தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வரவுசெலவுத் திட்டம் 2025: மக்களின் எதிர்பார்ப்புகள்

6 mins read
வரவுசெலவுத் திட்டத்திற்கு முன் மக்களுடன் கருத்துத்திரட்டை அரசாங்கம் நடத்தி, பல்வேறு வாழ்க்கை நிலைகளில் உள்ள சிங்கப்பூரர்களின் அக்கறைக்குரிய விவகாரங்களை அறிந்து வருகிறது. அத்தகைய கருத்துகளில் சில இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
b4097ca0-3b7f-4ff1-a53d-e634fdc08597
வரவுசெலவுத் திட்டம் குறித்து மக்களுடன் ஆலோசனை அங்கங்களை அரசாங்கம் நடத்தி, பல்வேறு வாழ்க்கை நிலைகளில் உள்ள சிங்கப்பூரர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து வருகிறது.  - படம்: ராய்ட்டர்ஸ்

பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், சிங்கப்பூரின் இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 18) வெளியிடவுள்ளார்.

இது நிதியமைச்சராக அவர் நிகழ்த்தும் நான்காவது வரவுசெலவுத் திட்ட உரையாகவும் சிங்கப்பூரின் பிரதமராக நிகழ்த்தும் முதல் உரையாகவும் இருக்கும்.

‘முன்னேற்றும் சிங்கப்பூர்’ திட்டம், 2024ன் தேசிய தினப் பேரணி உரை ஆகியவற்றுக்குப் பிறகு வரும் பொதுத்தேர்தலுக்கு முன்னதாக வெளிவரும் இந்த வரவுசெலவுத் திட்டத்தை அனைவரும் எதிர்பார்ப்புகளுடன் கவனிப்பர்.

வாழ்க்கைச் செலவினம், வேலை மற்றும் திறன் மேம்பாடு, பொருளியல் உத்திகள் ஆகியவற்றின்மீது கவனம் கூடுதலாகச் செலுத்தப்படும் என்று பிரதமர் வோங் நவம்பர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தின்போது தெரிவித்திருந்தார்.

பிள்ளைப் பராமரிப்பு விடுப்பு தொடர்பாக...

பெற்றோராக விரும்பும் தம்பதியர், பிள்ளைப் பராமரிப்பு விடுப்பை மிக அடிப்படைத் தேவையாகக் கருதுகின்றனர்.

விளம்பரத்துறை மேலாளர் அனுராதா பரசுராமன், பொறியளார் ஸ்ரீவிக்னேஷுக்கு நான்கு வயது மகள் சஹானாவுடன் கூடுதல் நேரத்தைச் செலவழிக்க விருப்பம்.

தொடர்ந்து பிள்ளைகள் பெற்றுக்கொள்ள ஏதுவாகப் பிள்ளைப் பராமரிப்புக்காகக் கூடுதல் விடுப்பு அறிவிக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்று 38 வயது திருவாட்டி அனுராதா கூறினார்.

கடந்த ஆண்டின் பேரணி உரையின்படி இவ்வாண்டு ஏப்ரல் முதல் பிறக்கும் பிள்ளைகளின் பெற்றோர் ஆறு வாரங்கள் வரையிலான பகிரப்பட்ட விடுப்புக்குத் தகுதிபெறுகின்றனர். அடுத்தாண்டு ஏப்ரல் முதல் பிறக்கும் குழந்தைகளின் பெற்றோருக்கு முழுமையாக 10 வார விடுப்பு கிடைக்கும்.

இந்தச் சலுகையைச் சற்று கூடுதல் வயது பிள்ளைகள் கொண்ட பெற்றோருக்கும் வழங்கலாம் என்றார் திருவாட்டி அனுராதா.

