சிங்கப்பூரில் இன, சமய நல்லிணக்கம் பொதுவாக மேம்பட்டிருந்தாலும் இடைவெளிகள் சில இருப்பதாகக் கொள்கை ஆய்வுக் கழகம் பிப்ரவரி 3ஆம் தேதியன்று வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.
சிங்கப்பூரில் இன, சமய நல்லிணக்கம் மிகவும் உயர்ந்த அளவில் இருப்பதாகக் கருத்தாய்வில் பதிலளித்தோரில் ஏறத்தாழ மூன்றில் இருவர் கூறியிருந்தனர். மாறாக, நல்லிணக்கம் மிதமான நிலையில் இருப்பதாகச் சிறுபான்மை இனத்தவர் தெரிவித்திருந்தனர்.
இந்தியர்களைத் திருமணம்வழி உறவினர்களாக ஏற்றுக்கொள்வதாக 62.4 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
மேலும், கருத்தாய்வில் பங்கேற்ற கிட்டத்தட்ட பாதி எண்ணிக்கையினர், பிற இனத்தவருடன் நெருங்கிய நட்பு கொண்டுள்ளனர். ஆயினும், பிற இனத்தவருடன் இந்தியர்களே (84.5 விழுக்காட்டினர்) அதிக அளவில் நட்பு கொள்வதாகத் தெரியவந்துள்ளது.
சிறுபான்மை இனத்தவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு, பெரும்பான்மையினராக உள்ள சீன இனத்தவர் அனைவருக்கும் கிடைப்பதில்லை என்பதும் ஒரு காரணம்.
இதற்கிடையே, வேலையில் ஆள்சேர்ப்பு, பதவி உயர்வு ஆகியவற்றில் பாகுபாட்டை உணர்வோரின் விகிதம் குறைந்துள்ளது. இருந்தாலும், இந்தியர்களிடையே வேலையிடப் பாகுபாடு நிலவுவதை உணர்வதாக 24.2 விழுக்காட்டினர் கூறினர்.
சிங்கப்பூரின் கலாசார பன்முகத்தன்மை குறித்த ஆர்வமும் பொதுவாகச் சமுதாயத்தில் அதிகரித்துள்ளது. முன்னைய தலைமுறைகளைக் காட்டிலும் தற்கால தலைமுறையினருக்குப் பிற இனத்தவருடன் பழகுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர்.
கொவிட்-19 போன்ற நெருக்கடியான காலகட்டங்களில் இந்தியர்கள், தங்கள் சொந்த இனத்தவரை அதிகம் நம்புகின்றனர் என்றும் ஆய்வில் குறிப்பிடப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இந்தக் கருத்தாய்வில் மொழிப்புழக்கம் நுட்பமாக ஆராயப்படவில்லை. இருந்தபோதும், மாண்டரின், மலாய் மொழிகளை அறிந்த இந்திய இனத்தவர், தத்தம் வழிகளில் அம்மொழியைப் புழங்கும் சமூகத்தில் ஒருங்கிணைந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
எண்ணங்களைப் பண்படுத்துதல்
ஷேரன் ரெஜினாவின் தாய்மொழி, தமிழ். இருந்தபோதும் அவர் வளர்ந்த பன்முகக் கலாசாரச் சூழல், அவருக்கு மிகவும் மாறுபட்ட அடையாளக்கூறுகளைத் தந்துள்ளது.
இளம் வயதில் ஆதரவற்றோர் இல்லத்தில் தத்தெடுக்கப்பட்ட தாயார், தமிழைக் காட்டிலும் மாண்டரின், ஹாக்கியன் மொழிகளில் பேச அறிந்துகொண்டார். மலேசியாவைச் சேர்ந்த தந்தை, ஆங்கிலத்திலும் மலாய் மொழியிலும் பேசும் சூழலில் வளர்ந்தவர்.
மனநல ஆலோசகராகவும் முன்னாள் சிறப்புத் தேவை பராமரிப்பாளராகவும் உள்ள ஷேரன், மாண்டரின், மலாய், தமிழ், ஆங்கிலம் என அத்தனை மொழிகளிலும் பேசுபவர்.
