சிங்கப்பூருடைய சமய நல்லிணக்கத்தின் அடித்தளம்

சிங்கப்பூரில் வாழும் பல இன, பல சமய மக்களிடையே சமத்துவக் கொள்கையை நிலைநாட்ட கடந்த ஐம்பது ஆண்டுகளாக சிங்கப்பூர் மிகக் கடுமையாக உழைத்துள்ளது. இந்த அடிப்படைக் கொள்கைக்காகவே 1965ஆம் ஆண்டில் மலேசியாவைவிட்டு சிங்கப்பூர் பிரிந்து சுதந்திர நாடாக உருவெடுத்தது.

மொழி, கலாசாரம், சமய பேதமின்றி சிங்கப்பூரில் வாழும் அனைவருக்கும் சம உரிமை, வாய்ப்பு வழங்கப்படும் என்று சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்தபோது நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் இயூ அறிவித்தார். எங்களது மாணவர்கள் நாள்தோறும் காலையில் எடுத்துக்கொள்ளும் தேசிய பற்றுறுதியும் இதையே வலியுறுத்துகிறது. இனம், மொழி, சமயம் எதுவாக இருந்தாலும் ஒற்றுமையுடன் இருந்து, நாட்டின் முன்னேற்றத்துக்குப் பாடுபடுவோம் என்று குறிப்பிடும் தேசிய பற்றுறுதி இயற்றப்பட்டபோது அத்தகைய கொள்கை ஒரு கனவாகவும் இலட்சியமாகவும் இருந்தது.

அரை நூற்றாண்டு கடந்துள்ள நிலையில், எங்கள் பற்றுறுதி குறிப்பிடுவதை நாங்கள் பெருமளவில் உண்மையாக்கிவிட்டோம் என்றபோதிலும், இந்தச் சித்தாந்தத்தை நோக்கி தொடர்ந்து பயணம் செய்கிறோம். இனம், மொழி, சமயம் ஆகியவை வெவ்வேறாக இருந்தாலும் அனைவரும் சமம் என்ற இந்தக் கொள்கை, சிங்கப்பூரை வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழும் நாடாக முத்திரை பதிக்க வைத்துள்ளது. நியூயார்க் நகரைவிட சிங்கப்பூர் சிறியது. இந்தச் சிறிய தீவில் 5.7 மில்லியன் பேர் வாழ்கின்றனர். சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள், யூரேஷியர்கள் ஆகியோருடன் மேலும் பல இன மக்கள் ஒன்றாக வாழ்கின்றனர்.

அதுமட்டுமல்லாது, கிறிஸ்துவர்கள், பௌத்தர்கள், தாவோயிஸ்ட்டுகள், முஸ்லிம்கள், இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்கள், பாஹாய் சமயத்தினர், யூதர்கள், பார்சிகள் என்றழைக்கப்படும் ஸோரோயேஸ்திரேயர்கள் ஆகிய சமயத்தினர்கள் வாழும் நாடாகவும் சிங்கப்பூர் திகழ்கிறது.

சகிப்பின்மைக்கு எதிரான பாதுகாப்புகள்

சகிப்பின்மையைத் தடுக்க, ஆக்கபூர்வமான சமூக நடத்தையை ஊக்குவிக்கும் வகையில் அரசியல், சமுதாய அமைப்பை நாங்கள் உருவாக்கினோம்.

அரசமைப்புச் சட்டத்தின்கீழ் சிங்கப்பூர் ஒரு மதச்சார்பற்ற நாடு. ஆனால் நாங்கள் சமயங்களுக்கு எதிரானவர்கள் அல்லர்.

சிங்கப்பூர் அதிகாரிகள் அனைத்து சமயத்தினரையும் எவ்வித பாரபட்சமும் இன்றி ஒரே மாதிரியாக நடத்துவார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை சிங்கப்பூரர்களுக்கு இருக்கிறது.