கணவர் ஸ்ரீவிக்னேஷ், மகள் சஹானாவுடன் திருவாட்டி அனுராதா.
கணவர் ஸ்ரீவிக்னேஷ், மகள் சஹானாவுடன் திருவாட்டி அனுராதா. - படம்: அனுராதா பரசுராமன்

பிப்ரவரி 5ஆம் தேதி நடந்தேறிய நாடாளுமன்ற அமர்வில் பிள்ளைப் பராமரிப்பு விடுப்பு தொடர்பான தன் கொள்கைகளை அரசாங்கம் மறுஆய்வு செய்யும்படி 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதுடன் பரிந்துரைகளையும் முன்வைத்தனர்.

திருவாட்டி அனுவின் கோரிக்கையைப் போலவே முதியோர்ப் பராமரிப்பு இல்ல நிர்வாகி மஹாலட்சுமி ரமேஷ், 40, முன்வைத்தார்.

“தற்போதைய பிள்ளைப்பேறு விடுப்புக்கான எண்ணிக்கை எங்களுக்குப் போதவில்லை. மீண்டும் குழந்தை பெற்றுக்கொண்டால்தான் கூடுதல் விடுப்புக்குத் தகுதிபெற முடியும் என்ற நிலையும் அனைவருக்கும் சரிவராது,” என்று அவர் கூறினார்.

குடும்பங்களுக்கு ஆதரவு

மூன்று பிள்ளைகளை ஒற்றைப் பெற்றோராக வளர்த்துவரும் 52 வயது வெண்ணிலா சுப்பிரமணியன், ‘காம்லிங்க் பிளஸ்’ உதவித்தொகையை நம்பியுள்ளார்.

“என் மூத்த மகன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் பயில்கிறார். அவனது எதிர்காலத்திற்கு நிச்சயம் உதவி தேவைப்படுகிறது. கல்விக்காக கூடுதல் ஊக்கத்தொகை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் மேலும் அதிகம் உதவலாம் என்பது என் விருப்பம்,” என்று அவர் கூறினார்.

மூன்று பிள்ளைகளுடன் வெண்ணிலா சுப்பிரமணியன்.
மூன்று பிள்ளைகளுடன் வெண்ணிலா சுப்பிரமணியன். - படம்: வெண்ணிலா

போதைப்புழக்கத்தால் சிறைக்குச் சென்ற தம் கணவரால் குடும்பத்திற்கு ஆதரவு இல்லாத நிலையில் வேலையும் இல்லாத திருவாட்டி வெண்ணிலா, அன்றாடச் செலவுகளைச் சமாளிக்கச் சிரமப்படுகிறார்.

கடந்த வரவுசெலவுத் திட்டத்தை அடுத்து வழங்கப்பட்ட சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகள் தமக்குப் பேருதவியாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், 50 வயதைக் கடந்த அவருக்குக் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 300 வெள்ளி மெடிசேவ் போனஸ் தொகையும் உதவியாக உள்ளது. இதுபோன்ற உதவிகளை அதிகரிக்கும்படி கேட்டுக்கொண்டார் அவர். தையல் வேலையில் சேர விரும்பும் திருவாட்டி வெண்ணிலா, அதற்கு ஸ்கில்ஸ்ஃபியூச்சர் உதவித்தொகையைப் பயன்படுத்தவும் விரும்பவதாகக் கூறினார்.

தம் குடும்பத்தாருடன் சாந்தினி சுப்பிரமணியம் (இடமிருந்து 2வது).
தம் குடும்பத்தாருடன் சாந்தினி சுப்பிரமணியம் (இடமிருந்து 2வது). - படம்: சாந்தினி

வசதிகுறைந்த பிள்ளைகளுக்குத் துணைப்பாட வகுப்பு நடத்தும் திட்டம், அறிமுகம் செய்யப்பட்டால் உதவியாக இருக்கும் என்ற யோசனையை வசதிகுறைந்த குடும்பத்தைச் சேர்ந்த சாந்தினி சுப்பிரமணியம், 21, முன்வைத்தார்.

“அத்துடன் தரமான உணவகங்கள், அதிக விலை கொண்ட நுழைவுச்சீட்டுகளைக் கோரும் கேளிக்கை இடங்களுக்குச் செல்வதற்கு அரசாங்கம் பற்றுச்சீட்டுகள் கொடுத்தால் நன்றாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.

