சிங்கப்பூரில் உடற்குறையுள்ளோரிடம் மற்றவர்கள் நேர்மறை மனப்பான்மையுடன் நடந்துகொள்வது குறைந்திருக்கிறது. வேலையிடங்களில் இப்பிரிவினர் தொடர்பான நேர்மறை உணர்வுகளின் சரிவே இதற்கு முக்கியக் காரணம்.
உடற்குறையுள்ளோர் குறித்த நேர்மறை எண்ணம் கொண்டோர், 2023ஆம் ஆண்டு 68.9 விழுக்காட்டினராக இருந்தனர். ஆனால், 2019ல் பதிவான 76.8 விழுக்காட்டினரைக் காட்டிலும் இது சுமார் 8 விழுக்காடு குறைவு.
குறிப்பாக, வேலையிடத்தில் உடற்குறையுள்ளோர் பற்றிய நேர்மறை எண்ணம் 2019ல் 59.6 விழுக்காடாக இருந்து 2023ல் 50.6 விழுக்காடாகக் குறைந்ததென தேசிய சமூகச் சேவை மன்றம் (என்சிஎஸ்எஸ்) மேற்கொண்ட ஆய்வு கண்டறிந்துள்ளது.
சிங்கப்பூர் 2030ஆம் ஆண்டுக்குள் உடற்குறையுள்ளவர்களின் வேலைவாய்ப்பு விகிதத்தை 40 விழுக்காட்டுக்கு உயர்த்தும் இலக்கைக் கொண்டுள்ளது. இதன்படி, அந்த ஆண்டுக்குள் கூடுதலாக கிட்டத்தட்ட 4,500 உடற்குறையுள்ளோருக்கு வேலைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, உடற்குறை தொடர்பான எண்ணப்போக்கு பற்றி வெளியிட்ட ஆய்வறிக்கையில் என்சிஎஸ்எஸ் மேற்கொண்ட ஆய்வு குறித்து சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு டிசம்பர் 2ஆம் தேதி குறிப்பிட்டது.
உடற்குறையுள்ளோருடன் எந்த அளவுக்கு மக்கள் தொடர்பில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து உணர்வுகள் மாறுபடும் என்று அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
உடற்குறை உள்ளவர்களால் வர்த்தக நன்மை
உடற்குறையுள்ளோரை வேலையில் அமர்த்துவது, பொதுவாக ஒரு சமூகச் சேவையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், இது தவறான ஓர் எண்ணம் என்று ஹார்வர்ட் பிசினஸ் ரிவியூ சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது.
பல தொழில்துறைகளில் புத்தாக்கத்தைக் கையாளும் நிறுவனங்கள், உடற்குறையுள்ளோரை வேலையில் நியமித்துத் தங்களின் போட்டித்தன்மை ஆற்றலை வெளிப்படுத்தி வருகின்றன என்று அது சுட்டியது.
தொடர்புடைய செய்திகள்
உடற்குறையுள்ளோர் வேலை தேடுவதிலும் வாழ்க்கைத் தொழிலில் முன்னேற்றம் காண்பதிலும் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் முதலாளிகளிடமும் சமூகத்திடமும் இருந்து தங்களது எதிர்பார்ப்புகள் குறித்தும் மூவரிடம் தமிழ் முரசு பேசியது.
கை கால் இல்லை ஆனால் கையாளாகாதவர் இல்லை
உடற்குறையுள்ளோருக்கு வேலை தருவதை இரக்கச் செயலாக மட்டும் பார்க்கக்கூடாது.
தனிநபர்களாக அவர்களுக்கும் பேராற்றல் இருக்கலாம். அவர்களை ஒருங்கிணைக்கும் வேலையிடங்கள் நிலைத்தன்மையுடன் செயல்படலாம்; அவை செல்லும் வழியும் ஆக்ககரமாக இருக்கலாம்.
இவ்வாறு கைகளும் கால்களும் இல்லாத டி.ஜி. கேரல் அன், 47, முதலாளிகளுக்கு அறிவுறுத்த விரும்புகிறார்.
