன.
லிட்டில் இந்தியா பெருவிரைவு ரயில் நிலையத்தின் (வடகிழக்கு ரயில் சேவை) கழிவறையும் அக்டோபர் மாதப் புதுப்பிப்புப் பணிகளுக்குப் பின் சுத்தமடைந்துள்ளது.
“கூடுதல் பொதுக் கழிவறைகள் வைத்தால் பொது இடங்களில் சிறுநீர்க் கழிக்கும் பிரச்சினை மேம்பட வாய்ப்புள்ளது.” எனச் சில குடியிருப்பாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
“விடுமுறை நாள்களில் மது அருந்துவோர் சற்று அதிகம் என்பதால் கழிவறைக்குச் செல்ல வேண்டிய தேவையும் அதிகமாக இருக்கும்.மேலும், கூட்டம் அதிகமாக இருக்கும்போது உணவகக் கழிவறைகளுக்கும் வரிசை நீண்டு இருக்கும். அப்போது அவசரத்திற்கு ஒதுக்குப்புறத்தில் கழிக்கின்றனர்,” என்றார் லிட்டில் இந்தியாவிற்கு ஞாயிறுகளில் வரும் திரு சிவனாண்டி.
கடைகளுக்கும் சிரமம்
கம்போங் கபூர் சாலை, கிளைவ் ஸ்திரீட், பேராக் சாலை ஓரமாக இருக்கும் காப்பிக் கடைகளும் உணவகங்களும், தம் கழிவறைகளைப் பயன்படுத்தப் பொதுமக்களை அனுமதித்தாலும், இதனால் தம் கழிவறைகள் அடிக்கடி சேதமடைவதாக அங்கு பணியாற்றுவோர் கூறுகின்றனர்.
லிட்டில் இந்தியாவில் கழிவறைப் பிரச்சினைக்கு முடிவு காலம் வரும் என அப்பகுதியின் வணிகர்கள், வாடிக்கையாளர்கள், குடியிருப்பாளர்கள் அங்கு வரும் மக்கள் என அனைவருமே ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கழிவறைகளின் எண்ணிக்கை உயர்வது ஒருபுறம், அவற்றைத் தூய்மையாக வைத்திருப்பதும் முக்கியம். இப்பொறுப்பு கழிவறைகளைப் பயன்படுத்துவோர், பராமரிப்போர் இருதரப்பினரையும் சாரும் என தேசிய சுற்றுப்புற வாரியம், பொதுச் சுகாதார மன்றம் இணைந்து வழங்கும் ‘தூய்மையான பொதுக் கழிப்பறைகள் இயக்கம் 2024’ வலியுறுத்துகிறது.