வசதிகுறைந்தோர் தங்களின் செலவுகளைக் குறைக்கத் தங்களின் ஆசைகளைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டிய நிலையில், இதுபோன்ற உதவியால் பிள்ளைகள் மகிழ்ச்சி கொள்வர்.

இரு மகன்களுடன் ராஜேஸ்வரி தேவி வெங்கடேஷ், 36.
இரு மகன்களுடன் ராஜேஸ்வரி தேவி வெங்கடேஷ், 36. - படம்: ராஜேஸ்வரி

தொடக்கநிலைப் பள்ளியில் படிக்கும் இரண்டு மகன்களுக்குத் தாயாரான ராஜேஸ்வரி தேவி வெங்கடே‌ஷ், 36, தம் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் கணக்கில் கூடுதல் தொகை இருப்பதை விரும்புவதாகக் கூறினார்.

“நான் என் இலக்குகள் தொடர்பான பல ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பாடங்களில் நாட்டம் கொண்டாலும் அவற்றில் சிலவற்றுக்குக் கட்டணம் அதிகமாக இருக்கிறது. வாகனம் ஓட்டக் கற்றுக்கொள்வது போன்றவற்றுக்கும் ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டத்தைப் பயன்படுத்த முடிந்தால் நன்றாக இருக்கும்,” என்றார் உயிர்மருத்துவத் துறையில் பொறியாளராகப் பணியாற்றும் திருவாட்டி ராஜேஸ்வரி.

வீடமைப்புக் கொள்கையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படலாம்

சிங்கப்பூரர்கள் வெளிநாட்டவரைத் திருமணம் செய்துகொள்ளும்போது அவர்களுக்கு வீடு வாங்குவதில் அதிகக் கட்டுப்பாடுகள் இருப்பதாகப் பாலர் பள்ளி ஆசிரியர் அஞ்சனா மனோகரன், 29, தெரிவித்தார். 

பாலர் பள்ளி ஆசிரியர் அஞ்சனா மனோகரன். 
பாலர் பள்ளி ஆசிரியர் அஞ்சனா மனோகரன்.  - படம்: அஞ்சனா மனோகரன்

இவர் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளிநாட்டவர் ஒருவருடன் பதிவுத் திருமணம் செய்துகொண்டதை அடுத்து வீடு வாங்குவதற்கான தெரிவுகள் குறைந்துவிட்டதைச் சுட்டினார்.

கணவர் நிரந்தரவாசம் பெறும்வரை வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்திலிருந்து கடன் பெற முடியாத நிலையில் வங்கிக்கடன் பெறவேண்டும். குடியுரிமை அல்லாத துணைவர் திட்டத்தில் வீடு வாங்குவதற்கு விண்ணப்பிக்கலாம்.

ஆனால், இத்தகைய இணையர்கள் முதிர்ச்சியடையாத வட்டாரங்களில் புதிய ‘பிடிஓ’ வீடுகள் அதாவது தேவைக்கேற்பக் கட்டித்தரப்படும் வீடுகளை மட்டும்தான் வாங்க முடியும். அத்துடன், எக்செக்கியூட்டிவ் கொண்டோமினியம் வீட்டை, வெளிநாட்டு இணையர் நிரந்தரவாசம் பெற்ற பிறகுதான் வாங்க முடியும்.

“நான் சிங்கப்பூரராக இருந்தாலும் என் கணவருக்கு நிரந்தரவாசம் கிடைக்கும் வரை எங்களுக்குப் பிடித்த வீடுகளை வாங்க முடியாமல் இருக்கிறது. இந்த நடைமுறை மாற வேண்டும். இதையொட்டி வரவுசெலவுத் திட்டத்தில் ஏதாவது பகிரப்பட வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்,” என்றார் திருவாட்டி அஞ்சனா.