சேவைத்தர அதிகாரியாகப் பணியாற்றும் இவர், “நீங்களும் உங்கள் பணியாளர்களும் உடற்குறையுள்ளோருடன் வேலை செய்யும்போது உங்களுக்கு நிதானம் தானாகவே வரும். பரிவு காட்டி, இரக்கத்துடன் அவர்களிடம் நடந்துகொள்ள தோன்றும். ஒரு நிறுவனத்தின் ஊழியரணியை நிதானமுள்ளவர்களாகவும் புரிந்துணர்வு மிக்கவர்களாகவும் மாற்றும் வல்லமை உடற்குறையுள்ளோருக்கு உண்டு,” என்பது திருவாட்டி கேரலின் கருத்து.
இவர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தித்தான் எல்லா இடங்களுக்கும் செல்லவேண்டும்.
திருவாட்டி கேரலிடம் பேசுபவர்கள், அவரிடம் தென்படும் தன்னம்பிக்கையையும் நிர்வாக ஆளுமைத்திறனையும் கண்டு வியப்பதுண்டு. ஆனால், பல ஆண்டுகளாக நெறியுடன் உழைத்ததால் இவர் கட்டுக்கோப்பான, நன்கு திட்டமிட்டு செயல்படக்கூடிய ஒருவராக உருவெடுத்துள்ளார்.
திருமணமாகாத இவர், தற்போது செங்காங்கில் தம் தாயாருடனும் தம் பிள்ளையைப் போல பராமரிக்கும் ‘ஏஞ்சல்’ என்ற நாய்க்குட்டியுடனும் வசிக்கிறார்.
சினைப்பை நீர்க்கட்டி ஒன்றின் வெடிப்பால் 2018ல் திருவாட்டி கேரலின் வாழ்க்கை தலைகீழானது. அந்த ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி காலையில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்த திருவாட்டி கேரலுக்கு வயிற்றுவலி ஏற்பட்டது.
ஆனால், நீர்க்கட்டி வெடிப்பின் காரணத்தால் அவரது சிறுநீரகங்கள் செயலிழந்து பின்னர் அதே ஆண்டு செப்டம்பருக்கும் நவம்பருக்கும் இடையே இரண்டு மாரடைப்புகள் அவருக்கு ஏற்பட்டன.
கை கால்களில் சீழ் பரவியதை அடுத்து அவற்றை வெட்டி அகற்ற வேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.
கோமாவில் இருந்த அவர் நவம்பரில் வெளியே வந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இரண்டு மாதம் தங்கி மார்ச் 2019ல் வீடு திரும்பினார்.
பள்ளிப்பருவத்தில் தாம் சுட்டித்தனமாக இருந்ததாகக் கூறிய திருவாட்டி கேரல், 19 வயதில் சிங்கப்பூர் ஆயுதப்படையில் சீருடையில்லாப் பணியாளராகச் சேர்ந்தார். சிலேத்தார் ஆகாயப் படைத்தளத்தில் திருவாட்டி கேரல், தலைமை எழுத்தராக உயர்ந்தார்.
அதன் பிறகு, சட்ட நிறுவனம் ஒன்றில் அலுவலக உதவியாளராகச் சிறிது நேரம் பணியாற்றிய பிறகு 2003ல் ‘காம்பெக்’ தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவைப் பணியில் ஈடுபட்டார்.
காலப்போக்கில் அவர் அந்தத் துறையில் மேலதிகாரியாகவும் நிர்வாகியாகவும் உயர்ந்தார்.
ஆட்குறைப்பு, காதல் தோல்வி எனத் தமது வாழ்க்கை மேடுபள்ளமாக இருந்தபோதும் எல்லாவற்றையும் எளிதாக எடுத்துக்கொண்டு சமாளித்தவர், இந்தப் பேரிடியை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டியிருந்தது.
“இடிந்து போனது உண்மைதான். ஆனால், என் மனதை மெல்லத் தேற்றிக்கொண்டேன். இறை வழிபாட்டில் ஆழமாக என்னை ஈடுபடுத்திக்கொண்டு அடுத்தகட்ட நடவடிக்கையைப் பற்றி சிந்தித்தேன்,” என்றார் அவர்.
