தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மறுவிற்பனைச் சந்தை: உரிய திட்டமிடுதல் அவசியம்

7 mins read
5a8e9b3c-ef7c-41f2-a246-78677b140d04
கழக வீடுகளில் மறுவிற்பனைச் சந்தையில் பெரிய வீடுகளுக்கான போட்டி வலுக்கிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறுவிற்பனை வீடுகள் விலை, 2024ஆம் ஆண்டில் ஏற்றம் கண்டது.

கடந்த ஆண்டில் அத்தகைய வீடுகளின் விலை ஒட்டுமொத்தமாக 9.6 விழுக்காடு கூடியது. இந்த விகிதம், 2023ல் பதிவான 4.9 விழுக்காட்டைக் காட்டிலும் சுமார் இரண்டு மடங்கு அதிகம். 

கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டு பதிவான 2.5 விழுக்காடு விலையேற்றம், அதற்கு முந்தைய காலாண்டான 2.7 விழுக்காட்டைக் காட்டிலும் சற்று மெதுவடைந்தது. 

இருந்தபோதும், 2020ன் இரண்டாவது காலாண்டில் தொடங்கிய நீண்டகால விலையேற்றம் தொடரும்வண்ணம் உள்ளது. 

உலக நிலவரத்தைக் கருத்தில் கொள்ளும்போது வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு என்பது பெரும்பாலானோருக்குக் கட்டுப்படியான விலைகளில் வாங்கக் கூடியதாக உள்ளது.

அனைத்துலக லாபநோக்கமற்ற அமைப்பான ‘அர்பன்ட் லேண்ட்’ ஆய்வு நிலையம் வெளியிட்டுள்ள 2024 வீடு வாங்குதலுக்கான குறீயிட்டில், சிங்கப்பூரின் பொது வீடமைப்பின் விலைக்கும் வருமானத்திற்குமான விகிதம் 4.7ஆக உள்ளது. 

இதற்கு நேர்மாறாக, சிங்கப்பூரையொத்த நகரங்களில் ஒன்றான ஹாங்காங்கின் விகிதம் 25.1 ஆகவும் தென்கொரியாவிலுள்ள சோல் நகரில் 17.8 விகிதம் ஆகவும் உள்ளன.

வீடு ஒன்றை வாங்குவதற்கு எத்தனை ஆண்டு வருமானம் தேவைப்படுகிறது என்பதை இந்த விகிதம் காட்டுகிறது. 

கழக மறுவிற்பனை வீடுகளின் விலை ஏறுமுகமாக உள்ளன. கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்குள் வீட்டு விலை ஒட்டுமொத்தமாக 44 விழுக்காடு கூடியுள்ளன. 

அதிக மதிப்புள்ள இடங்களிலும் பெரிய வீடுகள் தொடர்பிலும் குறிப்பாக விலை வெகுவாகக் கூடியுள்ளது.

‘மில்லியன் வெள்ளி’ வீடுகள்

கடந்த ஆண்டுகளாக விற்பனையான வீடுகளின் மதிப்பு.
கடந்த ஆண்டுகளாக விற்பனையான வீடுகளின் மதிப்பு. - வரைகலை: கி.ஜனார்த்தனன்
கடந்த ஐந்து ஆண்டுகளில் மறுவிற்பனை வீட்டு விலையில் காணப்பட்ட போக்கு.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மறுவிற்பனை வீட்டு விலையில் காணப்பட்ட போக்கு. - வரைகலை: கி.ஜனார்த்தனன்

2013ன்போது வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளுக்கான மறுவிற்பனைச் சந்தையில் ஒரு மில்லியன் வெள்ளிக்கும் அதிகமாக விற்பனையான வீடுகளின் எண்ணிக்கை மூன்றுக்கும் குறைவு.

ஒரு மில்லியன் வெள்ளிக்கு மேல் கடந்த ஆண்டு விற்பனைக்கு விடப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 1,035. இது, 2013ன் எண்ணிக்கையான 469ஐக் காட்டிலும் வெகு அதிகம். 

ஏறத்தாழ 900,000 வெள்ளிக்கும் அதிகமாக விலையில் விற்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை, கடந்தாண்டு 1,353 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை, 2023ல் 912ஆக இருந்தது.

இத்தகைய மில்லியன் வெள்ளி வீட்டு விற்பனையைப் பற்றிய செய்திகள், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. 

இருந்தபோதும், கடந்த ஆண்டின் 26,000க்கும் அதிகமான வீட்டு விற்பனைகளில் ஒரு மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான மதிப்புள்ள வீடுகளின் விகிதம் சிறிது ( 3.66 விழுக்காடு).  

