மின்ஸ்கூட்டர் தடை: உதவித் திட்டங்கள், மாற்று வழிகள் அறிமுகம்

நடைபாதைகளில் மின்ஸ்கூட்டருக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதைப் பலரும், குறிப்பாக, பாதசாரிகள் வரவேற்றுள்ளனர். மின்ஸ்கூட்டர் போன்ற தனிநபர் நடமாட்ட சாதனங்கள் அச்சுறுத்தலாக இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். அதேநேரத்தில், உணவு விநியோகம் போன்ற வேலைகளுக்காக இச்சாதனத்தைப் பயன்படுத்துவோர் கவலை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டோருக்கு உதவித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாற்றுவழிகளும் ஆராயப்படுகின்றன.

கி.ஜனார்த்தனன்

சிங்கப்பூரின் சிறப்புகளில் ஒன்று சீரான, வசதியான போக்குவரத்துக் கட்டமைப்பு. நிலப் பற்றாக்குறை உள்ள சிங்கப்பூருக்கு விவேக போக்குவரத்து முறைகள் உயிர்நாடியானவை. 

இதில் தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் வசதியாகவும், எல்லாருக்கும் கட்டுப்படியாகக் கூடியதாகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகவும் இருக்கின்றன. அதனால் குறுகிய காலத்திலேயே இவற்றைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்தது. 

நடையர்களுக்கான பாதைகளில் இவற்றின் எண்ணிக்கை பெருகிற்று. இவை தொடர்பான விபத்துகளும் அதிகரித்தன. கடந்த செப்டம்பரில் மின்ஸ்கூட்டருடன் மோதிய விபத்தில் 65 வயது பெண் சைக்கிளோட்டி ஒருவர் மரணமடைந்தார். அதைத் தொடர்ந்து தனிநபர் நடமாட்ட சாதனங்களைத் தடை செய்யக் கோரி change.org எனும் இணையப்பக்கத்தில் 100,000க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டனர். 

விபத்துகளில் மின்ஸ்கூட்டர் ஓட்டிகள் சிலர் தங்களது உயிரை இழந்துள்ளனர்.

தொடரும் விபத்துகள்

விதிமீறலில் ஈடுபட்டு கிட்டத்தட்ட 370 மின்ஸ்கூட்டர் ஓட்டிகள் மாதந்தோறும் அதிகாரிகளிடம் பிடிபடுகின்றனர்.

2017லும் கடந்த ஆண்டிலும்  நடைபாதைகளில்  தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தொடர்பான 228 விபத்துகள் நிகழ்ந்தன. அவற்றில் 196 விபத்துகளில்  பாதிக்கப்பட்டோருக்குக் காயம் ஏற்பட்டது.

இது தொடர்பான பொது விழிப்புணர்வு, அறிவுறுத்தல்களால் எதிர்பார்த்த பலன் ஏற்படவில்லை.

இதனால், அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளானது. 

நவம்பர் 5ஆம் தேதி முதல் மின்ஸ்கூட்டர்களை நடைபாதையில் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தடையை மீறுவோருக்கு 2,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது மூன்று மாதச் சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

இந்த ஆண்டின் இறுதி வரை, தடையை மீறுவோருக்கு பெரும்பாலும் எச்சரிக்கை கடிதம் கொடுக்கப்படும். ஆனால் அடுத்த ஆண்டு முதல், நடவடிக்கை எடுக்கப்படும். 

இந்தத் தடை, மிதிவண்டி, இயந்திர சக்கரநாற்காலி போன்ற தனிநபர் நடமாட்ட உதவிக்கருவிகளைப் பாதிக்காது. எனினும் ஹோவர்பார்டுகள், ஒற்றைச் சக்கரம் கொண்ட சைக்கிள்கள் உள்ளிட்ட சாதனங்களுக்கு இந்தத் தடை கட்டம் கட்டமாக விரிவு செய்யப்படும்.

மழைநீர் வடிகால்கள் மீது போடப்பட்டுள்ள இரும்பாலான மூடி மீது அந்த வாகனத்தை ஓட்டக்கூடாது எனப் பொதுப் பயனீட்டுக் கழகம் அறிவுறுத்தி இருக்கிறது.

விரிவாக்கப்படும் சைக்கிள் பாதை

எனினும், சைக்கிள் பாதையை மின்ஸ்கூட்டர்கள் பயன்படுத்த முடியும். இப்போது 440 கிலோமீட்டராக இருக்கும் மொத்த சைக்கிளோட்டப் பாதையின் நீளம் 2030க்குள் மும்மடங்காக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூரில் கிட்டத்தட்ட 100,000 பதிவு பெற்ற மின்ஸ்கூட்டர்கள் உள்ளன. 

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ள 85,000 மின்-ஸ்கூட்டர்களில் பெரும்பாலானவற்றுக்குப் பாதுகாப்புச் சான்றிதழ் இல்லை என்று இங்குள்ள சில்லறை விற்பனை கடைகள் தெரிவித்துள்ளன. 

இந்தச் சான்றிதழ்கள் 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு கட்டாயமாக்கப்படும். பாதுகாப்புச் சான்றிதழ் இல்லாத கிட்டத்தட்ட 80,000 மின்-ஸ்கூட்டர்கள் இருக்கக்கூடும் என்று ‘மோபொட்’ தெரிவித்திருக்கிறது.