நாட்டின் நலன் கருதி சட்டங்கள் இயற்றப்படுகின்றன. சமயக் கோட்பாடுகளை மையமாகக் கொண்டு அவற்றை நாங்கள் இயற்றுவதில்லை.

சிறுபான்மையினர் உரிமைகளுக்கான அதிபர் மன்றத்தை அமைத்தது, சுதந்திரம் அடைந்ததும் நாங்கள் உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வந்த அரசமைப்புச் சட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

எந்த ஒரு சட்டமும் குறிப்பிட்ட இனம் அல்லது சமயத்தினருக்கு எதிராகப் பாரபட்சத்துடன் இருக்கக்கூடாது என்ற இலக்குடன் இந்த மன்றம் ஒவ்வொரு சட்டத்தையும் மிக கவனமாக அலசி ஆராய்கிறது.

சமய நல்லிணக்கத்தை நிலைநாட்டும் சட்டத்தையும் நாங்கள் இயற்றியுள்ளோம்.

சிங்கப்பூரில் உள்ள பல்வேறு சமயத்தினரிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் சமயத் தலைவர்கள் அல்லது அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்தச் சட்டம் வகை செய்கிறது.

நல்ல வேளையாக, இந்தச் சட்டம் இயற்றப்பட்டு 30 ஆண்டுகள் ஆகியுள்ளபோதும் அதை ஒருமுறைகூட பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதில்லை.

வெறுப்புணர்வைத் தூண்ட எண்ணம் கொண்டிருப்பவர்களைத் தடுக்கும் சுவராக இந்தச் சட்டம் இருக்கிறது. சிங்கப்பூர் அரசியலில் பல இன மக்கள் ஈடுபட வேண்டும் என்ற நோக்குடன் தேர்தல் விதிமுறைகளை வடிவமைத்துள்ளோம்.

இனம், சமயம் அடிப்படையிலான அரசியலைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழுத் தொகுதிகளில் போட்டியிட வேண்டுமாயின் பல இன வேட்பாளர்களைக் கட்சிகள் கொண்டிருக்க வேண்டும்.

நான்கு, ஐந்து, ஆறு பேர் கொண்ட குழுத் தொகுதிகளில் போட்டியிடும்போது அவர்களில் ஒருவர் சிறுபான்மையினத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

சிறுபான்மையினத்தவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதை இது உறுதி செய்கிறது. குறிப்பிட்ட காலத்துக்குள் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படாவிட்டால் அடுத்து வரும் அதிபர் தேர்தல், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த வேட்பாளருக்கு ஒதுக்கப்படும்.

பல இன மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வதை வெறும் வார்த்தைகளில் மட்டும் இல்லாமல் செயலிலும் காட்டியுள்ளோம். உதாரணத்துக்கு, எங்களது பொது வீடமைப்புப் பேட்டைகளில் குறிப்பிட்ட இனத்தவர்கள் மட்டும் வசிக்காமல் ஒவ்வொரு குடியிருப்புப் பேட்டையிலும் பல இன மக்கள் வசிக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. சிங்கப்பூரில் 80 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் பொது வீடமைப்பில் வசிப்பதால் எங்கள் நாட்டில் குறிப்பிட்ட இனம் மட்டும் வசிக்கும் வட்டாரங்கள் இல்லை.

சிங்கப்பூரின் அனைத்துப் பகுதி களிலும் பல இன, பல சமய மக்கள் வசிக்கின்றனர். ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் பல இன, பல சமய மக்கள் வசிக்கும் தொகுதிகளைப் பார்த்துக்கொள்கிறார். இந்த அணுகுமுறையை நாங்கள் கையாளாமல் இருந்திருந்தால் வட்டார ரீதியாக வெவ்வேறு இனத்தவர்கள் பிரிந்து வாழும் நிலை ஏற்பட்டிருக்கும். இதுபோன்ற நிலையைப் பல நாடுகளில் காண முடிகிறது. இதனால் பல விரும்பத்தகாத விளைவுகளும் ஏற்பட்டுள்ளன.

