தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காஷ்மீர்-டெல்லி: ஆப்பிளுக்காக அன்றாடம் ஒரு ரயில்

2 mins read
aa5fb242-95b1-46d9-82a1-a6c19f8e2fba
வியாழக்கிழமை (செப்டம்பர் 11) ஆப்பிள் பழங்கள் ரயிலில் ஏற்றப்படுமுன் அவற்றைச் சோதனையிட்ட காவல்துறையினர். - படம்: இடிவி பாரத்
multi-img1 of 2

ஸ்ரீநகர்: காஷ்மீரிலிருந்து டெல்லிக்கு ஆப்பிள் பழங்களை அனுப்புவதற்காக நாளும் ஒரு ரயில் இயக்கப்படும் என இந்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரின் பத்காம் நகரிலிருந்து டெல்லியின் ஆதர்ஷ் நகர் நிலையத்திற்கு இடையே அந்த அன்றாட ஆப்பிள் ரயில் சனிக்கிழமை (செப்டம்பர் 13) முதல் இயக்கப்படும்.

இதனிடையே, வெள்ளிக்கிழமையே இரு ரயில் பெட்டிகளில் பத்காம் நகரிலிருந்து டெல்லிக்கு ஆப்பிள் பழங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் ஊடகப் பதிவு வாயிலாக அமைச்சர் வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.

இந்தச் சிறப்பு ரயில் சேவையானது காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் ஆப்பிள் பயிரிடுவோர்க்கு மிகுந்த ஊக்குவிப்பாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு ரயில் பெட்டியும் 23 டன் ஆப்பிள் பழங்களைச் சுமந்து செல்லும் என்றும் ரயிலில் மொத்தம் எட்டுப் பெட்டிகள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

அன்றாடம் காலை 6.15 மணிக்கு பத்காம் நிலையத்திலிருந்து புறப்படும் அந்த ரயில், மறுநாள் காலை 5 மணிக்கு டெல்லி ஆதர்ஷ் நகர் நிலையத்தைச் சென்றடையும்.

தேவை அதிகரித்தால் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர். அத்துடன், இடையிலுள்ள நிலையங்களில் பெட்டிகளை இணைக்கவும் வசதி செய்துதரப்பட்டுள்ளது.

இது, பழ வணிகர்களுக்குப் போக்குவரத்தை எளிதாக்கும் என்றும் சரியான நேரத்தில் டெல்லி சந்தைக்கு ஆப்பிள் பழங்கள் சென்றடைவதை உறுதிசெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், செயல்பாடுகள் சீராக இடம்பெறுவதை உறுதிப்படுத்த வடக்கு ரயில்வே முதன்மைத் தலைமை வணிக மேலாளரும் ஜம்மு வட்டார ரயில்வே மேலாளரும் தோட்டக்கலைத் துறை, பழ விவசாயிகள் சங்கம், வணிகர்கள் ஆகியோருடன் இணைந்து பணியாற்றி வருவதாக மத்திய ரயில்வே அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்