கொவிட்-19 நோய்ப் பரவலாலும் அது தொடர்பான கட்டுப்பாடுகளாலும் வழக்கம்போல இவ்வாண்டு தீபாவளி நிகழ்ச்சிகளை நடத்த இயலாத சூழ்நிலை. ஆயினும், மக்களிடம் கொண்டாட்ட உணர்வு குறைந்துவிடக்கூடாது எனும் நோக்கில், ஆதரவு தேவைப்படுவோருக்கு இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. பண்டிகைக் காலத்தில் மக்களை உற்சாகப்படுத்த இணையம் வழியாகப் பல நிகழ்ச்சிகளுக்கு அவை ஏற்பாடு செய்து வருகின்றன.
இர்ஷாத் முஹம்மது
எஸ்.வெங்கடேஷ்வரன்
கி.ஜனார்த்தனன்
இந்து இளங்கோவன்
ஆண்டுதோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாட்டப்படும் தீபாவளித் திருநாள் இவ்வாண்டு கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலிலும் மங்காத ஒளியாகப் பிரகாசிக்க பல சமூக அமைப்புகள் தங்களால் இயன்ற முயற்சியை எடுத்துவருகின்றன.
அதில் முதன்மையானது, அடித்தளத்திலிருந்து எழுந்த தேசிய அளவிலான திட்டம்.
மக்கள் கழக நற்பணிப் பேரவையின் ஏற்பாட்டில் குறைந்த வருமானம் ஈட்டும் கிட்டத்தட்ட 2,000 குடும்பங்களுக்கு தீபாவளிப் பலகாரங்கள் வழங்கப்படவுள்ளன. ஏறக்குறைய 70 சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் (ஐஏஇசி) அக்குடும்பங்களுக்குப் பலகாரங்களைக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் கைகொடுக்க உள்ளன. இந்த விழாக்கால அன்பளிப்பு விநியோகம் இம்மாதம் 12ஆம் தேதி முதல் தொடங்கும்.
சமய நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் மற்ற இனத்தவர்களும் இந்தியக் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யும் சேவைக்கு முன்வந்துள்ளனர்.
"அனைவரையும் உள்ளடக்கிய தீபாவளியைக் கொண்டாடுவது எங்களின் நோக்கம். வசதி குறைந்த குடும்பங்களுக்குப் பலகாரங்களை வழங்கி விழாக்கால குதூகலத்தைப் பரப்பவேண்டும் என உறுதிபூண்டுள்ளோம். தேசிய அளவில் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் பலவும் இணைந்து விநியோகத்தில் ஈடுபடுவது மகிழ்ச்சி தருகிறது," என்று மக்கள் கழக நற்பணிப் பேரவைத் தலைவர் திரு ராமமூர்த்தி கூறினார்.
இத்திட்டத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாக, வரும் 7ஆம் தேதி சுவா சூ காங்கில் உள்ள வாடகைக் குடியிருப்பில் வசிக்கும் 30 இந்தியக் குடும்பங்களுக்கு தீபாவளிப் பலகாரத் தட்டுகள் வழங்கப்படும்.
கேலாங் சிராய்
கடந்த பல மாதங்களாகக் கிருமித் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில், வேலை நீக்கம், வருமான இழப்பு, வர்த்தகச் சரிவு போன்ற பொருளியல்ரீதியான சிக்கல்களைப் பலரும் எதிர்கொண்டுள்ளதால் இவ்வாண்டில் விழாக்கால கொண்டாட்டங்கள் எப்படி இருக்குமோ என்று பலர் சிந்தித்து வருவதாகக் கூறினார் கேலாங் சிராய் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் துணைத் தலைவர் திரு முகம்மது மாலிக் கஞ்சா சபா.
"அதனால் குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் சமையல் பயிலரங்கு, மின்னிலக்க தீபாவளி, கோலப் போட்டி எனப் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளோம்," என்றார் அவர்.
இவ்வாண்டு பல இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் இணையம் வழியாக ஆடல், பாடல் நிகழ்ச்சி களுக்கும் ஏற்பாடு செய்துள்ளன.
மீடியாகார்ப் நிறுவனத்துடன் இணைந்து பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் அடுத்த சில நாள்களில் 'மீவாட்ச்' இணையவாசல் மூலம் மக்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன.
உள்ளூர் தொலைக்காட்சி நட்சத்திரங்களும் அந்நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர்.