எங்கள் பள்ளிகளில் அனைத்து இன, சமய மாணவர்கள் ஒன்றாகக் கல்வி பயில்கின்றனர். ஊடகத்தை எடுத்துக்கொண்டால், பிற இனத்தவர்களை அல்லது சமயத்தினரைத் தூற்றும் வகையில் அமைந்திருக்கும் கேலிச் சித்திரங்கள், இதர நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப நாங்கள் அனுமதிப்பதில்லை. சிங்கப்பூரின் அரச அமைப்புச் சட்டம், சட்டம் மற்றும் கொள்கைகள் ஆகிய கட்டமைப்புக்குள் பல இன, சமய மக்களுடன் ஒன்றாக, அமைதியான முறையில் வாழ சிங்கப்பூரர்கள் கற்றுக்கொண்டுள்ளனர்.

சிங்கப்பூரில் பள்ளிவாசல்கள், கோயில்கள், தேவாலயங்கள், யூதர்களின் வழிபாட்டுத் தளங்கள் ஆகியவை நடந்து செல்லும் தூரத்தில் இருக்கின்றன. சில சமயங்களில் அவை ஒன்றிணைந்து நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வதும் உண்டு. சிங்கப்பூரில் உள்ள பல சமய அமைப்பு கடந்த 70 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது.

புதிய சவால்கள்- நான்கு பெரும் போக்குகள்

இதுவரை கூறப்பட்டுள்ள கொள்கைகளும் நடைமுறைகளும் சிங்கப்பூருக்கு நல்ல பலனைத் தந்துள்ளன. ஆனால் சூழ்நிலைகள் மாறுகின்றன. உலகம் மாறுகிறது. அதற்கு ஏற்றாற்போல நாமும் மாற வேண்டி இருக்கிறது.

தற்போதைய காலகட்டத்தில் நான்கு பெரும் போக்குகள் நம்மைப் பெரிதும் பாதிக்கின்றன. அனைத்து சமயங்களிலும் சமய ஈடுபாடு கொண்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அவற்றில் ஒன்று.

சமயம் ஒருவரை நல்வழிப்படுத்தக்கூடியது. ஆனால் மற்றவர்களின் சமய நம்பிக்கைகளை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது. பிற சமயத்தைச் சேர்ந்த சக நாட்டவருடன் பழகுவதைத் தடுக்கும் சமயப் போதனைகளை சிங்கப்பூர் எதிர்க்கிறது.

சிங்கப்பூர் ஒரு சிறிய, திறந்த சமுதாயம். வெளிநாடுகளில் ஏற்படும் நிகழ்வுகள், அங்கிருந்து வரும் போதனைகள் ஆகியவை சிங்கப்பூரைப் பாதிக்கக்கூடும். இது சிங்கப்பூர் எதிர்கொள்ளும் இன்னொரு சவால்.

சிங்கப்பூரில் உள்ள ஒவ்வோர் இன, சமய அமைப்புகளும் வெளிநாடுகளில் உள்ள அதே இனம் அல்லது சமயங்களைச் சேர்ந்த அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளன.

இத்தகைய உறவு எங்கள் சமுதாயத்துக்கு நன்மை விளைவிக்கலாம்.

அதே சமயத்தில் மற்ற நாடுகளில் நிகழும் பூசல்களும் பிரச்சினைகளும் சிங்கப்பூரில் தலைதூக்கும் அபாயம் உள்ளது.

வெளிநாடுகளில் உள்ள பூசல்கள், காழ்ப்புணர்ச்சிகளைச் சுமந்து கொண்டு சமய போதனை என்ற பேரில் அவற்றை சிங்கப்பூரில் பரப்ப திட்டமிடுவோரையும் சிங்கப்பூருக்குப் பொருந்தாத சமயப் பழக்கவழக்கங்களைக் கற்பிக்க எண்ணம் கொண்டோரையும் எங்கள் நாட்டிற்குள் நாங்கள் விடுவதில்லை.

மூன்றாவதாக, மக்கள் தொடர்பு கொள்ளும் முறையை சமூக ஊடகம் மாற்றிவிட்டது. வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துகள் பரவவும் அது உதவுகிறது.

