இலங்கை குண்டு வெடிப்பு: அதிர்ச்சி, அச்சம், துக்கம், குழப்பம்

வெளியில் செல்லாமல் நான்கு நாட்களாக வீட்டில் இருப்பதைச் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த சுதா‌ஷினி கையிருப்பு முடிந்ததும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வெள்ளிக்கிழமை வெளியில் வந்தபோது அவரையறியாமல் உடல் நடுங் கியது. அடைத்துக் கிடக்கும் வீடுகள், கடைகள், சாலைகளில் ஆயுதங்களுடன் நடமாடும் பாதுகாப்புப் படையினர் எல்லாம் 2009க்கு முன்னிருந்த நிலையை அவருக்கு நினைவூட்டியது. கணவர் வெளிநாட்டில் வசிப்பதால் பல்கலைக் கழகத்தில் படிக்கும் 20 வயது மகளுடன் கொழும்பில் தனியாக வாழும் 50 வயது சுதா‌ஷினி, இனி என்ன நடக்கும் என்ற கவலையில் தூக்கமின்றித் தவிக்கிறார்.
"கொழும்பில் மட்டுமல்ல, நாடு முழுவதிலும் மக்கள் பெரும் அச்சத்துடன் தான் வாழ்கிறார்கள்," என்றார் தினக்குரல் வாரமலர் பத்திரிகையின் ஆசிரியர் திரு பாரதி.
"மக்கள் போக்குவரத்தைத் தவிர்க்கி றார்கள். பெரும்பாலான வர்த்தகர்கள் கடைகளைத் திறக்கத் தயங்குகிறார்கள். வீடுகளை விட்டு வெளியில் வரவே பயப்படுகிறார்கள். நாடெங்கும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு, சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக னங்களும் பயணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்," என்று அவர் நிலைமையை விவரித்தார்.

மீண்டும் இனக்கலவரமா - மக்கள் பயம்
"பொதுமக்கள் கோபத்தில் உள்ளனர். மேற்கொண்டு பயங்கரவாதத் தாக்குதல் கள் இடம்பெறலாம் என்ற அச்சம் ஒருபக்கம் இருக்க, அது இனக் கலவரத் துக்கு இட்டுச் செல்லுமோ என்ற பயத்தில் உள்ளனர். எனது தமிழ் நண்பர்களும் நானும் எங்கள் முஸ்லிம் தோழர்களின் பாதுகாப்பைப் பற்றி அச்சப்படுவதுடன் நாட்டைப் பற்றியும் கவலையுறுகிறோம். பயங்கரவாதத் தாக்குதல்களை நாங்கள் போதும் என்று சொல்லும் அளவுக்கு பார்த்துவிட்டோம். ஆனால், கோபம் பொல்லாதது, மனித உணர்வுகளைத் தூண்டக்கூடியது. மக்கள் நாட்டுப் பொருளியலை நினைத்தும் பயப்படுகின்ற னர். மோசமாக இருக்கும் நாட்டின் பொருளியல் மேலும், குறிப்பாக, அந்நிய செலாவணியை ஈட்டித் தருவதில் முதலிடம் வகிக்கும் பயணத்துறை வீழ்ச் சியடையும் என அஞ்சுகிறோம்," என்றார் திரு அருண் கிருஷ்ணமூர்த்தி.
"பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் செல்லும் நேரத்தை குறைத்துக் கொள்ளும்படி போலிஸ் அறிவுறுத்தி யுள்ளது. இதை மேலும் குறைக்கும் வண்ணம் இரவு நேரங்களில் ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலநேரம் விசாரணையில் தெரியவரும் தகவல்களின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற் கொள்வதுடன் இனக் கலவரம் வராமல் பார்த்துக்கொள்ளவும் பயன்படுத்தப்படு கிறது. சமூக ஊடகங்களும் தடை செய் யப்பட்டுள்ளன," என்றார் அவர்.
சென்ற ஞாயிற்றுக்கிழமை நடந்த குண்டு வெடிப்புக்களில் இதுவரை 290 பேர் உயிரிழந்தனர், 500 பேர் வரையில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அங்கு உள்நாட்டுப் போர் முடிந்து 10 ஆண்டுகளில் நடந்த அந்த மோசமான தற்கொலைப் படை தாக்குதல்களுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலை யில், நேற்றும் நேற்றுமுன்தினமும் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளில் மேலும் பலர் உயிரிழந்துள்ளனர்.