நற்பணியின் ஏற்பாட்டில் தீபாவளி குறித்த கல்விசார் நிகழ்ச்சியும் ஃபேஸ்புக் நேரலை மூலம் ஒளிபரப்பப்படவுள்ளது. தீபாவளியின் முக்கியத்துவம், உடைகள், உணவு வகைகள், இந்த நோய்ப் பரவல் சூழலில் அப்பண்டிகை எப்படி கொண்டாடப்படுகிறது என்பது குறித்து 'மெஸ்ரா' எனப்படும் மக்கள் கழக மலாய் சமூக நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து இந்த இணைய நிகழ்ச்சி இடம்பெற இருக்கிறது.
இயூ டீ
இம்மாதம் 8ஆம் தேதி, ஏறத்தாழ 30 சமூக மன்ற உறுப்பினர்கள், 20 கலைஞர்களின் ஈடுபாட்டில் இயூ டீ சமூக மன்றத்தில் 'தீபமாலை 2020' என்ற கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்த காணொளி, இம்மாதம் 21ஆம் தேதி 'இயூ டீ சிசி ஐஏஇசி' ஃபேஸ்புக் பக்கம் வழியாக ஒளிபரப்பப்படும். மக்களை ஈடுபடுத்தும் வகையில் திறன் போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பங்கேற்க விரும்புவோர் தங்களது திறமைகளைக் காணொளியாகப் பதிவுசெய்து வரும் 15ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும். முடிவுகள் நேரடி நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும். முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு $300, $200, $100 ரொக்கப் பரிசுகளும் ஆறுதல் பரிசாக இருவருக்கு 50 வெள்ளியும் வழங்கப்படும். மேல் விவரங்களுக்கு facebook.com/YewTee CCIAEC பக்கத்தை நாடலாம்.
சொங் பாங்
'புரோஜெக்ட் அன்பு' என்ற பெயரில் ஓவ்வோர் ஆண்டும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு கைகொடுத்து வருகிறது சொங் பாங் சமூக மன்றத்தின் இந்தியர் நற்பணிச் செயற்குழு. கடந்த நான்காண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தால் இம்முறை 40 குடும்பங்கள் பயன்பெறும் என்று சொன்னார் சொங் பாங் ஐஏஇசி செயலாளர் பவானி பாலசேகரன், 40, கொண்டாட்ட நிகழ்ச்சிகளை இம்முறை பிரம்மாண்டமாக நடத்த முடியாத நிலையிலும் சமூகநலத் திட்டங்கள் தேவையுடையவர்களைப் போய்ச் சேரும் என்று நம்பிக்கையுடன் கூறினார். அன்பளிப்புப் பைகள் வரும் 7ஆம் தேதி விநியோகிக்கப்படும்.
உட்லண்ட்ஸ்
கொண்டாட்ட உணர்வு குறையாமல் இருக்க மூன்று நாள் தீபாவளி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது உட்லண்ட்ஸ் சமூக மன்றத்தின் இந்தியர் நற்பணிச் செயற்குழு. ஏற்கெனவே பதிவுசெயப்பட்டுவிட்ட அந்த நிகழ்ச்சித் தொகுப்பு வரும் 6, 7, 8 ஆகிய நாள்களில் மாலை 7 மணிக்கு ஃபேஸ்புக் நேரலை மூலம் ஒளிபரப்பாகும். பூமாலை கட்டுதல், தீபாவளிப் பலகாரங்கள் செய்முறை, கலை நிகழ்ச்சிகள் போன்ற பல அம்சங்களை அந்த நிகழ்ச்சி உள்ளடக்கியுள்ளது. மேல் விவரங்களுக்கு facebook.com/woodlands.iaec பக்கத்தை நாடலாம்.
புக்கிட் பாஞ்சாங்
இம்மாதம் 8ஆம் தேதி 'meWatch' வழியாக சேலை அணிவகுப்பு, கண்ணாடி ஓவியம், நடனம், கோலமிடுதல் எனப் பல நிகழ்ச்சிகளை புக்கிட் பாஞ்சாங் இந்தியர் நற்பணிச் செயற்குழு படைக்கவுள்ளது. இந்தப் பண்டிகைக் காலத்தின்போது மக்களை உற்சாகப்படுத்த தங்களால் முடிந்தவரை முயற்சி எடுத்து வருவதாகக் கூறிய அந்தச் செயற்குழுவின் தலைவர் கௌசல்யா ராமச்சந்திரன், இவ்வாண்டு கொண்டாட்டம் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்றார்.