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின்போது, கழக வீட்டுக் கடன்களுக்கான கடனுக்கும் மதிப்புக்குமான விகிதம் (loan-to-value ratio for mortgage loans)  80 புள்ளிகளிலிருந்து 75 புள்ளிகளுக்குக் குறைக்கப்பட்டன. 

அதாவது, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான வீட்டின் மதிப்பில் 75 விழுக்காடு வரைதான் கடன் வாங்க முடியும். 

தணிப்பு நடவடிக்கையாலும் குறையாத வேகம்

வீடுகளின் விலையேற்றத்தால் இந்த நடவடிக்கை, சூடுபிடித்துள்ள சொத்துச் சந்தையைத் தணிக்கக்கூடும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சு எதிர்பார்த்திருந்தது. 

இருந்தபோதும், விலையேற்றம் தொடர்ந்த வண்ணமே உள்ளது. கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 12,000 வீடுகள் குறைந்தபட்ச வசிப்புக் காலகட்டத்தை எட்டியது. இந்த ஆண்டும் கிட்டத்தட்ட 7,000 வீடுகள் இந்த நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நான்கறை வீடுகளையும் அதைவிட பெரிய வீடுகளையும் கடந்த ஆண்டு வாங்கியோர் கூடுதல் மானியங்கள் பெறவில்லை. வீடு வாங்குவதற்குக் கடன்களைப் பெறுகின்றனர்.

குறைந்தபட்ச வசிப்புக் காலகட்டத்திற்குப் பிறகு பொதுச் சந்தையில் விற்கப்படும் நான்கறை, ஐந்தறை வீடுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, அதற்கான வீட்டு விலையை மேலும் ஏற்றுகிறது.

மத்திய வட்டாரத்தின் வீடுகள் கடந்த ஆண்டின் ஆக அதிக மறுவிற்பனை விலையை (ஒரு சதுர அடிக்கு 736 வெள்ளி) எட்டியது. அதற்கு அடுத்து வட-கிழக்கு (ஒரு சதுர அடிக்கு 613 வெள்ளி), கிழக்கு ( ஒரு சதுர அடிக்கு 590 வெள்ளி), தெற்கு (ஒரு சதுர அடிக்கு 549 வெள்ளி) பகுதிகளில் மறுவிற்பனை அதிகமாக உள்ளது.

பெரிய வீடுகளுக்கான தெரிவுகள் குறைவு

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக விற்பனை உதவியாளராகப் பணியாற்றும் 45 வயது கவிதா (முழு பெயர் வெளியிட விரும்பவில்லை), ரேஸ் கோர்ஸ் ரோட்டிலுள்ள மூவறை வீட்டில் வசிக்கிறார். 

பெரர் பார்க் வட்டாரத்து அடுக்குமாடி வீடுகள்.
பெரர் பார்க் வட்டாரத்து அடுக்குமாடி வீடுகள். - படம்: கூகல்

மயிலாடுதுறையைப் பூர்விகமாகக் கொண்ட கவிதா, 25 ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு சிங்கப்பூரரைத் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் 24 வயது மகன் உள்ளார். 

இந்தியாவில் இருக்கும் தம் பெற்றோரை இங்கு வரவழைத்துப் பார்த்துக்கொள்ள விரும்பி, நான்கு அறை வீட்டை வாங்க இவருக்கு விருப்பம். தம் பெற்றோரின் காலத்திற்குப் பிறகு பெரிய வீட்டை விற்று மறுபடியும் சிறிய வீட்டுக்கு மாறி லாபம் பெறவும் திட்டமிட்டுள்ளார்.

ஆனால், தமது சுற்றுவட்டாரத்தில் இத்தகைய வீடுகள் தமக்குக் கட்டுப்படி ஆகவில்லை என்பதால் சிரமம்.

“மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நான்கு அறை பிடிஓ வீடுகளை வாங்க முயன்ற அவரது குடும்பத்திற்கு அத்தகைய வீடு கிடைக்கவில்லை. எனவே, மறுவிற்பனையில் வீடு வாங்க முயல்கிறோம்,” என்றார் திருவாட்டி கவிதா.