முன்னாள் வேலையிட நண்பர்களின் உதவியாலும் உத்தரவாதத்தாலும் அவருக்குச் சேவைத்தர அதிகாரி வேலை கிடைத்தது. முழங்கை வரை வெட்டப்பட்ட அவரது கைகளைக் கொண்டு கணினியைப் பயன்படுத்துகிறார். அதற்கான பெரிய விசைப்பலகையையும் சுழலும் பந்துபோன்ற சுட்டியையும் திருவாட்டி கேரல் பயன்படுத்துகிறார்.
தாம் இந்த வேலையில் இருப்பதை எண்ணி நன்றியுணர்வுடன் இருப்பதாகக் கூறினார் திருவாட்டி கேரல்.
இருந்தபோதும், தமது வாழ்க்கைத்தொழிலில் முன்னேறி, முன்புபோல் நிர்வாக வேலைகளில் சேர விரும்புகிறார் இவர். வேலைக்கு அப்பால் துடிப்பான ஒரு வாழ்க்கைமுறையை மேற்கொள்ள ஆசைப்படும் திருவாட்டி கேரல், மீடியாகார்ப் தொலைக்காட்சி ஒளிவழி ஐந்தின் நாடகம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
“பிறரது பரிவை நம்பியிருக்க விரும்பவில்லை. என் திறன்களைப் பயன்படுத்த முடியும் என்பதை நிறுவனங்கள் அறிய வேண்டும். அதற்குத் தகுந்தபடி, என்னை நான் காண்பித்துக்கொள்வேன்,” என்று திடத்துடன் கூறினார்.
“வெளியே இயன்றவரை செல்லுங்கள். பிறருடன் பேசுங்கள், தொடர்பில் இருங்கள். உங்களுக்கே தெரியாது, ஓராண்டுக்குள் நீங்கள் ஒரு வேலையில் இருக்கக்கூடும். அல்லது முன்பைவிட சிறப்பான ஒரு வேலை கிடைக்கலாம்,” என்று உற்சாகத்துடன் பேசினார் அவர்.
வாய்ப்பு தாருங்கள்; வழிகாட்டத் தயார்
உடற்குறை உள்ளவர்கள் தாங்களே முன்வந்து வேலை செய்ய விரும்புவதாகக் கூறும்போது அவர்களது மன உறுதியைக் காணும்படி முதலாளிகளிடம் கேட்டுக்கொள்கிறார் முன்னாள் பாதுகாவல் மேற்பார்வையாளர் கிருஷ்ணசாமி மாரிமுத்து, 67.
அடுத்த தலைமுறையினருக்கு உரமூட்டி நெறிகாட்டுவதற்குத் தம்மைப் போன்ற அனுபவம் மிக்கவர்களுக்குத் திறமையுண்டு என்றார் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் இவர்.
இளம் வயதில் திரு கிருஷ்ணசாமி, விமான நிலையத்தில் கண்காணிப்பு அதிகாரியாக இருந்து பாதுகாப்பு அதிகாரியாக வேலை மாறி, பின் அதே துறையிலேயே மேற்பார்வையாளர் பதவிக்கு உயர்ந்தார்.
2018 நவம்பரில் இவர், இரவு நேரத்தின்போது கும்மிருட்டாக இருந்த கட்டடம் ஒன்றில் உயரத்திலிருந்து விழுந்ததை அடுத்து அவர் கை கால் அசைய இயலாத நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
கழுத்திலும் முதுகுத்தண்டிலும் பலத்த முறிவுகள் ஏற்பட்டிருந்தன. உழைத்துப் பழகிய திரு கிருஷ்ணசாமிக்கு, அசைய முடியாத தமது நிலை தாள முடியாத வேதனையை அளித்தது.
“இந்த விபத்து நேர்ந்தபோது என் மகன் 18 வயது தேசிய சேவையாளர். என் மகளுக்கு 15 வயது. இரு பிள்ளைகளுக்கும் ஆதரவாக இருக்கவேண்டிய நான், அடியற்ற மரம்போல சாய்ந்துவிட்டேன். செய்வதறியாது நிலைகுத்திப்போனேன்,” என அவர் கண்ணீர் மல்கக் கூறினார்.
