கழிவுநீக்கத்தில் புத்தாக்கம்

பொதுவாக, கழிவறை வடிவமைப்பு தொடர்பில் எவரும் பேசிக்கொள்ள மாட்டார்கள். ஆனால், 2017ஆம் ஆண்டில் ‘லிங்க்ட்இன்’ சமூக ஊடகம் வழியாக அறிமுகமானதில் இருந்து சிங்கப்பூரரான ஜாக் சிம்மும் இந்தியரான சத்யஜித் மிட்டலும் ஓராண்டு காலத்திற்கும் மேல் இதைப்பற்றி விவாதித்து வந்துள்ளனர்.
உலகக் கழிவறை அமைப்பின் நிறுவனரும் தலைவருமான 62 வயது ஜாக் சிம்முக்கு உலகம் முழுவதும் சுத்தமான கழிவறைகளை வழங்கவேண்டும் என்பதே குறிக்கோள்.
தமது நாட்டில் வாழும் வசதி குறைந்த மக்களுக்கு மலிவான விலையில், அதே நேரத்தில் நீடித்து உழைக்கக்கூடிய கழிவறைகளை அமைத்துத் தர விரும்புகிறார் தொழில் முனைவரான சத்யஜித் மிட்டல், 26.

உந்துதல் அளித்த உரைகள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2014ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரின் மேடிசன் சதுக்கத்தில் ஆற்றிய உரையால் உந்தப்பட்டார் திரு சத்யஜித். இந்தியாவில் தூய்மையைப் பேண வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பிரசாரத்தைத் தாம் தொடங்கியிருப்பதாகக் குறிப்பிட்ட திரு மோடி, “அது பிரதமரின் வேலையா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், கழிவறைகளை அமைத்துத் தர வேண்டும் என நான் முடிவுசெய்திருக்கிறேன்,” என்றும் பேசினார்.
அவரது இப்பேச்சு திரு சத்யஜித்திடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
“பிரதமர் மோடிக்கு என்ன ஆகிவிட்டது? அமெரிக்காவிற்குச் சென்றுள்ள அவர், பொருளியலைப் பற்றிப் பேசாமல் ஏன் கழிவறைகளைப் பற்றிப் பேசுகிறார் என்று நான் அப்போது நினைத்தேன்,” என்றார் திரு சத்யஜித்.
இதேபோன்று, திரு சிம்முக்கும் உந்துதலாக அமைந்தவர் ஒரு பிரதமர்தான். சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் கோ சோக் டோங் 1990களில் ஆற்றிய ஓர் உரை திரு சிம்மிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
“கழிவறைகளை எவ்வளவு தூய்மையாக வைத்திருக்கிறார்கள் என்பதைக் கொண்டே ஒரு சமுதாயத்தின் கனிவுடைமையை மதிப்பிட முடியும்,” என்று திரு கோ பேசி
இருந்தார்.
“அவரது பேச்சு, என்னைக் கழிவறைகள் குறித்து சிந்திக்க வைத்தது. அதனால்தான், சிங்கப்பூரிலும் உலகம் முழுவதிலும் கழிவறைகளின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் ‘சிங்கப்பூர் கழிவறைகள் சங்கத்தை’ நான் தொடங்கினேன்,” என்றார் திரு சிம்.
வசதிகுறைந்த குடும்பத்தில் பிறந்தபோதும் கல்வியில் சிறந்து விளங்காதபோதும் 30 வயதை எட்டும் முன்னரே வெற்றிகரமான தொழிலதிபராக உருவெடுத்தார் திரு சிம். 40 வயதிற்குள் போதுமான செல்வத்தைச் சேர்த்துவிட்டதால், சமூகத் தொண்டு மூலம் சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துவது எனத் தீர்மானித்தார்.
இவர் ‘உலகக் கழிவறை அமைப்பைத்’ தொடங்கிய நாளான நவம்பர் 19ஆம் தேதியே உலகக் கழிவறை நாளாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இணைந்த கைகள்