“நானும் என் கணவரும் தேக்காவில் வேலை செய்கிறோம். பல ஆண்டுகளாக நாங்கள் வீட்டிலிருந்து தேக்காவுக்கு நடந்தே வேலைக்குச் செல்வது வழக்கம். எங்களுக்கு பூன் கெங், வாம்போ ஆகிய இடங்கில் வீடு வாங்க ஆசை,” என்று அவர் கூறினார். இந்த ஆசையைப் புறந்தள்ளி செங்காங், பொங்கோல் ஆகிய இடங்களிலும் வீடு பார்த்த திருவாட்டி கவிதாவுக்குப் பொருத்தமான வீடு கிடைக்கவில்லை. 

மறுவிற்பனை வீடுகளின் விலையேற்றம் பற்றிய செய்தியைக் கேட்டு கவலை அடைந்ததாகக் கூறினார் திருவாட்டி கவிதா.

“தற்போதைய வீட்டுக்கடனை அண்மையில்தான் கட்டி முடித்தோம்,” என்றார் கவலையுடன்.

சேமிப்பு முக்கியம்

கழக வீட்டுக் கடன்களுக்கான கடன்-மதிப்பு விகிதம் குறைந்திருப்பதால் இரண்டாவது முறை வீடு வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகச் சொத்துச் சந்தை முகவர் முஹம்மது அமீன் தெரிவித்தார்.

‘ல்டர்ஸ் இன்கார்பரேட்டட்’ சொத்து நிறுவனத்தைச் சேர்ந்த முகவர் முஹம்மது அமீன்.
‘ல்டர்ஸ் இன்கார்பரேட்டட்’ சொத்து நிறுவனத்தைச் சேர்ந்த முகவர் முஹம்மது அமீன். - படம்: முஹம்மது அமீன் 

“கொடுக்கப்படும் கடன் தொகை குறைக்கப்படுவதால் சிலர், மத்திய சேமநிதியில் பணம் சேரும்வரை கூடுதல் நேரம் பொறுத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால், அவர்கள் காத்திருக்கும் சமயத்தில் வீட்டு விலை தொடர்ந்து ஏறுகிறது,” என்று சிங்கப்பூர் ரியல்டர்ஸ் இன்கார்பரேட்டட் சொத்து நிறுவனத்தைச் சேர்ந்த திரு அமீன் குறிப்பிட்டார்.

எல்லா குடியிருப்புகளிலும் விலையேற்றம் இருந்தபோதும் மத்திய வட்டாரத்தில் விலையேற்றம் மிக அதிகம் என்பதைப் பிரதிபலிக்கும் வகையில் ஆக அண்மையில் பூன் தியோன் ரோட்டிலுள்ள ஐந்தறை வீட்டை, 1.358 மில்லியன் வெள்ளிக்கு விற்க ஏற்பாடு செய்ததை திரு அமீன் குறிப்பிட்டார்.

“அத்துடன், கிம் தியேனிலுள்ள நான்கறை வீடு ஒன்றின் 890,000 வெள்ளிக்கான விற்பனையை வழிநடத்தினேன்,” என்று அவர் கூறினார். 

இளமையில் நன்றாக உழைத்து மத்திய சேமநிதியில் போதிய இருப்பை உறுதிசெய்ய திரு அமீன் வலியுறுத்துகிறார். 

புதிதாகக் குடும்பத்தை அமைத்து வீடு வாங்க நினைக்கும் இணையர்கள், முதிர்ச்சி அடையாத இடத்தில் பிடிஓ வீட்டைக் குறைந்த விலையில் வாங்கலாம் என்ற யோசனையை முன்வைத்தார்.

அவசரமாக வீடு தேவைப்படுவோர், கட்டுப்பாடுகளை அறிந்து கவனத்துடன் மறுவிற்பனை வீடுகளை வாங்கி உரிய மானியங்களைப் பெறும்படி திரு அமீர் கூறினார். 

‘பொருளியல் முன்னேற்றத்தின் பிரதிபலிப்பு’

சிங்கப்பூரில் கொவிட்-19க்குப் பிறகு சம்பளங்கள் கூடியுள்ளன. அத்துடன் 2024ல் சிங்கப்பூர்ப் பொருளியல் 4 விழுக்காடு அதிகரித்துள்ளது. 

இதனால், வீடு வாங்குபவர்கள் பலருக்குக் கூடுதல் நிதி, கைக்காசாகவும் மத்திய சேமநிதி இருப்பிலும் உள்ளதாக புராப்நெக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சொத்து முகவர் கணேஷ் தமிழ்ச்செல்வன் கூறினார்.

