வெற்றிக்கு உதவிய ‘குடியேறியின் அச்சம்’

தமிழ்நாட்டில் பிறந்து, அறிவுச் சூழலில் வளர்ந்து உலகத்தரம் வாய்ந்த ஞானத்தோடு, முன்னேறிய நாடான அமெரிக்காவின் தலைசிறந்த நிறுவன நிர்வாகிகளில் ஒருவராகத் திகழ்பவர் இந்திரா நூயி. பெரும் புகழும் மிக உயர்ந்த பதவிகளும் பெருத்த வருமானமும் கொண்டவராக உச்சநிலையை அடைய, குடியேறி என்ற அச்சம்தான் அடிப்படைக் காரணமாக அமைந்ததாகக் கூறுகிறார். 
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் நிர்வாக ஆசிரியரான சுமிகோ டானுக்கு இந்திரா நூயி அளித்த நேர்காணலின் மொழிபெயர்ப்பு.

 

மதிய உணவாக அப்போதே பிழியப்பட்ட ஆரஞ்சு சாறுதான் வேண்டுமென்று இந்திரா நூயி கேட்டபோது, உணவு பரிமாறுபவரின் ஏமாற்றத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது.

அடுத்த ஒரு மணி நேரமாக, இந்திராவுக்கு சாப்பாட்டில் ஆர்வம் ஏற்படுத்த அவர் முயன்று கொண்டிருந்தார். 

உணவுக்கு முன்னர் கொரிக்க காளான் வேண்டுமா? என்று கேட்டார். 

அவர் வேண்டாமென்று தலையை ஆட்டினார்.

பீட்ரூட்?

அவர் மீண்டும் தலையை ஆட்டினார்.

“எதுவும் வேண்டாமா?

“எதுவும் வேண்டாம்,” அவர் புன்னகைத்தார். “எனக்குப் பசிக்கவில்லை.

மீண்டும் அந்தப் பக்கம் வந்தபோது, “ஆட்டிறைச்சி வேண்டுமா,” எனக் கேட்டார் அந்த உணவக ஊழியர்.

“நான் சைவம்,” என்றார் இந்திரா.

“மன்னிக்கவும்,” என்ற அவரிடம் இந்திரா உங்க பெயரென்ன என்று கேட்டார்.

அவர் பெயர் விக்ரம். நியூ டெல்லியிலிருந்து இங்கு வந்திருக்கிறார். 

அவரைக் குழப்பத்திலிருந்து விடுவிக்கும் வகையில், அவர் கையில் வைத்திருக்கும் தட்டிலிருந்து ஒரு  சிறு துண்டு ‘நான்’  மட்டும் சாப்பிடுவதாகக் கூறினார். 

மகிழ்ச்சி அடைந்த அவர், அக்கறையுடன் கேட்டார், “ஒன்று போதுமா?”

இந்திரா சிரித்தபடியே, “இங்கே வைத்துவிட்டுப் போங்கள். நீங்கள் விடாக்கொண்டர் என்றார்.

ஆசிய பெண்கள் மாநாட்டில் பங்கேற்க சென்ற மாதம் சிங்கப்பூர் வந்திருந்த பெப்சிகோவின் (PepsiCo) முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியும் தலைவருமான 63 வயது  இந்திரா நூயியுடன் புதுப்பிக்கப்பட்ட ராஃபிள்ஸ் ஹோட்டலின் டிஃபன் அறையில் மதிய உணவு.

சென்னையில் பிறந்த உலகின் பெரும்புள்ளி

உலகின் பெரும்புள்ளிகளிடையே அவர் ஒரு சகாப்தம். பெண்களுக்கு, குடியேறிகளுக்கு மட்டுமின்றி, உலகின் பெரும் பெரும் நிறுவனங்களின்  தலைமை நிர்வாகிகளுக்கும் அவர் ஓர் உந்துசக்தி. 

ராக் இசைப் பாடகர்கள், திரைப்பட நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்கு ஈடாக புகழையும் வருமானத்தையும்  ஈட்டக்கூடிய அரிதான சிலரில் இவர் ஒருவர்.

கடந்த 2017ல் அவர் வருமானம் யுஎஸ் $31 மில்லியன் ஆக இருந்தது. மக்கள் செல்ஃபி எடுத்துக்கொள்ள ஆசைப்படும் தலைமை நிர்வாக அதிகாரிகளில் ஒருவரான அவரது வாழ்க்கை வரலாற்றை பலரும் எழுதியுள்ளனர்.  