தீவிரவாதக் கொள்கைகள் கொண்ட சமய போதகர்கள் கூறும் கருத்துகளைச் சமூக ஊடகம் வாயிலாகப் பல மில்லியன் பேர் கேட்கின்றனர்.

அமைதி நிலையைக் குலைக்க இத்தகைய போதகர்கள் சிறிதுகூட யோசிக்காமல் பதிவேற்றம் செய்யும் ஒரு பதிவு போதுமானது.

இம்மாதிரியான பிரச்சினைகளைத் தடுக்க இணையத்தை மிக அணுக்கமாகக் கண்காணிக்க வேண்டும்.

இணையத்தைக் கண்காணிப்பது சவால்மிக்க காரியமாகும். இருப்பினும், காலத்துக்கு ஏற்றாற்போல தேவையான சட்டங்களை இயற்ற வேண்டும். அதுமட்டுமல்லாது, பலன் தரும் புதிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதைக் கருத்தில் கொண்டு இணையம் வாயிலாகப் பரப்பப்படும் பொய்ச் செய்திகளை எதிர்கொள்ள புதிய சட்டம் ஒன்றை அண்மையில் இயற்றினோம்.

இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டும் பொய்ச் செய்திகளைத் திருத்தக் கோரவும் வேண்டுமென்றே இத்தகைய பதிவுகளை பதிவேற்றம் செய்வோரை எதிர்த்து நடவடிக்கை எடுக்கவும் அரசாங்கத்துக்கு இந்தச் சட்டம் அதிகாரம் வழங்குகிறது.

நான்காவதாக, இனம் அல்லது சமயத்தின் பேரில் வன்முறை வெடிக்கும் ஆபத்து எப்போதும் இருக்கிறது. சமயத்தைத் தவறாகப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டுவோரும் உண்டு.

உதாரணத்துக்கு, செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு, அல் காய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பு ஒன்று சிங்கப்பூரில் செயல்படுவதைக் கண்டுபிடித்தோம். சிங்கப்பூரில் உள்ள பல்வேறு இடங்களில் தாக்குதல்களை நடத்த அந்த அமைப்பு திட்டமிட்டிருந்தது.

அவர்கள் நினைத்தது நிறைவேறியிருந்தால் அது மரணம், அழிவு ஆகியவற்றை மட்டும் ஏற்படுத்தி இருக்காது. சிங்கப்பூர் மக்களிடையே விரிசலையும் அது ஏற்படுத்தியிருக்கும். சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம்களை முஸ்லிம் அல்லாத சிங்கப்பூரர்கள் சந்தேகத்துடன் பார்க்கத் தொடங்கியிருப்பர். தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் முஸ்லிம் அல்லாதோர் தங்களைத் தாக்கக்கூடும் என்ற அச்சம் முஸ்லிம்களிடையே ஏற்பட்டிருக்கும்.

சமயங்களுக்கிடையே நம்பிக்கையை வலுப்படுத்துதல்

சிங்கப்பூரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த பயங்கரவாத அமைப்பைத் தடுத்து நிறுத்திய பிறகு, நாட்டில் உள்ள பல சமயத்தினரிடையே நம்பிக்கையை வலுப்படுத்த நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தோம்.

பயங்கரவாதிகளின் எண்ணங்களை சிங்கப்பூர் முஸ்லிம்கள் கொண்டிருக்கவில்லை என்று வெளிப்படையாகக் கூறினோம். பயங்கரவாத மிரட்டல் குறித்த மிக முக்கியமான, ரகசிய தகவல்களை சமய, சமூகத் தலைவர்களுடன் பகிர்ந்துகொண்டோம். சிங்கப்பூரின் முஸ்லிம் சமூகத் தலைவர்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்தனர். முஸ்லிம் அல்லாத தலைவர்கள் சிங்கப்பூர் முஸ்லிம்கள் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்திருப்பதை மறுஉறுதி செய்தனர். இது ஒரு புறம் இருக்க, தீவிரவாதப் போக்குக் கொண்ட முஸ்லிம்களுக்கு மறுவாழ்வுத் திட்டம் நடத்த சில மதிப்புக்குரிய இஸ்லாமியக் கல்விமான்கள் முன்வந்தனர்.