ஒருமுறை எஞ்சிய வீட்டுக்கும், இரண்டு முறை தேவைக்கேற்பக் கட்டித் தரப்படும் அடுக்குமாடி வீட்டுக்கும் பதிவு செய்திருந்த ஷிரீன் பானு, 28, இன்னும் வீடு வாங்க முடியாத நிலையில் உள்ளார். சிங்கப்பூரரான அவர், திருமணமானோர் மட்டும் பிடிஓ வீடுகளுக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்றார்.

“சிலர் படிக்கும் காலத்திலேயே ஒருவரைக் காதலிக்கும்போது விரைவாக வீடுகளுக்கு விண்ணப்பித்து விடுகிறார்கள். ஆனால், சில நேரங்களில் அது திருமணத்தில் முடிவதில்லை. திருமணமான இணைகள் அவர்களுடன் ஏன் வீட்டுக்காக போட்டி போட வேண்டும்? திருமணம் செய்யாதவர்கள் வீடுகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும், அல்லது அவர்களுக்குத் தனியொரு பிரிவில் வீடுகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறையைக் கொண்டு வரலாம்,” என்று சொன்னார் ஷிரீன்.

உயிர்த் தொழில்நுட்பவியல் துறையில் இருக்கும் நீலா செங்குட்டுவன், 27, சமூகச் சுகாதார உதவித் திட்ட அட்டையை வைத்திருக்கும் நோயாளி ஒருவரின் மாதச் சம்பளத்தை வைத்து அவருக்குக் கிடைக்க வேண்டிய மானியம் மதிப்பிடப்படும் முறை அகற்றப்பட வேண்டும் என்றார். அனைவருக்கும் மானியம் சரிசமமாக வழங்கப்பட வேண்டும் என்பதே அவரது விருப்பம்.

மேலும், ஒற்றையரான அவர், வீடு வாங்க 35 வயது வரை காத்திருப்பதற்குப் பதிலாக அந்த வரம்பு 30 வயதுக்குக் குறைக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என்றார். 

திறன் மேம்பாட்டுக்குக் கூடுதல் உதவி கோரும் இளையர்கள்

ஆர்வமும் துடிப்பும் நிறைந்த இளையர்களின் திறன்களை மேம்படுத்தக் கூடுதல் வழிகளை வரும் வரவுசெலவுத் திட்டம் ஏற்படுத்தலாம் என்று நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் ரேஷ் ரூத் தெரிவித்துள்ளார்.

நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் ரேஷ் ரூத்.
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் ரேஷ் ரூத். - படம்: ரேஷ் ரூத்

கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட உதவி பாராட்டுக்குரியது. ஆயினும், குறைந்த வருமான இளையர்களுக்குக் குறிப்பாகக் கூடுதல் திட்டங்களை அறிமுகம் செய்தால் நன்றாக இருக்கும் என்றார் ரேஷ்.

பணவீக்கத்துடன் பொருள் சேவை வரி அதிகரிப்பின் தாக்கத்தைக் குறைக்கும் உத்தரவாதத் தொகுப்புத் திட்டம் பேரளவில் வரவேற்கப்படுவதாக வணிக இளங்கலைப் பட்டப்படிப்பை மூன்றாம் ஆண்டு பயிலும் பாலமுருகன் சுவேதா, 23, தெரிவித்தார்.

வணிக இளங்கலைப் பட்டப்படிப்பைப் பயிலும் பாலமுருகன் சுவேதா.
வணிக இளங்கலைப் பட்டப்படிப்பைப் பயிலும் பாலமுருகன் சுவேதா. - படம்: பாலமுருகன் சுவேதா

இருந்தபோதும் முதியோருக்குச் சேரவேண்டிய உதவிகள், தொழில்நுட்ப இடைவெளியால் சேர்வதில்லை என்றார் சுவேதா. ஸ்கில்ஸ்ஃபியூச்சர் குறித்த தகவல்கள் பலருக்குத் தெரிந்திருந்தாலும் அது பற்றிய தெளிவான முடிவை எடுப்பதற்கான வழிகாட்டுதல், இந்தச் செயற்கை நுண்ணறிவு யுகத்தில் குறிப்பாக முதியோருக்குத் தேவைப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்