சமூகத்திற்குத் தம்மாலானதைச் செய்ய வேண்டும் என்ற ஒத்த சிந்தனை திரு சத்யஜித்தையும் திரு சிம்மையும் ஒன்றிணைத்தது.
இருவரும் இணைந்து 2018ஆம் ஆண்டில் ‘சனோஷன் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். உலகெங்கும் வாழும் மக்களுக்குப் புதுமையான கழிவறைகளை வழங்கவேண்டும் என்பதே அதன் நோக்கம்.
குந்தவைத்து (squat) மலம் கழிப்பதே இயற்கையான கழிவுநீக்க வழி என்பதால் அதைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இவ்விருவரும் விரும்பினர்.
‘ஸ்குவாட்ஈஸ் (SquatEase)’ எனப்படும் கால்களைத் தளர்த்திக் குந்த வைத்துச் செல்லக்கூடிய, சற்றே உயர்த்தப்பட்ட மேடையுடன் கூடிய இந்திய வகை கழிவறைத் தொட்டிகளை சனோஷன் நிறுவனம் பிரத்தியேகமாக வடிவமைத்து, தயாரித்து வருகிறது. அது, இந்த மாதம் 9, 10ஆம் தேதிகளில் மரீனா பே சேண்ட்ஸ் கண்காட்சி, மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இந்தியா-சிங்கப்பூர் வர்த்தக, புத்தாக்க உச்சநிலை மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
இப்படிக் குந்த வைத்து கழிவகற்றும்போது உடல் எடை சமமாகப் பரவுவதால் வலி எதுவும் ஏற்படாது என்பதால் அந்தப் பிரத்தியேக இந்திய வகை ‘ஸ்குவாட்ஈஸ்’ கழிவறைத் தொட்டியை திரு சத்யஜித் வடிவமைத்ததாகக் குறிப்பிட்டார் திரு சிம்.
“உடற்குறையுள்ளோரும் இந்தக் கழிவறைத் தொட்டியைப் பயன்
படுத்த முடியும். முழங்கால் வலி, எலும்பு பாதிப்பு உள்ளவர்களும் பார்வைத்திறன் அற்றவர்களும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் இந்தக் கழிவறைத் தொட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்றார் அவர்.
“சரிவான கால்மேடையுடன் இருப்பதால் எந்தப் பக்கமாக அமர்வது என்ற குழப்பமும் இருக்காது. பராமரிக்கவும் எளிதானது. ஒரே ஒருமுறை ‘ஃபிளஷ்’ செய்தால் போதும்,” என்றும் அவர் சொன்னார்.

உருக்கொண்டது ‘சனோஷன்’

கடந்த ஆண்டு பிப்ரவரி 25ஆம் தேதி இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியின் முகப்பறையில் ‘சனோஷன்’ நிறுவனத்தைத் தொடங்குவதற்கான அடித்தளம் அமைக்கப்
பட்டது.
‘ஸ்குவாட்ஈஸ்’ கழிவறைத் தொட்டியின் மூலமாதிரியைத் தம்மிடம் காட்டும்படி திரு சத்யஜித்திடம் கேட்டார் திரு சிம். அதையடுத்து, திரு சத்யஜித்திடம் அந்தக் கழிவறைத் தொட்டியை எடுத்துக்காட்ட, அவ்விடத்திலேயே திரு சிம் அதில் குந்தவைத்துப் பார்த்தார்.
“கழிவறைகள் மீது திரு சிம்மின் பேரார்வம் குறித்து கேள்விப்பட்டிருந்தேன். ஆனால், அதை அப்போதுதான் முதன்முதலாக நேரில் பார்த்தேன்,” என்று ஒன்றரை ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த அச்சம்பவம் குறித்து வியப்பு அகலாமல் சொன்னார் திரு சத்யஜித்.
“எனது யோசனை குறித்து தொலைபேசி வழியாக திரு சிம்மிடம் பேசியிருந்தேன். ஆனால், அதற்கான மாதிரியைக் காட்டும்படி அவர் கேட்டார். அப்போது நான் ஒரு கழிவறைத்தொட்டியைக்கூட உருவாக்கியிருக்கவில்லை. அந்த மூலமாதிரியை உருவாக்க எனக்கு ஓராண்டு காலம் தேவைப்பட்டது,” என நினைவுகூர்ந்தார் அவர்.
டெல்லியில் பிறந்து வளர்ந்த திரு சத்யஜித், உற்பத்திப் பொருள் வடிவமைப்பில் இளநிலைப் பட்டம் பயில்வதற்காக மகாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள எம்ஐடி வடிவமைப்புக் கல்விநிலையத்தில் சேர்ந்தவர் கடந்த பத்தாண்டுகளாக அங்கேயே வசித்து வருகிறார்.
மூலமாதிரியை உருவாக்கியபின் திரு சிம்மை அவர் தொடர்புகொள்ள, அதை எடுத்துக்கொண்டு டெல்லிக்கு வரும்படி திரு சிம் கூறினார்.
“உடனடியாக, அந்த மூலமாதிரியைக் கையில் வைத்துக்கொண்டே விமானத்தில் ஏறி, டெல்லிக்குப் புறப்பட்டேன்,” எனச் சிரித்தவாறே சொன்னார் திரு சத்யஜித்.
அங்கு உருக்கொண்ட ‘சனோஷன்’ நிறுவனம், இப்போது வெற்றிகரமாக கழிவறைத்தொட்டிகளைத் தயாரித்து, இந்தியாவிலும் பிற நாடுகளிலும் விற்று வருகிறது.

