எக்காலமும் ஒலிக்கும் என் எக்காளம்

எம்.கே. ருஷ்யேந்திரன்

தமிழர்களின் இசைக்கருவிகளில் ராஜகம்பீரத்தோடு ஒலிப்பது எக்காளம். 

பஞ்ச வாத்தியங்கள் என்று அழைக்கப்படும் நமரி, உடல், திருச்சின்னம், வாங்கா, எக்காளம் ஆகிய ஐந்தும் சேர்ந்து ஒலிக்கும்போது வருணிக்க இயலாத அளவுக்கு ஓர் உணர்வு ஏற்படும் என்று சொல்வார்கள்.

மன்னர்கள் காலத்தில் வெற்றி முழக்கமாக இருந்து, பிறகு கோயில் விழா, திருமணம், புதுமனைப் புகுவிழா போன்ற நிகழ்ச்சிகளில் மங்கல ஒலியாக எக்காளம் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பஞ்ச வாத்தியக் கலைஞர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க பூம்புகாருக்கு அருகே உள்ள ஊர்களில் முன்பு அதிகம் வாழ்ந்தார்கள். இப்போது எல்லாம் பழைய கதையாகிவிட்டது.

‘‘பூம்புகார் அருகே உள்ள மேலப்பெரும்பள்ளம் கிராமம்தான் எங்கள் பூர்வீகம்,” என்றார் திரு கலியபெருமாள் என்ற 82 வயது   எக்காளக் கலைஞர். 

“நாங்கள் ஆறுபேர் குழுவாக வாசிப்போம். நமரி வாசிக்க இருவர் இருப்பார்கள். உடல், திருச்சின்னம், வாங்கா, எக்காளம் ஆகியவற்றை ஆளுக்கு ஒருவராக மற்றவர்கள் வாசிப்போம். உடல் ஒன்றுதான் மேளம் போன்ற தோல் கருவி. மற்றவை எல்லாம் காற்று இசைக்கருவிகள். 

‘‘என் குழுவில் இருந்தவர் எல்லாரும் இறந்துவிட்டனர். அவர்களின் இசைக்கருவிகளின் கதியும் தெரியவில்லை. நான் மட்டும்தான் என் எக்காள ஒலியை எழுப்பி வருகிறேன். 

‘‘முன்பு திருச்சி, கடலூர் போன்ற ஊர்களுக்கும் சென்று வாசிப்பேன். உள்ளூரில் என்றால் ரூ.1,500 வாங்குவேன். வெளியூர் எனில் ரூ.2,000 கேட்பேன். 

“இப்போது வயதாகிவிட்டது. கடந்த மூன்றாண்டுகளாக முடியவில்லை. உள்ளூரிலேயே திருமணம், கோயில் விழா, புதுமனைப் புகுவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்தால் போய் வாசிப்பேன்.

‘‘எப்படியோ சிரமப்பட்டு மாதம் ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை சம்பாதிக்கிறேன்,” என்றார் திரு கலியபெருமாள்.

 

மூன்று தலைமுறைகளாக முழங்கும் ஒலி 

 

‘நோக்கர் என்ற பாரம்பரியத்தைச் சேர்ந்த தாங்கள் வழிவழியாக எக்காளம் வாசித்து வருவதாக திரு கலியபெருமாள் குறிப்பிட்டார். 

“என் தாத்தா திரு பழனி, என் தந்தை திரு மாரிமுத்து, பிறகு நான் என்று பரம்பரை பரம்பரையாக எக்காளம் வாசித்து வருகிறோம். 

“என்னிடம் இப்போதுள்ள எக்காளத்திற்கு வயது 100 ஆண்டுகளுக்குமேல் இருக்கும். தாத்தா, பிறகு தந்தை இப்போது நான் என மூன்று தலைமுறைகளாக எங்கள் எக்காளம் கம்பீர ஒலியை எழுப்பிக்கொண்டே இருக்கிறது. 

“எனக்கு ஆறு மகள்கள், ஒரே பையன். ஒரு பெண்ணைத் தவிர, மற்றவர்களுக்கு மணமாகிவிட்டது. இருந்தாலும் எனக்குப் பிறகு ஒருவர்கூட எங்கள் குடும்பத்தில் இந்தப் பாரம்பரியத்தைத் தொடரப்போவதில்லை. என் தலைமுறைதான் கடைசி என்றாகிவிட்டது.  

‘‘எக்காளம் ஏறக்குறைய 4 கிலோ எடையுடன் ஆறடி உயரம் இருக்கும். பொதுவாக நான்கு பகுதிகளாக எக்காளம் செய்யப்படும். ஆனால், எங்கள் குடும்ப எக்காளத்தில் இரண்டு பகுதிகள்தான் உண்டு. அவற்றைக் கழற்றி மீண்டும் பொருத்திக்கொள்ளலாம். 

‘‘எக்காளம் இரண்டு சுவர்களைக் கொண்டிருக்கும். உட்சுவர் செம்பால் ஆனது. வெளிச்சுவர் வெண்கலத்தால் செய்யப்பட்டு இருக்கும். 

“நடுவே அரக்கைக் காய்ச்சி ஊற்றிவிடுவார்கள். அது கெட்டியாக பிடித்துக்கொள்ளும். வாயை வைத்து ஊதும்போது உதட்டிற்கு எதுவும் நேராதபடி, அப்பகுதியை அரக்கை வைத்து வடிவமைத்து இருப்பார்கள். 

“ஊதும் பகுதியின் உள்ளே ஓர் அங்குல உயரத்துக்கு ‘நாகா’ என்ற ஒன்று இருக்கும். 

“நாதஸ்வரத்தில் இருக்கும் சீவாளி அல்லது நறுக்கைப் போன்றது நாகா. ஆனால் நாகாவை மாற்ற முடியாது. அதுதான் ஒலியை ஏற்படுத்தும். 

‘‘கூம்புபோல் விரிந்த முனையைக் கொண்ட எக்காளத்தின் இரண்டாவது பகுதி இரண்டு, மூன்று கிலோமீட்டர் தொலைவுக்கும் அப்பால் கேட்கும்படி ஒலியை கம்பீரமாக ஒலிக்கச் செய்யும். 

‘‘இப்போது கும்பகோணத்திற்கு அருகே உள்ள நாச்சியார்கோயிலில் ஒரு சிலர் ரூ.15,000 விலையில் எக்காளம் தயாரித்துக் கொடுக்கிறார்கள். எக்காளம் அமைவதைப் பொறுத்துத்தான் இருக்கிறது.

‘‘தமிழர்களின் பாரம்பரியத்தில் எக்காளத்திற்கு எப்போதுமே தனி இடம் உண்டு. அதைப்போல ராஜகம்பீர ஒலியை வேறு எந்தக் கருவியும் ஏற்படுத்தாது. எனது முக்காலமும் எக்காலமும் எக்காளத்தோடுதான் நகர்கிறது.  

‘‘என் உயிர் அடங்கும்வரை என் எக்காளம் முழங்கும். நான் மறைந்தாலும், எனது எக்காள ஒலி எங்கேயாவது எதிரொலித்துக் கொண்டே இருக்கும்,’’ என்று திரு கலியபெருமாள் கூறினார். 

எக்காளத்தை ஊதிக் காட்டினார். அதன் கம்பீர சத்தத்தைக் கேட்டு என் ஐம்பொறிகளும் அதிர்ந்தன. 
 

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!