சென்னையில் பிறந்த அவர், கல்வி உபகாரச் சம்பளம் பெற்று அமெரிக்காவுக்குப் படிக்கச் சென்றவர் அங்கே பணிபுரியத் தொடங்கினார்.

பெப்சி, லேஸ் கிழங்கு வறுவல், கெட்டோரேட் போன்ற பிரபல உணவுப் பொருட்களைத் தயாரிக்கும் அமெரிக்காவின் பன்னாட்டு உணவு, பான நிறுவனமான பெப்சிகோவில் 1994ல் சேர்ந்தார். பின் 2006ல் அந்நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாகி, ஃபோர்சூனின் 500 முன்னனி நிறுவனங்கள் பட்டியலில் இடம்பெற்ற  மிகச் சில பெண்களில் ஒருவராக விளங்கினார். பின்னர் அதன்  இயக்குநர் குழுத் தலைவருமானார்.

உலகின் தலைசிறந்த தலைமை நிர்வாக அதிகாரிகள், உலகின் 100 மிகச் சக்தி வாய்ந்த பெண்கள் போன்ற பட்டியலில் தொடர்ந்து இடம்பிடித்து வந்துள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அவர் ஓய்வுபெற்றபோது, 2006ல் யுஎஸ் $35 பில்லியனாக இருந்த பெப்சிகோவின் வருமானம்  2017ல் யுஎஸ் $63.5 பில்லியனாக உயர்ந்திருந்து.

இலக்குடன் கூடிய தலைமைத்துவத்துக்குப் பெயர்பெற்ற அவர், பெப்சிகோ நிறுவனத்தை சுற்றுச்சூழல் அக்கறையுள்ள நிறுவனமாக்கியதுடன்,  சீனி அதிகமுள்ள பானங்களிலிருந்து விடுபடும் போக்கை முன்கூட்டியே கணித்து ஆரோக்கிய உணவுக்கு மாறவேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

தலைமை நிர்வாக அதிகாரியாக, தமது மூத்த நிர்வாகிகளின் பெற்றோருக்கு அவர் 400க்கும் அதிகமான கடிதங்களை ஆண்டுதோறும் எழுதுவார்.

மதிய உணவு 12.30க்கு. நல்ல வேளை முன்னதாகவே சென்றுவிட்டேன். திருமதி நூயி குறித்த நேரத்தைவிட 10 நிமிடங்கள் முன்பே வந்துவிட்டார்.

1.75 மீட்டர் உயரமும் அடர்த்தியான குட்டை தலைமுடியுமாக திருமதி நூயி கவரும் தோற்றத்தைக் கொண்டவர். பேண்டும் பட்டுச் சட்டையும் அணிந்திருந்த அவர் வெள்ளி நிறத்திலான சிறிய கைப்பையை வைத்திருந்தார்.

நெடுங்காலமாக வெற்றியை அனுபவித்துவரும் அவரும் தமது தோலின் நிறம் குறித்து கவலைப்படுவதில்லை. அதிகாரத்துடன் செயல்பட வேண்டிய தருணங்களில், அவரது   அணுகுமுறை கருணையும் பண்பும் நிறைந்திருக்கும். அவர் புன்கையுடன் காணப்படுவார்.

அமெரிக்காவின் கிரீன்விட்ச், கனெடிக்கட்டில் தமது கணவர் ராஜ். கே.நூயியுடன் வசிக்கிறார். அவருக்கு பீரிதா, தாரா எனும் வளர்ந்து இரு மகள்கள் உள்ளனர்.

பயணம் திட்டம் இல்லாத சமயங்களில் காலையில் டென்னிஸ் விளையாடுவார். பின்னர்  தமது கணவர் நிர்வகிக்கும் அருகிலுள்ள குடும்பத் தொழில் நிறுவனத்துக்கு செல்வார். அங்கு அவருக்கு முழு நேர உதவியாளர் ஒருவரும் பகுதிநேர உதவியாளர்கள் பலரும் உள்ளனர்.  