சி யுவான்
தீபாவளியை முன்னிட்டு, குறைந்த வருமான இந்தியக் குடும்பங்களுக்கு உதவ
சி யுவான் இந்தியர் நற்பணிச் செயற்குழு திட்டமிட்டுள்ளது. அவ்வகையில், 'எங்கள் தீபாவளி 2020' எனும் நிகழ்ச்சி மூலமாக அங் மோ கியோ - ஹவ்காங் வட்டாரத்தைச் சேர்ந்த
48 குடும்பங்களுக்கு அரிசி, சமையல் எண்ணெய், கறித்தூள், மிளகாய்த் தூள், தீபாவளிப் பலகாரங்கள் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட உள்ளன. முதற்கட்டமாக, நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆறு குடும்பங்களுக்கு அன்பளிப்புப் பைகளையும் பற்றுச்சீட்டுகளையும் வழங்கினார் நாடாளுமன்ற உறுப்பினர் டேரல் டேவிட் (படத்தில் இடமிருந்து 2வது). மற்ற குடும்பங்களுக்கான அன்பளிப்புப் பை விநியோகம் இன்று முதல் தொடங்கும். பொருளுதவி மட்டுமின்றி மக்களை மகிழ்விப்பதற்கான அம்சங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் 7ஆம் தேதியன்று பிரியாணி, கோழிக் குழம்பு போன்ற உணவு வகைளைச் சமைப்பது எப்படி என்பதை விளக்கும் காணொளி சி யுவான் சமூக மன்றத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படும். அத்துடன், இம்மாதம் 28ஆம் தேதியன்று நகைச்சுவை விவாத அங்கமும் அதே ஃபேஸ்புக் பக்கத்தில் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பப்படும்.
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
மார்சிலிங்
'புரோஜெக்ட் அன்னதானம்' திட்டத்தின்கீழ் அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கி, மார்சிலிங் வட்டாரத்தில் உள்ள வசதி குறைந்த இந்தியர்களுக்கு மாதந்தோறும் 300 சைவ உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கே.சி. என்ற இளையர் குழு இந்த முயற்சிக்குக் கைகொடுத்து வருகிறது. வரும் 7ஆம் தேதி முதல் வசதி குறைந்த 220 குடும்பங்களுக்கு பாசுமதி அரிசி, சமையல் எண்ணெய், தீபாவளிப் பலகாரம் போன்றவை அடங்கிய அன்பளிப்புப் பைகளை மார்சிலிங் நற்பணிச் செயற்குழு விநியோகிக்கவுள்ளது. இதற்கான நிதி ஆதரவை பல தனியார் நிறுவனங்களும் தனிமனிதர்களும் வழங்கி உள்ளனர். பண்டிகைக் காலத்தின்போது உதவி தேவைப்படும் மக்களுக்கு முன்வந்து உதவும் இவர்களின் மனப்பான்மை தம்மை நெகிழ வைப்பதாகக் குறிப்பிட்டார் மார்சிலிங் இந்தியர் நற்பணி செயற்குழுவின் தலைவர் திருமதி நொர்மானிஷா. படம்: மார்சிலிங் இந்தியர் நற்பணிச் செயற்குழு
ஸெங்ஹுவா
ஆண்டுதோறும் தீபவாளிப் பண்டிகைக் காலத்தின்போது கலை நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம் என்றாலும் இவ்வாண்டு கொரோனா தொற்று காரணமாக சமூக அளவிலான கொண்டாட்டங்களை நடத்த இயலாமல் போய்விட்டது. இருப்பினும், குடியிருப்பாளர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் கடந்த மாதம் 17, 24ஆம் தேதிகளில் இணையம்வழி தீபாவளி சிறப்பு சமையல் வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது ஸெங்ஹுவா இந்தியர் நற்பணிச் செயற்குழு. புகழ்பெற்ற சமையல் கலை வல்லுநர் தேவகி (வலப்படம்) நடத்திய அவ்வகுப்பில் எழுபதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அதில், பிரியாணி, பலகாரங்கள் போன்றவற்றைச் செய்வது குறித்துக் கற்றுக்கொடுக்கப்பட்டது. இதில் மலாய், சீனக் குடியிருப்பாளர்களும் பங்கேற்றனர். படம்: ஸெங்ஹுவா இந்தியர் நற்பணிச் செயற்குழு