டான் டோக் செங் மருத்துவமனையில் பல மாதங்களாக உடல் இயக்க சிகிச்சைகளை மேற்கொண்ட பிறகு ஒவ்வொரு விரலாக அசைக்கத் தொடங்கி, பின்னர் தமது கைகளை அசைக்கலானார்.
நீண்டகாலம் படுத்திருந்த அவர், மீண்டும் உட்கார முடிந்தபோது போர் ஒன்றை வென்றது போல் உணர்ந்ததாகக் கூறினார்.
தமக்குப் பழக்கப்பட்ட பாதுகாவல் துறையில் மீண்டு சேர்வதற்காக திரு கிருஷ்ணசாமி காலாவதியான தம் பாதுகாவல் உரிமத்தைப் புதுப்பித்து பழைய வேலையிடத்திற்கு மீண்டும் விண்ணப்பித்தார்.
ஆனால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தம்மை அழைப்பதாக முதலில் கூறிய வேலையிடம், பிறகு தம்மோடு தொடர்புகொள்ளவில்லை என்று திரு கிருஷ்ணசாமி வருத்தத்துடன் கூறினார்.
தமது மீள்திறனைக் காப்பாற்றிக்கொள்ள திரு கிருஷ்ணசாமி, உடற்குறையுள்ளோருக்கும் மூத்தோருக்கும் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள், வகுப்புகளில் ஈடுபட்டார்.
அப்போது அவர் மண்ணின்றி திரவத்தைப் பயன்படுத்திச் செடி வளர்க்கும் ‘ஹைட்ரோஃபோனிக்ஸ்’ முறையை ஆறு வாரங்கள் கற்றார்.
“தவறாமல் வகுப்புகளுக்குச் சென்றேன். கவனம் செலுத்தினேன். நான் நன்கு கற்றுக் கொண்டேன் என்று அறிந்த வகுப்பு ஏற்பாட்டாளர்கள், எனது பேச்சுத்திறனையும் அங்கீகரித்து என்னைப் பயிற்சியாளராகச் சேரும்படி ஊக்குவித்தனர்,” என்று அவர் கூறினார்.
பல ஆண்டுகளாக வேலை இல்லாத திரு கிருஷ்ணசாமி, இப்போது பகுதிநேரமாக ‘ஹைட்ரோஃபோனிக்ஸ்’ பயிற்றுவிப்பாளராக உள்ளார். இருப்பினும், தமக்கு பழுத்த அனுபவம் ஈட்டித்தந்த பாதுகாவல் துறையில் மீண்டும் சேர இவர் விரும்புகிறார்.
“என் நீண்டநாள் அனுபவத்திலிருந்து பகுத்தாராயும் அறிவை வளர்த்துக் கொண்டுள்ளதாக நம்புகிறேன். நான் கற்றவற்றை இளையர்களுக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் கற்பிக்க விரும்புகிறன், “ என்றார் திரு கிருஷ்ணசாமி.
மகனுக்குத் தகுந்த வேலை ஏற்பாட்டை விரும்பும் தாயார்
திருவாட்டி எஸ்.அனுவின் மகன் கபீருக்கு மதியிறுக்கம் இருப்பதால் அவருக்கு வேலை அமைவதில் பல்வேறு சவால்கள்.
ஒரு குறிப்பிட்ட செயலையோ வேலையையோ 28 வயது கபீரால் ஒரே மாதிரியாகத்தான் செய்ய இயலும். ஒன்றைக் கற்றுக்கொண்ட பிறகு அதை மாற்றிச் செய்ய வைப்பது மிகவும் கடினம்.
சில நேரங்களில் அதிருப்தி ஏற்படும்போது கபீர் கூச்சலிட்டு சலித்துக்கொண்டிருப்பார். கோபப்படும் அந்த இளையரைத் தாயார் அனுதான் சமாதானப்படுத்த வேண்டியிருக்கும்.
“நான் தரும் ஆதரவை வேலையிடம் அவனுக்குத் தரவேண்டும் என எதிர்பார்ப்பது கடினம்தான்,” என்றார் திருவாட்டி அனு.