அமோசோன் போன்ற நிர்வனங்களில் நிர்வாக சபையில் இருக்கும் அவர், வெஸ்ட் பாயிண்ட்டில் போதிக்கிறார். அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தில் இடம்பெற்றுள்ள இவர், உலகெங்கும் விரிவுரையாற்றுகிறார். அத்துடன் கனெடிக்கட் மாநிலம் பல நிறுவனங்களையும் கவர்ந்திழுக்க உதவுகிறார்.

நிறைய வாசிக்கிறார். ஒரு நூலை எழுதிக்கொண்டிருக்கிறார்.

எப்போதுமே தமது விருப்பப்பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பால்ரூம் நடனம் பயில்கிறார்.

கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குடும்பம்

1955ல் தமிழ்நாடு, சென்னையில் பிறந்த இந்திரா கிருஷ்ணமூர்த்தி வாழ்க்கையில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளார்.

பெரிய வீட்டில் பல உறவினர்களுடன் வளர்ந்தவர். அவர் குடும்பத்தில் கல்விக்குத்தான் முதல் முக்கியத்துவம். அவர் தந்தைவழி தாத்தா நீதிபதியாக இருந்தவர். தாய் வழித் தாத்தா  வழக்கறிஞர். கணிதவியல் நிபுணரான அவரின் தந்தை, வங்கியில் கணக்காய்வாளராகப் பணியாற்றியவர். அவரின் அம்மாவுக்கு கல்லூரி செல்லும் வாய்ப்புக் கிடைக்கவில்லை, ஆனால் “முனைவர் பட்டதாரிக்கு இணையான அறிவை பெற்றிருந்தார். அவர் சிறந்த அறிவாளி”.

பெரியவர்கள் பிள்ளைகளுக்கு வீட்டுப் பாடத்தில் உதவுவதையும் பயிற்சிதாட்களில் பயிற்சி செய்ய உதவுவதையும் நினைவுகூர்ந்த அவர், தான் வளர்ந்த வீடு “கல்வி சூழ்ந்த உலகமாகவே திகழ்ந்தது,” என்றார்.

தற்போது அமெரிக்காவில்  வசிக்கும் அவரின் உடன்பிறப்புகள் இருவரும் மிகவும் வெற்றிகரமானவர்களாக உள்ளனர்.  இவரின் அக்காள், சந்திரிகா டண்டோன் ஒரு தொழிலதிபர், வள்ளல், கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இசை வல்லுநர். இவரின் தம்பி அடமான நிதியத்தை நடத்துகிறார்.

சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் வேதியில் துறையில் இளநிலைப் பட்டம் பெற்ற திருமதி நூயி, கோல்கத்தாவின் இந்திய நிர்வாகப் பயிலகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார். 

எப்போதும் குட்டை முடி வைத்திருப்பது பற்றிக் கேட்டபோது, இளவயது சம்பவத்தை நினைவுகூர்ந்தார். 

கல்லூரியில் படித்தபோது இரசாயான சோதனைக்கூடத்தில் சோதனையில் இருந்தபோது, அவரின் இரட்டைச் சடையில் ஒன்று அமிலத்தில் பட்டு எரிந்துவிட்டது. 

அதை சாக்காக வைத்து, முடியை கட்டையாக வெட்டிக்கொண்டதாகக் கூறிச் சிரித்த அவர், குட்டை முடி பராமரிக்க எளிதாக உள்ளது என்றார்.

ஜான்சன் அண்ட் ஜான்சன் உள்ளிட்ட பல இடங்களில் பணிபுரிந்த அவர், 1978ல் யேல் பல்கலைக்கழகத்தில் நிர்வாக முதுநிலைப் பட்டப்படிப்புக் கல்லூரியில் படிக்க அவருக்கு இடம் கிடைத்தது. அங்கு பொது மற்றும் தனியார் நிர்வாகத் துறையில் தமது இரண்டாவது முதுநிலைப் பட்டத்தைப் பெற்றார். 

“அப்போது அமெரிக்கா, நம்பிக்கையின் சின்னமாக இருந்தது. உலகில் நிகழ்ந்த மாபெரும் நிகழ்வுகள் எல்லாமே அமெரிக்காவில்தான் இடம்பெற்றன.  அமெரிக்காவுக்குச் செல்வது என்பது மிதமிஞ்சிய ஊக்கம் தருவதாக இருந்து,” என்றார் அவர்.