தொடக்கப்பள்ளியிலும் உயர்நிலைப்பள்ளியிலும் தமிழ் வகுப்புகள் இல்லாத சூழலில் தமிழ் மொழி நிலையங்களுக்குச் சென்று தமிழ் கற்ற அனுபவத்தை நினைவுகூர்ந்தார் அவர்.
“நான் தட்டுத் தடுமாறித்தான் தமிழ் படித்தேன். ஆனால், எனக்குத் தமிழ்ப்பற்று இல்லை என்று நினைத்த ஆசிரியர், பிற மாணவர்களையும் என்னிடம் பேசாதிருக்கும்படி கூறினார்,” என்றார் குமாரி ஷேரன்.
இருப்பினும், காலப்போக்கில் அவரது பேச்சுத்தமிழ் மேம்பட்டது. தமிழ்ப் பண்பாட்டையும் ஆன்மிகத்தையும் விரும்பும் ஷேரன், தமிழகத்திலும் புதிய நட்புவட்டத்தை உருவாக்கியுள்ளார்.
இருந்தபோதும், பிற தமிழர்களின் கேலிக்கு ஆளான சம்பவங்கள் அவரது மனதில் வடுக்களாக நிலைபெற்றன.
ஒரே இனத்தவரால், குறிப்பாக ஆண்களால் சொல்வதைக்கு ஆளான பல நேரங்களில் பிற இனத்தவர் தமக்கு ஆதரவாக முன்வந்ததை அவர் உணர்ந்தார். வேறு சில தருணங்களில் பிற இனத்தவராலும் வசைச்சொற்களால் தாக்கப்பட்டார்.
இருந்தபோதும், பாகுபாடு பார்க்கும் குணம் என்பது அவரவர் தன்மையைப் பொறுத்ததே தவிர அந்த குணம், எந்தக் குறிப்பிட்ட இனத்தவருக்கும் அதிகமாகவோ குறைவாகவோ இல்லை என்பது இவரது ஆணித்தரமான நிலைப்பாடு.
சீனம், மலாய் மொழிகளைத் தாம் அறிந்திருப்பதால் வேலையிடத்தில் சக ஊழியர்கள் அம்மொழிகளில் பேசும்போது தாம் புறக்கணிக்கப்படுவதாக உணரவில்லை எனக் கூறினார். இருந்தபோதும் சீனம், மலாய் மொழிகளை அறிந்திராத தம்முடைய இந்திய நண்பர்களின் உணர்வுகளையும் தம்மால் நன்கு புரிந்துகொள்ள முடிவதாகக் கூறினார் அவர்.
ஒற்றையராக உள்ள குமாரி ஷேரனுக்கு, தம் சீனத் தோழியின் இரண்டு மகள்களான ஒன்பது வயது கெய்லின் சியூ, ஐந்து வயது நரிசா சியூ இருவரும் மனதுக்கு மிக நெருக்கமானவர்கள்.
ஆப்பிரிக்க கறுப்பினத்து தோழி ஒருவர் தம் வீட்டுக்கு வந்திருந்தபோது அவரையும் தம்மையும் பார்த்த கெய்லின், “நீங்கள் இருவருமே அழகாக இருக்கிறீர்கள்,” என ஒருவித ஏக்கத்துடன் கூறியதை நினைவுகூர்ந்தார் ஷேரன்.
“என் மகளாக நான் கருதும் இந்த சீன இனத்து சிறுமி, அந்தச் சூழலில் சிறுபான்மை இனத்தவராகத் தன்னைக் கருதியதை நான் உணர்ந்தேன்,” என்று கூறினார்.