டெல்லியில் வங்கித் துறையில் வேலை பார்த்திருந்த தமக்கும் தம் கணவருக்கும் வேலை முன்னேற்றத்தை மையப்படுத்தியே அவர்களது வாழ்க்கை இருந்தது.
“குழந்தை கபீரின் மதியிறுக்கம் என் உலகத்தைத் தலைகீழாக்கியது. மருத்துவர்கள் அவனது நிலைமையை என்னிடம் தெரிவித்த மறுநாளே வேலையைவிட்டு விலகி முழுநேரமாக அவரைப் பராமரிக்கத் தொடங்கினேன்,” என்று திருவாட்டி அனு கூறினார்.
சிங்கப்பூருக்கு இவரது குடும்பம் வந்து கிட்டதட்ட இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. தம் மகனுக்கு உதவுவதற்கான வளங்கள் தொடக்கத்தில் இல்லாத பதற்றநிலையை நினைத்துப்பார்க்கையில் விழிப்புணர்வு அதிகரித்துள்ள தற்போதைய காலகட்டம், நிம்மதி அளிப்பதாகத் திருவாட்டி அனு கூறினார்.
“பொதுவெளியில் அறிவுசார் குறைபாடு உள்ளோருக்கான ஒருங்கிணைப்புத் திட்டங்கள் முன்னேறியுள்ளன. கபீரை முன்பு பொதுமக்களில் சிலர் பயத்துடன் அல்லது அருவருப்புடன் பார்த்தேன். கவலையை ஏற்படுத்திய இதுபோன்ற தருணங்கள் இப்போது ஏற்படுவதில்லை,” என்று அவர் கூறினார்.
கபீருக்குப் பல்வேறு திறன்களைக் கற்பிக்க முயன்ற அந்தத் தாயார், வலுக்கட்டாயமாகத் திணிப்பதைத் தவிர்த்து அவருக்குப் பிடித்தவற்றைச் செய்ய வாய்ப்புகளை ஏற்படுத்துவதாகக் கூறினார்.
“பேரிரைச்சல் மிகுந்த இடத்தில் ஒருமுறை என் மகனுக்கு வேலை கிடைத்தது. மதியிறுக்கம் உள்ளவர்களைச் சத்தமும் இரைச்சலும் மிகுந்த சூழல்கள் துன்பத்துக்கு உட்படுத்தும் என்ற புரிதல் அந்த நிறுவனத்தில் இல்லை,” என்றார் திருவாட்டி அனு.
தற்போதைய பொருளியல் சூழலில் அவரவர் தங்களது வேலையைக் காப்பாற்றிக்கொள்ள முயலும் நேரத்தில் கபீர் போன்ற அறிவுசார் குறைபாடு உள்ளவர்களைச் சக ஊழியர்கள் பாதுகாப்பதை எதிர்பார்ப்பதிலும் நியாயம் இருக்காது என்பதை இந்தத் தாயார் உணர்கிறார்.
கபீர் போன்றோரின் திறன்களைப் பயன்படுத்தும் விதமாக வேலையிடங்களை வடிவமைப்பதில் பொதுநோக்கு அமைப்புகள், அரசாங்க அமைப்புகள் ஆகியவற்றின் உதவியை நாட விரும்புவதாக திருவாட்டி அனு தெரிவித்தார்.
சமையலறையில் குக்கீ, ஜிஞ்சர்பிரெட் மேன் போன்ற பதார்த்தங்களைத் தயாரிப்பதில் கைதேர்ந்தவர் கபீர். இதனால் சிறிய உணவு விநியோக வர்த்தகம் ஒன்றைத் தொடங்கி அதில் கபீரை ஈடுபடுத்தவும் முயன்றார் அனு.
“என் மகன் அலுவலக வேலைகள் வரை கற்று அவற்றைச் செய்யும் திறமை உள்ளவர் என நான் நம்புகிறேன். சராசரி ஊழியரை விஞ்சிய கவனமும் செய்முறை வழுவாமையும் என் மகனிடம் உள்ளன எனக் கருதுவேன். வாய்ப்புதான் அவருக்குத் தேவை,” என்றார் திருவாட்டி அனு.