ஏர் இந்தியா விமானம் ஏஐ-171 விழுந்து 260 பேர் உயிரிழந்த துயர சம்பவத்தை விமானத் துறையில் நிகழ்ந்த ஒரு பேரிடராக மட்டும் பார்க்க முடியாது.
உடனடி பதில்கள், உறுதியான பொறுப்பேற்பு, ஆழ்ந்த சிந்தனை ஆகியவற்றைக் கோருவதற்கான முக்கியக் காலகட்டம் இதுவே.
அவ்விமான விபத்து தொடர்பில் ஒட்டுமொத்த விமானத்துறையும் நிகழ்ந்தது குறித்து வெளிப்படையான விளக்கங்களைத் தரவேண்டியுள்ளது.
இந்தியாவின் விமான விபத்து ஆய்வுச் செயலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, நிலத்திலிருந்து புறப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு எரிபொருளை இயந்திரத்துக்குள் செலுத்தும் செயல்முறையுடன் தொடர்புடைய நிலைமாற்றிகள் (fuel cutoff switches) தொடர்பில் குழப்பம் ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தரையிலிருந்து பறப்பதற்குமுன், ‘ரன்’ (run) நிலையில் இருந்த விசை, கட் ஆஃப் (cutoff) என்ற நிலைக்குத் திடீரென மாற்றப்பட்டது.
விமானம் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு எரிபொருள் இயந்திரத்திற்குச் செல்வதை நிறுத்தியதற்கு என்ன காரணம் என்று ஒரு விமானி மற்றொருவரைக் கேட்டது பதிவாகியிருக்கிறது. தான் அவ்வாறு செய்யவில்லை என்று மற்றொரு விமானி பதிலளித்ததாக அறிக்கை தெரிவித்துள்ளது.
எரிபொருள் விசைகள் எப்படி மாற்றப்பட்டன என்பதற்குத் தற்போது தெளிவான விளக்கங்கள் இல்லை. அந்த விசைகளைப் பாதுகாப்பதற்கான சிறிய தடுப்புகள் இருப்பதால் விமானிகள் அவற்றைக் கவனக்குறைவாக மாற்ற முடியாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
விமானம் தரையிலிருந்து வானில் பறக்கும் நேரத்தில், விமானிகள் யாரும் எந்தக் காரணமும் இன்றி விசைகளைக் கொண்டு எரிபொருளை நிறுத்தமாட்டார்கள்.
தொடர்புடைய செய்திகள்
எரிபொருள் விசை உடனே மீண்டும் இயக்கப்பட்டபோதும் அதற்குள் காலம் கடந்துவிட்டது.
எல்லாப் பாதுகாப்பு, பராமரிப்புத் தரநிலைகளையும் அந்த விமானம் எட்டியிருந்ததாக அறிக்கை குறிப்பிட்டது.
ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் நிலைமை மோசமானதால் விமானிகள் எந்த நடவடிக்கையை எடுப்பதற்கும் கால அவகாசம் இல்லாமல் போனது.
அறிக்கை வெளிவந்த பிறகு, சிங்கப்பூர் ஏர்லைன்சும் அதன் மலிவுக் கட்டணப் பிரிவான ஸ்கூட்டும் முன்னெச்சரிக்கையாக தம்வசமுள்ள போயிங்-787 விமானங்களைச் சோதித்தன.
இந்த உடனடி நடவடிக்கை, பயணிகளுக்கு மன ஆறுதல் அளித்தாலும் இந்தச் சம்பவம் தொடர்பான உலகளாவிய கவலையையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.
பல்லாண்டுகளாக மந்தநிலையில் தேங்கி, மிக அண்மையில்தான் ஏற்றம் காணத் தொடங்கிய ஏர் இந்தியாவுக்கு இந்தத் துயரச் சம்பவம் பெருத்த பின்னடைவு.
டாடா குழுமத்தின் நிர்வாகத்திலுள்ள ஏர் இந்தியாவில் 25.1 விழுக்காட்டுப் பங்குதாரரான சிங்கப்பூர் ஏர்லைன்சின் பங்கு விலையும் ஏறத்தாழ 2 விழுக்காடு குறைந்தது.
ஆனால், இது வர்த்தக உலகப் பேரிடர் இல்லை, மனிதப் பேரிடர். இந்திய விமானத்துறையின் நம்பகத்தன்மையைக் கேள்வியெழுப்புகிறது இந்தக் கொடுந்துயர்.
‘ஐஓஎஸ்ஏ’ பாதுகாப்புச் சான்றிதழைப் பெற்றது, செயல்முறைகளை மேம்படுத்தியது என்று ஏர் இந்தியா அண்மையில் பல மேம்பாடுகளைச் செய்துள்ளபோதும், இப்போதுதான் அது வளர்த்துவரும் நம்பிக்கையும் மதிப்பும் மீண்டும் சின்னபின்னமாயின.
விமானத்துறைக்கான இந்தியாவின் குறிக்கோள்கள் பரந்துபட்டவை. 1.4 பில்லியன் மக்கள்தொகையையும் வளர்ந்துவரும் நடுத்தர வருமானப் பிரிவினரையும் கொண்டுள்ள இந்தியா, உலகின் மூன்றாவது ஆகப் பெரிய விமானப் பயணச் சந்தையைக் கொண்டுள்ளது.
வேலை வளர்ச்சி, உள்கட்டமைப்பு வளர்ச்சி, அனைத்துலகச் செல்வாக்கு ஆகியவற்றை தனது விமானத்துறையின்வழி மேம்படுத்த அந்நாடு முனைகிறது.
நோக்கம் உயர்ந்ததுதான். என்றாலும், அதற்கான அடித்தளம் வலுவாக அமைய வேண்டியது மிக முக்கியம்.
எனவே, இந்தச் சம்பவத்திலிருந்து ஏர் இந்தியாவும் டாடாவும் மட்டுமன்றி, இந்தியாவின் ஒட்டுமொத்த விமானத்துறைக் கட்டமைப்பும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
பாதுகாப்பற்ற வளர்ச்சி என்பது, ஒருநாள் வீணே போகும் வீக்கம்தான் என்பதை இந்தச் சம்பவம் நமக்குப் பாடமாக அமையட்டும்.
உயரப் பறந்தாலும் தரையிறங்கியாக வேண்டும் என்ற சொல்லப்படாத வாக்குறுதியுடன் ஒவ்வொரு விமானமும் தரையிலிருந்து கிளம்புகிறது.
விழிப்பு, பொறுப்பு, விமானத்தின் ஒவ்வோர் உயிருக்குமான மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அந்த வாக்குறுதி காப்பாற்றப்படவேண்டும்.