பண்பாடு என்பது என்ன, எதற்காக என்பதை அனைவரும் சற்று எண்ணிப் பார்க்கவேண்டும் என்பது இவரது வேண்டுகோள். மனதைப் புண்படுத்துவதற்குப் பதிலாக பண்படுத்துவது, எண்ணங்களைப் பதப்படுத்தி அறம்சார்ந்த சொற்களையும் செயல்களையும் வெளிப்படுத்துவதே உண்மையான பண்பாடு என்று குமாரி ஷேரன் கூறினார்.
“இந்தியப் பெண்ணாக நான் இருப்பதற்கு, குறிப்பிட்ட சில தகுதிகளை அடைந்திருக்க வேண்டியதில்லை. நான் நானாகவே இருக்கிறேன். எனது வளர்ப்பில் எனக்கு இந்தியப் பண்பாடு கற்பிக்கப்படவில்லை என்றாலும் பிற்காலத்தில் நான் அதனைப் பற்றி நல்ல பண்புள்ளவர்களின்மூலம் கற்றுக்கொண்டேன்,” என்று அவர் கூறினார்.
“அறுபதாம் பிறந்தநாளைக் கொண்டாடும் சிங்கப்பூர், அதன் சுதந்திரத்திற்கு முந்திய காலகட்டத்தில் பெரும்பாலும் எளிய மக்கள் நிறைந்த நிலமாக இருந்தது. அந்தக் காலத்தில் அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாமல் இருந்தது. ஈரச்சந்தைகளில் பேரம் பேசப் பயன்படுத்தப்படும் எளிய மலாய் சொற்களையே புழங்கினர். ஒன்றாக எல்லாரும் வாழவில்லையா? மனது வைத்தால், மனித நேயம் கூடினால், இனம் பாராமல் பழகும் சமுதாயம் உருவாகும்,” என்றார் அவர்.
சீனப் பண்பாடும் தமிழ் உணர்வும்
பசித்திருக்கும் பேய்கள் விழாவுக்காக ‘தாவோயிஸ்டு’ சீனர்கள், தங்கள் முன்னோரின் நலன் வேண்டி காகிதக் கட்டுகளை எரிப்பது வழக்கம். இந்த வழக்கத்தால் ஏற்படும் காற்றுத் தூய்மைக் கேட்டால் பிறர் அதிருப்தி தெரிவிப்பதையும் அறிக்கை குறிப்பிட்டது.
ஆயினும், இந்தியர்களாகத் தோற்றமளிக்கும் தாயாரும் மகளுமான தாங்கள் இவ்வாறு காகிதம் எரிப்பதைச் சுற்றியுள்ளோர் வியந்து பார்ப்பதாகக் கூறினார் ஜெயந்தி சுகு, 52.
வளரும் பருவத்தில் மற்றவர்கள் தாம் மலாய் இனத்தவர் என்றுகூட நினைத்ததாகக் கூறினார் அவர்.
“என் தாயார் இந்தியக் குடும்பத்தினரால் தத்தெடுக்கப்பட்ட சீனர். என் தந்தை, தமிழர். சீனருக்கும் இந்தியருக்கும் உரிய தோற்றக்கூறுகள் இருப்பதால் என்னைப் பிறரால் எளிதில் வகைப்படுத்த முடியவில்லை,” என்றார் அவர்.
தாயாரின் ரத்த உறவினர்கள் சீனர்களாக இருப்பதால் இந்திய கலாசாரத்துடன் சீனப் பாரம்பரியத்தையும் தாம் அறிந்திருப்பதாகக் கூறினார்.
சீனர்கள் தங்கள் இனத்தவரைப் பொதுவாகவே அரவணைப்பதைக் கண்கூடாய்க் காண்பதாகக் கூறினார். குறிப்பாக, குடும்பத்தினருக்கு இடையிலான உறவு மிகவும் நெருக்கமாக இருக்கும் என்பது இவரது அனுபவமாக உள்ளது.
ஆய்வறிக்கையின்படி இந்திய இளையர்களிடையே பரஸ்பர நம்பிக்கை நிலவுவதைக் கண்டு மகிழ்ந்தார் அவர். எண்ணப்போக்கு மாறிவருவதை இந்தப் புள்ளிவிவரங்கள் காண்பிப்பதாக அவர் தெரிவித்தார்.