விதிகளுக்கு இணங்காத மின்ஸ்கூட்டர்களை ஒப்படைப்போருக்குச் சன்மானமாக $100 வழங்கும் திட்டம் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும்.

பாதிக்கப்பட்டோருக்கு உதவி

இங்கு கிராப்ஃபுட், ஃபுட்பாண்டா, டிலிவரூ ஆகிய மூன்று பெரிய உணவு விநியோக நிறுவனங்களில் பணியாற்றும் ஏறக்குறைய 7,000 ஊழியர்கள் தங்கள் பணிக்கு மின்ஸ்கூட்டர்களைப் பயன்படுத்துகிறார்கள்.  புதிய தடையினால் தங்களுடைய வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உணவு விநியோகிப்பாளர்கள் அமைச்சர்களைச் சந்தித்து முறையிட்டனர்.

புதிய தடை காரணமாக தங்களுடைய வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை அடைந்து இருக்கும் இவர்கள், அமைச்சர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து தங்களுடைய நிலையை  எடுத்துக்கூறினர்.

இதைத் தொடர்ந்து, மின்ஸ்கூட்டரைப் பயன்படுத்தும் உணவு விநியோகிப்பாளர்களுக்கு உதவித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

$7 மில்லியன் உதவித் தொகை

நடைபாதைகளில் மின்-ஸ்கூட்டர்களை ஓட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடையால் பாதிக்கப்பட்டுள்ள உணவு விநியோக ஊழியர்களுக்காக $7 மில்லியன் உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

மின்-ஸ்கூட்டர்களுக்குப் பதிலாக அவர்கள் வேறு வாகனங்களை வாங்கிக்கொள்ள இந்த நிதி உதவும். 

இத்திட்டத்தின் கீழ், தங்களது மின்-ஸ்கூட்டர்களை திருப்பித் தரும் உணவு விநியோக ஊழியர்கள் மோட்டார் பொருத்தப்பட்ட சைக்கிள் வாங்க அவர்களுக்கு $1,000 வரை வழங்கப்படும். அல்லது சைக்கிள் வாங்க விரும்புபவர்களுக்கு $600 வழங்கப்படும். 

‘கிராப்’, ‘டெலிவரூ’, ‘ஃபுட்பாண்டா’ ஆகிய உணவு விநியோக நிறுவனங்கள் இந்த நிதித் திட்டத்தை நிர்வகிக்கும். 

இந்தத் திட்டத்திற்கு இதுவரை சுமார் 1,000 விநியோக ஊழியர்கள் பதிவு செய்துள்ளனர்.

நவம்பர் 7ஆம் தேதிப்படி மின்-ஸ்கூட்டரைப் பயன்படுத்தி உணவு விநியோகிக்கும் ஊழியராக இருப்பவர்கள் இந்தத் திட்டத்தில் பயன்பெறத் தகுதிபெறுவர். 

அடுத்த மாதம் 31ஆம் தேதி வரை இந்த உதவித் திட்டம் நடப்பில் இருக்கும்.

பற்றுச்சீட்டு, பயிற்சித் திட்டம்

பாதிக்கப்பட்ட உணவு விநியோகிப்பாளர்களுக்கு பற்றுச்சீட்டுகளையும் பயிற்சி உதவிகளையும் தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் வழங்கவுள்ளது.

உணவு விநியோகிப்பாளர்கள், மின்ஸ்கூட்டரிலிருந்து மின் சைக்கிளுக்கு சுமூகமாக மாற இந்த இரு திட்டங்கள் உதவியாக இருக் கும் என்று என்டியுசி கூறியது.

என்டியுசியின் உறுப்பினர்களாக இருக்கும் உணவு விநியோகிப்பாளர்கள், உணவு போன்ற அன்றாடத் தேவைகளுக்கு குறுகியகால நிதியுதவிக்கு விண்ணப்பிக்க    லாம்.

மேலும் கோப்பித்தியாம் உணவு நிலையங்கள், என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் பயன்படுத்தக்கூடிய 200 வெள்ளி வரையிலான வெகுமதி அட்டைகளும் வழங்கப்படும்.

நிதிச் சிரமங்களை எதிர்நோக்கும் உணவு விநியோகிப்பாளர்களுக்கு ‘UFSE’ எனும் குறுகியகால நிவாரண உதவிக்கு கோரிக்கை விடுக்கலாம்.

என்டியுசி உறுப்பினர் அல்லாத உணவு விநியோகிப்பாளர்கள் நவம்பர் 19க்கும் டிசம்பர் 31க்கும் இடையே உறுப்பினராக விண்ணப்பிக்கலாம். 

மூன்று மாதங்களுக்குப் பிறகு உறுப்பினர் கட்டணம் திருப்பியளிக்கப்படும் என்று என்டியுசி தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு, சேவை நிர்வாகம், முதலுதவி போன்றவற்றில் பயிற்சி பெறவும் உணவு விநியோகிப்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். 

மின்ஸ்கூட்டர் தடையால் வேலையை மாற்றிக்கொள்ள விரும்புவோருக்கு ‘e2i’ தகுந்த பயிற்சிகளுக்கு பரிந்துரை செய்யும்.