கும்பமேளாவில் ‘ஸ்குவாட்ஈஸ்’

பீங்கானால் செய்யப்பட்ட, வெள்ளை நிறத்திலான இந்தக் கழிவறைத் தொட்டி 20 அங்குலம், 23 அங்குலம் என இரு அளவுகளில் கிடைக்கிறது. ஆயினும், வழக்கமான இந்திய வகை கழிவறைத் தொட்டிகளுக்கான விலையிலேயே, அதாவது ரூ.1,300, ரூ.1,600 என்ற விலைகளில் இவற்றை விற்பதாகக் கூறினார் திரு சத்யஜித்.
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் இவ்வாண்டு கொண்டாடப்பட்ட ஆகப் பெரிய இந்து சமய விழாவான ‘கும்பமேளா’வின்போது அங்கு 5,000 ‘ஸ்குவாட்ஈஸ்’ கழிவறைத்தொட்டிகளை சனோஷன் நிறுவனம் நிறுவியது. இதுவரை 12,000 கழிவறைத்தொட்டிகளை அந்நிறுவனம் விற்றுள்ளது.
புதுடெல்லியில் உள்ள ‘கழிவறைகளுக்கான சுலப் அனைத்துலக அரும்பொருளகத்தில்’ இந்தப் புதுமையான கழிவறைத் தொட்டி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல, கடந்த ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை டெல்லியில் நடந்த ‘மகாத்மா காந்தி தூய்மை இந்தியா அனைத்துலக துப்புரவு மாநாட்டிலும்’ இது காட்சிக்கு வைக்கப்பட்டது.
இப்போது, இந்தியாவிலும் மற்ற உலக நாடுகளிலும் ‘ஸ்குவாட்ஈஸ்’ கழிவறைத்தொட்டியைச் சந்தைப்
படுத்த திரு சிம்மும் திரு சத்யஜித்தும் திட்டமிட்டுள்ளனர்.
அத்துடன், பிரேசிலின் சாவ் பாலோ நகரில் இவ்வாண்டு நடக்கஉள்ள உலக கழிவறை உச்சநிலை மாநாட்டிற்கும் இதை எடுத்துச் செல்ல திரு சிம் திட்டமிட்டுள்ளார்.
இதைத் தவிர வேறு திட்டங்களும் தம்மிடம் இருப்பதாகக் கூறும் அவர், “காலில் வெட்டுப்பட்டு, காயம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள குழந்தைகளுக்காக பிரத்தியேக காலணிகள் தயாரிப்பது தொடர்பில் திரு சத்யஜித்துடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். வளரும் நாடுகளில் முறையான காலணிகள் இல்லாமல் ஏராளமான குழந்தைகள் நடப்பதைப் பார்க்கும்போது என் இதயம் வலிக்கிறது,” எனக் கூறியபோது, அவரது கண்களில் நீர்த்துளி எட்டிப் பார்த்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!