யேல் பல்கலைக்கழகத்தில் படித்தபோது தமது செலவுகளைச் சமாளிக்க இரவுநேரத்தில் வரவேற்பாளராக பணியாற்றி உள்ளதாகத் தெரிவித்தார். 

1979ல் சிகாகோவில் பணியாற்றியபோது திரு நூயியை அவர் சந்தித்தார். இந்தியாவின் மேற்குக் கரையோரப் பகுதியைச் சேர்ந்த நூயி, அவரைவிட ஒரு வயது மூத்தவர். அமெரிக்காவில் மேற்படிப்புக்காக வந்திருந்த அவரது குடும்பப் பின்னணியும் இந்திராவின் குடும்பப் பின்னணியை ஒத்தது.

“அதற்கு முன்னர் நான் எவருடனும் பழகியதில்லை. அவரும் வேறெவருடனும் பழகியதாகத் தெரியவில்லை.  எல்லாமே யதார்த்த மாக நிகழ்ந்தது. திருமணம் செய்வது என்று அந்தக் கோடைக் காலத்தின் முடிவில் முடிவெடுத்தோம்,” என்றார் அவர். நூயியின் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக்கொண்டார்.

ஏறக்குறைய அந்த நேரத்தில்தான் அவர் பெரிதும் நேசித்த அவரின் தந்தை புற்றுநோயால் காலமானார். “என் திருமணத்துக்கு அவர் வந்தார். என் திருமணத்தில் அவர் கலந்துகொண்டு மகிழ்ச்சியானது. ஓராண்டில்  அவர் இறந்துவிட்டார்,” என்ற அவர் சிறிது நேரம் நிறுத்திவிட்டுத் தொடர்ந்தார். 

அமெரிக்காவிலேயே தங்கிய அவர் போஸ்டன் கன்சல்டிங் குழுமத்தில் இணைந்தார். பின்னர் மோட்டரோலா, ஆசிய பிரவுமன் போவரி நிறுவனங்களில் உத்திபூர்வ பணிகளை மேற்கொண்டு, பின்னர் பெப்சிகோவில் சேர்ந்தார். 

நிறுவன செயல்திட்ட உத்திகளை வகுத்தார், மூத்த நிர்வாகக் குழுவில் அங்கம் வகித்தார். நிறுவன உருமாற்றத்தில் பங்காற்றினார். 1990களின் பிற்பகுதியில் பெப்சிகோ நிறுவனம் உணவு, பானத்துறையில் ஒருமித்த கவனத்தைச் செலுத்தியபோது, ட்ரோபிகான போன்ற நிறுவனங்களை அது கொள்முதல் செய்தது. குவாக்கர் ஓட்ஸ் நிறுவனத்துடன் இணைந்தது.

அந்த நேரத்தில் அவரின் மகள்களைக் கவனித்துக்கொள்ள அவரின் அம்மா அமெரிக்கா சென்றார். தற்போது அவரது சகோதரருடன் நியூயார்க்கில் வசிக்கும் அம்மாவுக்கும் அவருக்கும் நெருக்கம் அதிகம்.

நேர்காணல் முழுவதும் தனது கணவரைப் பற்றி புகழ்ந்துகொண்டே இருந்தார்.

வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் கணவர்

பொறியியல் பின்னணியைக் கொண்ட திரு நூயி, தேவைக்கு ஏற்ப இணையத்  தீர்வுகளை தயாரித்துத் தரும் நிறுவனத்தின் தலைவராக இருந்தார். தற்போது குடும்பத் தொழிலைக் கவனித்துக்கொள்கிறார். 

“எனது வெற்றிக்காக எனது கணவர் பலவற்றையும் விட்டுக்கொடுத்துள்ளார். அதற்காக அவருக்கு நான் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்,” என்றார் திருமதி நூயி.

அமெரிக்காவில் தான் ஒரு குடியேறியாக இருந்தது எப்போதுமே அவர் நினைவில் இருக்கிறது.

“குடியேறியாக இருந்த காரணத்தினால் கடுமையாக உழைக்க விரும்பினேன். குடியேறி ஒருவருக்கு இருக்கும் அச்சம் எப்போதும் இருக்கும்,” என்றார்.

“என் குடும்பத்துக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதற்காக நான் கடுமையாக உழைத்தேன்.