புராப்நெக்ஸ்  நிறுவனத்தைச் சேர்ந்த சொத்து முகவர் கணேஷ் தமிழ்ச்செல்வன்.
புராப்நெக்ஸ்  நிறுவனத்தைச் சேர்ந்த சொத்து முகவர் கணேஷ் தமிழ்ச்செல்வன். - படம்: கணேஷ் தமிழ்ச்செல்வன்

“அத்தகைய நிதி இல்லாதவர்கள், குடும்பத்தாரிடம் குறிப்பிட்ட தொகை கடன் வாங்குவதை நம்மால் காண முடிகிறது,” என்று அவர் கூறினார்.

புதிதாகத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியர் உடனே வீடுகளை நாடும் போக்கு இருப்பதால் மறுவிற்பனைக்கான தேவையும் கூடுவதாக திரு கணேஷ் சுட்டினார்.

பொது வீடமைப்புச் சந்தை மேலும் சீராக, தேவைக்கேற்ப கட்டித்தரப்படும் வீடுகளின் எண்ணிக்கையைப் பெருக்குதல், ஸ்டேன்டர்ட், பிளஸ், பிரைம் ஆகிய வீட்டுப் பிரிவுகளைப் புதுப்பித்தல், மேம்பட்ட மத்திய சேமநிதி வீட்டு மானியங்களை அறிவித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது.

மறுவிற்பனை வீடு வாங்கும் தமது வாடிக்கையாளர்களில் பலருக்கு இந்த உதவிகள் போதுமானவை என திரு கணேஷ் கருதுகிறார்.

முதலில் தனியார் வீடு, இறுதியில் கழக வீடு

வாழ்நாள் முழுவதும் கட்டுக்கோப்புடன் சேமிக்க வேண்டும் என்று தமது வாடிக்கையாளர்களிடம்  வலியுறுத்தி வருகிறார் ‘ஆரஞ்சுடீ’ நிறுவனத்தைச் சேர்ந்த சொத்து முகவர் வி.மனோ.

 ‘ஆரஞ்சுடீ’ நிறுவனத்தைச் சேர்ந்த சொத்து முகவர் வி.மனோ.
 ‘ஆரஞ்சுடீ’ நிறுவனத்தைச் சேர்ந்த சொத்து முகவர் வி.மனோ. - படம்: வி.மனோ

“காலங்காலமாக தனியார் வீடுகளைக் காட்டிலும் கழக வீடுகள் மலிவாக இருக்கின்றன என்பதற்காக நாம் உடனே கழக வீடுகளை வாங்கவேண்டும் என்பதற்கான அவசியம் இல்லை,” என்றார் இவர். 

முதலில், வாடகை வீட்டில் தங்கி அல்லது பெற்றோர் வீட்டில் தங்கி, புதிதாக விற்பனைக்கு விடப்படும் தனியார் வீட்டை வாங்குவதற்காகக் கடுமையாகச் சேமிக்கும்படி திருவாட்டி மனோ, இருபது, முப்பது வயதுகளிலுள்ள தம் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறார்.

“என்னைப் பொறுத்தவரை வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டுக்காகக் கட்டணம் கட்டுவது என்பது, நீண்டகால வாடகையை முன்கூட்டியே தருவதற்குச் சமமானது. வீட்டுக் கடனை முழுமையாக அடைத்தாலும் காலப்போக்கில் மதிப்பில் குறையும் கழக வீடுகளைச் சொத்தாகவோ பங்காகவோ பயன்படுத்த முடியாது,” என்றார்.

இயன்றவரை பல்வேறு தனியார் சொத்துகளை வாங்கி கழக வீட்டைக் கடைசியாக வாங்கும்படி திருவாட்டி மனோ அறிவுறுத்துகிறார்.

இப்போதே அவசரப்பட்டு கழக வீடுகளை வாங்குவதற்குப் பதிலாக நிதானமாகப் பணம்புரட்டி தனியார் வீடுகளை வாங்குவது நீண்டகாலத்திற்கு உதவும் என்பது, மற்ற முகவர்களைக் காட்டிலும் மாறுபட்ட அவரது அணுகுமுறை.

நான்கறை, ஐந்தறை கழக வீடுகளை தங்களுக்கு விருப்பமான இடங்களில் ஒருநாள் வாங்க விரும்புவோர், தங்கள் முதல் வீட்டை அவசரப்பட்டு வாங்குவதற்குப் பதிலாக நிதானத்தைக் கடைப்பிடித்து நீண்டகால வீட்டுத் தேவைகளுக்கும் சேமித்து வைக்கவேண்டும் என்பது மறுவிற்பனை மேற்கொண்ட சொத்து நிபுணர்களின் ஒருமித்த கருத்து.

குறிப்புச் சொற்கள்