நிதித்துறையில் தற்போது பணியாற்றும் திருவாட்டி ஜெயந்தி, தொடக்கத்தில் வேலை தேடலில் தாம் சிரமத்தை எதிர்நோக்கியதாகக் கூறினார்.
“நேர்காணலின்போதுதான் என் தாயார் சீன இனத்தவர் எனச் சொல்வேன். எனக்கு மாண்டரின் பேசத் தெரியும் ஆனால் எழுதப் படிக்கத் தெரியாது என்பேன். பேசத் தெரிந்தாலே வேலை கிடைத்துவிடுகிறது,” என்று குறிப்பிட்டார்.
இருந்தபோதும், திருவாட்டி ஜெயந்தி, தம்மை இந்தியர் எனக் கருதுவதால் இந்நிலையால் அதிருப்தியை உணர்வதாகக் கூறுகிறார்.
“சீன மொழியில் என்னால் பேச முடியும் என்றாலும் உள்ளத்திலும் உணர்விலும் தமிழராக இருக்கிறேன்,” என்று அவர் கூறினார்.
தமிழ்ப் பழமொழிகளைக் கற்று மொழிச்செறிவைச் சுவைப்பதில் இன்பம் காணும் திருவாட்டி ஜெயந்தி, பரதநாட்டியத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு அதனைப் பல்லாண்டுகளாகக் கற்று வந்துள்ளார். தமிழ்ப் பண்பாட்டை ஆழமாகச் சுவைப்பதால் பிற இனத்துப் பண்பாட்டின் நுட்பங்களை உள்வாங்க முடிவதாகக் கூறினார்.
“இளையர்கள் பிறர் பண்பாட்டைப் புரிந்துகொள்ள முற்படுவதைக் கண்டு மகிழ்கிறேன். ஆயினும், தங்களது சொந்தப் பண்பாட்டை பிறருக்கும் எடுத்துச் செல்லக்கூடிய நிலையில் இளையர்கள் இருப்பதும் முக்கியம்,” என்றார்.
பிறருக்கு வாய்ப்பு வழங்குங்கள்; புரிந்துணர்வு காட்டுங்கள்
தமது தாய்மொழியான தமிழுடன் ஆங்கிலம், மாண்டரின், மலாய் மொழிகளைப் பேசத் தெரிந்துள்ள தாஸ் டிடி, எந்த இனத்து நண்பராக இருந்தாலும் அவரது விருப்பங்களைப் புரிந்துகொண்டு இயல்பாக இருக்கும்படி தாம் ஊக்குவிப்பதாகக் கூறினார்.
தாெலைக்காட்சிப் படைப்பாளர், நடிகர், நகைச்சுவைக் கலைஞர் எனப் பன்முகத்திறன் கொண்டுள்ள தாஸ், டிக்டாக், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட தளங்களில் காணொளிகளிலும் வலையொளி நிகழ்ச்சிகளிலும் இடம்பெற்றுள்ளார்.
பிற இனத்தவருடன் அவர்களது மொழியில் பேசுவதன்மூலம் அவர்களது தயக்கம் குறைவதையும் நெருக்கம் அதிகரிப்பதையும் தாம் உணர்வதாகக் கூறினார்.
வீட்டில் தமிழ் பேசி பள்ளியில் மாண்டரின் கற்றுக்கொண்ட தாஸ், தேசிய சேவையின்போது அங்குள்ள நண்பர்களுடன் மலாய் மொழியில் பேசப் பழகிக்கொண்டார்.
சிங்கப்பூரில் இளையர்கள் பலருக்கு ஆங்கிலப் புழக்கம் சரளமாக இருந்தாலும் கணிசமான எண்ணிக்கையில் தங்கள் தாய்மொழியில் பேசுகின்றனர். ஆங்கிலத்தைக் காட்டிலும் அவர்கள் மாண்டரின் அல்லது மலாய் மொழிகளில் சுமுகமாகப் பேசுகின்றனர். அவர்களில் பலர் தம் வயதை ஒத்தவர்கள் என்றார் தாஸ்.