தீவிரவாதப் போக்கு கொண்டோருக்கு ஆலோசனை வழங்குவது மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களுக்கு ஆதரவு கொடுக்கும் பணியையும் அவர்கள் மேற்கொண்டார்கள். மறுவாழ்வுத் திட்டம் வாயிலாகப் பெரும்பாலானோரை எங்களால் திருத்த முடிந்தது. அவர்கள் விடுதலை செய்யப்பட்டு சமுதாயத்துடன் மீண்டும் நல்ல முறையில் இணைந்துள்ளனர்.

அவர்களில் ஒரு சிலர் மட்டும் மீண்டும் தவறான பாதைக்குச் சென்று திரும்பவும் மறுவாழ்வுத் திட்டத்துக்குத் திரும்பியுள்ளனர். ஒரு சிலர் மட்டும் தீவிரவாதக் கொள்கையைக் கைவிடாமல் 2001ஆம் ஆண்டிலிருந்து விடுதலை செய்யப்படாமல் இருக்கின்றனர். பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான மிரட்டல் நீடித்து வருகிறது. அப்படி ஒரு தாக்குதல் நிகழ்ந்தால் சிங்கப்பூரர்கள் தொடர்ந்து ஒற்றுமையுடன் இருந்து நாட்டைக் கட்டிக்காக்க வேண்டும்.

முடிவுரை

சிங்கப்பூரை நிறுவிய தலைமுறையினர் எங்களுக்குச் சரியான பாதையை அமைத்துக் கொடுத்திருக்கின்றனர். அந்த வகையில் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். பல்வேறு சமயங்களுக்கிடையிலான நல்லிணக்க உறவுக்கான அடித்தளத்தை அவர்கள் அமைத்தனர். அதற்கான பலனை நாங்கள் இன்று மகிழ்ச்சியாக அனுபவிக்கிறோம். அவர்களை அடுத்து வந்த தலைமுறையினர் மற்ற சமயத்தினருக்கு மரியாதை கொடுத்து சகிப்புத்தன்மையுடன் நடந்துகொண்டனர். எங்களது சமூக ஒற்றுமைக்கு கடுமையான சவால்கள் ஏற்பட்ட போதிலும் சிங்கப்பூரில் உள்ள பல்வேறு இன, சமய மக்கள் மேலும் நெருக்கமானார்கள்.

சிங்கப்பூரில் நிலவும் சமய நல்லிணக்கத்தை எதிர்காலத் தலைமுறையினர் மெத்தனமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அதை அவர் மேலும் வலுப்படுத்த வேண்டும். சமயத்தின் பேரில் ஆயுதம் ஏந்தும் நிலை உருவாவதை சிங்கப் பூரர்கள் அனுமதிக்கக்கூடாது. சமய நல்லிணக்கம் உள்ள சமுதாயத்தை அரசாங்கங்கள் மட்டும் ஏற்படுத்தித் தர முடியாது. அதை உருவாக்க பொறுப்புமிக்க குரல்களும் எழ வேண்டும். பிற இன, சமய மக்களை ஏற்றுக்கொள்ளவும் மதிக்கவும் வேண்டும் என்ற முக்கிய செய்தியை பரப்ப வேண்டும். நல்ல வேளையாக, ‘அப்பீல் ஆஃப் கான்ஷியன்ஸ் ஃபௌன்டேஷன்’ போன்ற அமைப்புகள் இந்த உன்னதப் பணியைச் செய்து வருகின்றன. சிங்கப்பூரை சமய நல்லிணக்கமிக்க நாடாக உருவாக்கப் பங்களித்தோர் சார்பாக எனக்கு வழங்கியிருக்கும் இந்த விருதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!