நீறுபூத்த நெருப்பாக நீடிக்கும் பதற்றம்
இலங்கையில் அண்மைய ஆண்டு களில் பெரும்பான்மை பௌத்த சமூகத் துக்கும் சிறுபான்மை முஸ்லிம், கிறிஸ்துவ இனத்தவருக்கும் இடையே மோதல்கள் நிகழ்ந்துள்ள நிலையில் நடந்த குண்டு வெடிப்புத் தாக்குதல்கள் நாட்டில் பல சமயத்தவரிடையே நீறுபூத்த நெருப்பாக இன்னமும் நீடிக்கும் பதற்றம் மேலும் மோசமடையலாம் என்ற கவலை உள்ளது.
இலங்கையின் 22 மில்லியன் மக்களில் 70% பௌத்தர்கள், 12.6% இந்துக்கள், 9.7% முஸ்லிம்கள், 7.6% கிறிஸ்துவர்கள் என்று 2012ஆம் ஆண்டு மேற்கொள் ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இதில் 6 விழுக்காட்டினர் மட்டுமே கத்தோலிக்கர்கள் என்று கூறப் பட்டாலும் இந்தப் பிரிவு சிறுபான்மை தமிழர்களுடன் பெரும்பான்மை சிங்களப் பிரிவுகளையும் கொண்டிருப்பதால் இது மக்களை ஒருமைப்படுத்தும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால், அவர்கள் தாக்கப்பட்டிருப்பது எவரும் எதிர்பார்க்காத ஒன்று.
இலங்கையை உலுக்கியுள்ள தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் மிலேச்சத்தனமானவை என்று கூறிய இலங்கையில் நாட்டின் மூத்த இலக்கிய வாதியும் ஓய்வு பெற்ற பேராசிரியருமான எம்.ஏ. நுஃமான்; "இவ்வாறான தாக்கு தல்கள் இஸ்லாத்துக்கு விரோதமானவை" என்றும் தெரிவித்தார்.
முஸ்லிம்கள் மிகவும் பதற்றமாக உள்ளனர். நாங்கள் கவனமாக இந்தத் தருணத்தில் இருக்க வேண்டியுள்ளது. இனக் கலவரங்களோ, மதக் கலவரங்களோ இதனைத் தொடர்ந்து வந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளது.
இவ்வாறான தாக்குதலை நடத்தும் ஆற்றல், உள்ளுரைச் சேர்ந்தோருக்கு எப்படி வந்தது என்கிற கேள்வி உள்ளது. பெரிய வலைப்பின்னலுடன்தான் இது நடந்துள்ளதுபோல் தெரிகிறது. ஆனாலும், உடனடியாக எதையும் நம்மால் கூற முடியாது. ஆனால், கிறிஸ்தவர் களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில், நான் அறிந்த வரையில் இலங்கையில் பிரச்சி னைகள் இருந்ததில்லை," என்றார் அவர்.

அனைத்துலக சமூகத்திற்கு பீதி ஏற்படுத்தும் செயல்
"தேவாலயங்களும் விடுதிகளும் வெளிநாட்டினரைக் குறிக்கும் சின்னங் களாக இருக்கின்றன. அவற்றைக் தாக்கு வது அனைத்துலக சமூகத்திற்கு பீதியை ஏற்படுத்தக்கூடியது. சில விஷயங்கள் அரசியலுக்கும் அப்பாற்பட்டது, அதில் ஒன்று தேசிய பாதுகாப்பு. அரசியலில் எந்த பிரச்சினைகள் இருந்தாலும் தேசிய பாது காப்பை முன்னிலைப்படுத்தி அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். இலங்கையின் அண்மைய வரலாற்றில் முஸ்லிம்களுக்கும் பௌத்த சமயத்திற்கும் எதிராக வன்முறை நடத்தப்பட்டுள்ளது, போர் முடிந்தபோதும் இலங்கையில் அவ்வப்போது கொடூரமான சம்பவங்கள் நிகழ்கின்றன. இந்த பயங்கரவாத சம்பவம் நடந்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம். எதிர்காலத்தில் சிறுபான்மையினர் இது போன்ற பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இரை ஆகாமல் இலங்கை அரசாங்கம் கவனமாக இருக்கவேண்டும்," என்றார் எஸ்.ராஜரத்னம் அனைத்துலக கல்வி ஆய்வுக்கழகத்தின் தேசிய பாதுகாப்பு மையத்தின் ஆய்வாளர் திரு பிரவின் பிரகாஷ், 30.
தற்பொழுது வரும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது அமெரிக்க, இந்திய உளவுத் துறைகள் தாக்குதல் நடக்குமென்று எச்சரித்ததாகத் தெரி கிறது. தாக்குதல் குறித்து முன்கூட்டியே அதிகாரிகள் எச்சரிக்கப்பட்டதை அவர்கள் அமைச்சரவையுடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இதுபோன்ற கருத்துப் பரிமாற்றம் அதிபருடன் மட்டும் தான் நடைபெறும் என்று அவர் கூறுகிறார். ஆனால், இதைப் பொறுத்தவரை அவ்வாறு நடந்ததா என்று தமக்கு தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிபருக்கும் பிரதமருக்கும் இடையே நிலவும் இந்த மோதல்போக்கு எத்தகைய கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதுடன் இது வெளிவரும் தகவல்களின் நம்பகத்தன்மையையும் பாதிப்பதாக உள்ளது என்ற முடிவுக்கு பலரும் வரத் தொடங்கியுள்ளனர்.
இந்தத் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம்கள் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. அப்படியென்றால், இது இலங்கை உளவுத் துறையின் மிகப் பெரிய தோல்வி என்றே கூறவேண்டும்.
"இந்த எச்சரிக்கை இலங்கை பாது காப்பு, போலிஸ் துறைகளுக்கு முறையாகத் தெரிவிக்கப்பட்டதாக அறிகிறோம்," என் றார் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மூத்த ஆலோசகரான ‌ஷிரால் லக்திலக.
இலங்கை உளவுத் துறை எவ்வாறு இதைத் தவறவிட்டது என்பதைக் கண்ட றிய அதிபர், குழு ஒன்றை அமைத்துள்ளார்.