பிற இனத்தவருடன் இந்தியர்கள் உரையாடிப் பழகுவதற்கு வாய்ப்புகள் அதிகம் ஏற்பட்டாலும் மற்ற இனத்தவர்களுக்கு, குறிப்பாக சீனர்களுக்கு, குறைவுதான் என்ற உண்மை நிலையை திரு தாஸ் விளக்கினார்.
“தேசிய தினப் பாடல்களில் ஒன்றான ‘முன்னேறு வாலிபா’வைத் தவிர வேறு எந்த தமிழ் பாடலையும் பிற இனத்தவர் கேட்டிருக்கமாட்டார்கள். வேறு சிலரோ என்னிடம், எனக்கு தெரிந்த ஒரே இந்தியர் நீங்கள்தான் எனச் சொன்னதுண்டு. இந்தியர்களாகிய நாம் இவற்றைக் கேட்டு எரிச்சல் அடையக்கூடும். ஆனால், இந்நிலை பழக்கத்தினால் ஏற்பட்டுள்ளது என்றும் அதை இனவாத உணர்வாக நாம் கருதக்கூடாது என்றும் நான் நினைக்கிறேன்,” என்று அவர் சுட்டினார்.
மாண்டரின், மலாய் ஆகிய மொழிகளில் அந்தந்த இனத்தாருடன் பேசும்போது ஒருவித இடைவெளி குறைவதாகச் சொன்னார் தாஸ்.
“எனது மாண்டரின் மொழிக் காணொளிகளைப் பார்க்கும் சீன இளையர்களில் சிலர் என்னிடம் தீபாவளியைப் பற்றியும் தமிழ்ப் பாடல்களைப் பற்றியும் கேட்பது உண்டு,” என்றார் திரு தாஸ்.
உறவுப் பாலங்களை உருவாக்கும் பன்மொழித்திறன்
பிற இனத்தவருடன் நெருக்கத்தை வளர்த்துக்கொள்வதற்கு மொழி ஒரு வழி. சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தினரில் சிலர் மாண்டரின் மொழியையும் மலாய் மொழியையும் விரும்பித் தேர்ந்தெடுக்கின்றனர்.
வேறு சிலரது வளர்ப்புச் சூழலில் தமிழ் புழக்கத்தில் இருந்திருக்காது. சூழல் காரணமாக தமிழர்களில் சிலருக்கு மற்ற மொழிகளின் புழக்கம் ஏற்பட்டிருக்கக்கூடும். தமிழர், இந்தியர் போன்ற ஒருவரது அடையாளம் மேலும் கட்டுப்படுத்தப்படுவது இன்றைய உலக நடைமுறைக்கும் உலகத்துடனான இணைப்புகளைத் தொடர்ந்து சிங்கப்பூரின் சிந்தனைப்போக்கிற்கும் பொருந்தாது.
இந்தியர்களின் இன, சமய பன்முகத்தன்மை சிங்கப்பூரின் பலமாக உள்ளது. நம் பின்புலம் எதுவாக இருந்தாலும், அது பற்றி நாம் பெருமைப்படவேண்டும் என்று தமது தமிழ்ப் புழக்கமின்மை குறித்து அதிபர் தர்மன் 2023ல் தமிழ் முரசின் ‘தோசை பிரேக்ஃபஸ்ட் கிளப்’ சமூகக் கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது கூறினார்.
பிழைகளும் மோதல்களும் பல நேரங்களில் அறியாமையாலும் குறுகிய மனப்பான்மையாலும் ஏற்படுகின்றன. அதைக் கருத்தில் கொண்டு சிறிய சமூகமாக இருக்கும் நாம், மனத்தளவிலும் செயல் அளவிலும் பெரும் சிரத்தை எடுத்து பிற இனத்தவரைப் புரிந்து நடந்துகொள்ளும் பாங்கு தொடங்கட்டும்; தொடரட்டும்.