“அடுத்த வேலையை எப்படிப் பெறுவது என்பது பற்றி நான் ஒருபோதும் யோசித்ததில்லை. செய்யும் வேலையைத் தக்க வைப்பதையும், அதில் திறம்படச் செயலாற்றுவது பற்றியுமே என் சிந்தனை இருக்கும்.

“சம்பளம் கிடைக்கும் போதெல்லாம் அது பெரிய தொகை என்றே நினைத்தேன். ஏனென்றால் நான் எதுவுமில்லாமல் வந்தேன். எனவே, பதவி உயர்வு கிடைக்கும்போதும் சம்பள உயர்வு கிடைக்கும்போதும், “எனக்கு பெரும் பணம் கிடைத்துள்ளது,” என்று எண்ணுவேன்,” என்றார் அவர்.

“எங்களிடம் இருப்பதை நினைத்து எப்போதுமே நாங்கள் நன்றியுடையவர்களாக இருப்போம்,” என்று அவர் சொன்னார்.

எதிர்ப்பார்ப்புகளுடன் இருக்கும்போதுதான் பின்னடைவு ஏற்படும் என்ற அவர், எந்த இடத்தை எட்டுவது குறித்தும் தமக்கு எதிர்பார்ப்பு இருந்ததில்லை என்றார்.

“நாம் திறம்படச் செயலாற்றினால், அதுவே எல்லாவற்றையும் கவனித்துக்கொள்ளும் என்றே நினைப்பேன்,” எனச் சொன்ன அவர், தம்மைக் கைதூக்கிவிட பல சிறந்த வழிகாட்டிகள் தமக்கு அமைந்தனர் என்று கூறினார். 

தமது வழிகாட்டிகள் அனைவரும் ஆண்கள் என்றும் அவர்கள் சிறந்த ஆதரவை அளித்தனர் என்றும் அவர் கூறினார்.

தலைமை நிர்வாக அதிகாரியாக...

தலைமை நிர்வாக அதிகாரியாக, தமது மூளையின் 30-40 விழுக்காடு திறமையிலும், மனிதவளத்திலும் கவனம் செலுத்தும், 30-40 விழுக்காடு எதிர்கால உத்திகள் குறித்து யோசிக்கும், மற்ற 30-40 விழுக்காடு நிர்வாகத்திலும் இன்னொரு 30-40 விழுக்காடு நிறுவனத்தைப் பிரபலமாக்குவதிலும் செயல்படும். எனவே, நிறுவனத்தில் எனது மூளை 200% கவனம் செலுத்தும் என்று சிரித்துக்கொண்ட கூறினார் இந்திரா நூயி.

தலைமை நிர்வாக அதிகாரியின் பணியை “ஆதரவாளர், பயிற்றுவிப்பாளர், வழிகாட்டி”யாக அவர் மகிழ்ச்சியுடன் ஆற்றினார். 

“இந்நிலைக்கு வர நான் கற்றுக்கொண்ட அனைத்தையும் நான் அனைவருக்கும் சொல்லித் தருவேன்,” என்றார் அவர்.

“ஒரு நிறுவனம் வெற்றிபெற, அந்நிறுவனம் மிகச்சிறந்த, அதி ஆற்றல் பெற்ற ஆண்களையும் பெண்களையும் பெற்றிருக்க வேண்டும். நிறுவனத்தின் உயர் பதவி, பால்பேதமின்றி, மிகச்சிறந்தவருக்கு அளிக்கப்பட வேண்டும்.

“அதேநேரத்தில், ஆண்களும் பெண்களும் வெற்றிபெறுவதற்கு சமவாய்ப்பை அளிக்கக்கூடிய சூழல் நிறுவனங்களில் இருப்பது முக்கியம்.

“இருபாலரும் வெற்றிபெறக் கூடிய சமமான சூழலை நாம் உருவாக்க வேண்டும். அதைத்தான் நான் பெப்சிகோவில் செய்தேன்,” என்றார் அவர்.

“அது நாட்டுக்கு நல்லது, நிறுவனங்களுக்கும் நல்லது. பெண்களுக்கும் நல்லது.”

“எல்லாவிதமானவர்களுக்கும் நான் உதவ விரும்புகிறேன். பெண்கள் மேல் நிலைக்கு உயர நான் உதவ விரும்புகிறேன்,” என்று கூறினார் திருமதி இந்திரா நூயி.

 

Loading...
Load next