சிதறிய நம்பிக்கை
மட்டக்களப்பு ஸியோன் தேவாலயத்தில் நடந்த தாக்குதலில் பலியான சசிகுமாரின் இறுதிச்சடங்கிற்குச் சென்று வந்த அவரது உறவினர் பேசுவதற்கு மிகவும் வேதனைப் பட்டார். இந்துவான அவர் தமது பெயரை குமாரி என்று மட்டுமே கூறினார்.
"சசிகுமார் எங்கள் உறவினர். எங்களுக்குள் மத வேறுபாடு எதுவும் இல்லை. மட்டக்களப்பு நகர் பகுதியில் முஸ்லிம்கள், தமிழ் மக்கள், சிங்களவர் களுடன் கிறிஸ்வர்களும் வாழ்கிறார்கள். யாருக்கும் இதுவரை எந்தப் பிரச்சினையும் இருந்ததில்லை," என்றார் அவர்.
ஈஸ்டர் அன்று சசிகுமாரின் மனைவி தர்‌ஷினி எட்டு வயது மகளுடன் தேவாலயத்துக்குள் சென்றுவிட, மகனுடன் வாசலில் நின்ற 35 வயது சசிகுமாரும் 14 வயது மகன் நேருஜனும் குண்டு வெடிப் பில் உயிரிழந்தனர். "மகளுடன் இளம் பெண்ணான தர்‌ஷினி இனிமேல் மட்டக் களப்பில் தனியாக வாழவேண்டும்," என்று கவலையுடன் கூறினார் குமாரி.

சிங்கப்பூரில் பணிபுரியும் இலங்கைப் பெண்ணின் கவலை
கடந்த 12 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வீட்டுப் பணிப்பெண் வேலையில் ஈடுபட்டு வரும் திருமதி ஸ்ரீதேவி சுரே‌ஷ் குமார் இலங்கையின் சிலாபம் பகுதியைச் சேர்ந் தவர். ஈஸ்டர் தினத்தில் தமது தோழி திருமதி சந்திரகுமாரியை இழந்த அவர் சொல்லமுடியாத துக்கத்திலும் பயத்திலும் உள்ளார்.
திருமதி சந்திரகுமாரி நீர்கொழும்பு புனித செபாஸ்டியன் தேவாலயத்திற்கு குடும்பத்தோடு சென்றிருந்தார். குண்டு வெடிப்பில், திருமதி சந்திரகுமாரி, அவரது கணவர், 8, 12 வயதுகளில் இருந்த மகள்கள், 6 மாத ஆண் கைக் குழந்தை என ஒட்டுமொத்த குடும்பமே தாக்கு தலுக்குப் பலியாகிவிட்டது.
சுயதொழில் செய்யும் தமது கணவர் மூலம் சம்பவம் குறித்து அறிந்த அவர் தற்போது அங்கு குழப்பான நிலையில் மக்கள் உள்ளனர் என்றார்.
"இந்த அசம்பாவிதத்தில் அரசின் பங்கும் இருக்கலாம் என்ற சந்தேகம் மக் களிடையே நிலவுகிறது. போலிஸ் பாது காப்பு இருந்தாலும் வெளியே செல்ல தயக்கம் உள்ளது. அடுத்தது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. கல்லூரி செல்லும் எனது 21 வயது மகன் பாது காப்பாக உள்ளாரா என்ற ஐயம் வந்து கொண்டே இருக்கிறது," எனத் தினமும் தொலைபேசி வழி கணவரிட மிருந்து தகவல்பெற்று வரும் திருமதி ஸ்ரீதேவி கூறினார்.

விசாரணைகள், மீட்புப் பணிகளுக்கும் வெடிபொருட்களைக் கண்டறிதல், தடய வியல் பகுப்பாய்வுகள் உள்ளிட்ட நடவடிக் கைகளில் அமெரிக்கா இலங்கைக்கு உதவிவருகிறது. மேலும், அங்கு வெடிகுண்டு நிபுணர்கள், பயங்கரவாத தாக்குதல்களில் நிபுணத்துவம் பெற்ற வர்கள் உள்ளடங்கிய தேசிய பாதுகாப்புக் குழுவொன்றை அனுப்ப இந்தியா திட்ட மிட்டுள்ளது என இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!