'அன்பிற்குரியவர்களுக்காகத் தனித்திருங்கள்'

'அன்பிற்குரியவர்களுக்காகத் தனித்திருங்கள்'

2 mins read
f4bd0434-317a-4e09-b704-abfc4c93aae2
-

கிருமித்தொற்றில் இருந்து மீண்டவரின் அக்கறை, அறிவுரை

கொவிட்-19 தொற்றை வெற்றி­கொள்ள தனி­மையே முக்­கிய ஆயு­தம் என்­ப­தால் பண்­டி­கைக் கால­மாக இருந்­தா­லும் அன்பிற்குரி­ய­வர்­க­ளுக்­காக தனி­மை­யில் இருக்­கத் தயங்­கக்­கூ­டாது என்­கிறார் அதி­லி­ருந்து மீண்­டு வந்த ஆர்.எஸ். சுப்­பிர­ம­ணி­யம், 50 (படம்).

கணினி கட்­ட­மைப்பு தலை­மைப் பொறி­யா­ள­ரான திரு மணி, ஆபத்­தி­லி­ருந்து விடு­பட்ட நிம்­மதி இருந்­தா­லும் அது கொண்­டாட்ட உணர்­வாக இன்­னும் உரு­வெ­டுக்­க­வில்லை என்­கி­றார்.

தீபா­வ­ளி­யன்று நண்­பர்­க­ளு­டன் கொண்­டாட்­டம் ஒன்றை நடத்­த­லாம் என முத­லில் நினைத்­தி­ருந்த இவர், பாது­காப்­பிற்கு முன்­னு­ரிமை அளித்து அந்த எண்­ணத்­தைக் கைவிட்­டார்.

"மெத்­த­ன­மாக இருந்­தோம் எனில் கிருமித்தொற்று முன்­பு­போல உயர்­வ­தற்கு அதிக காலம் ஆகாது," என்று இவர் கூறி­ய­போது ஒரு­வித அக்­க­றை உணர்வு தொனித்­தது.

சுவா சூ காங் வட்­டா­ரத்­தில் தனி­யாக வசிக்­கும் ஒற்­றை­ய­ரான திரு மணி கடந்த ஏப்­ரல் 24ஆம் தேதி குட­லி­றக்­கப் பிரச்­சினைக்­காக ஃபேரர் பார்க் மருத்­து­வ­மனை­யில் சேர்க்­கப்­பட்­டார். பின்னர் 41 டிகிரி செல்­சி­யஸ் அள­விற்குக் காய்ச்­சல் கண்டதையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரி­விற்கு மாற்றப்பட்டார்.

"மூச்­சுப் பிரச்­சி­னை­யா­லும் தொண்­டை­யில் தொற்­றா­லும் சிர­மப்­பட்­டேன். இறு­தி­யில், என்னை கொரோனா தொற்றி இருந்­ததை மருத்­து­வப் பரி­சோ­த­னை­கள் உறுதி செய்­தன," என்றார் இவர்.

சிங்­கப்­பூ­ரில் பிறந்த திரு மணி­யின் தாயா­ரும் சகோ­த­ரி­யும் தமி­ழ­கத்­தின் நாமக்­கல் நக­ரில் வசிக்­கின்­ற­னர். இங்­குள்ள தம் பெரி­யம்­மா­வும் அவ­ரின் பிள்­ளை­களும் இவருக்கு நெருங்­கிய உற­வு­க­ளாக உள்­ள­னர். ஆனால் நோய்­வாய்ப்­பட்ட தம்மை எவ­ரா­லும் காண இய­ல­வில்லை என்று திரு மணி தெரிவித்தார்.

இவ்வாண்டு ஏப்­ரல் 3ஆம் தேதி­யன்று நோய்ப்­ப­ர­வல் முறி­ய­டிப்­புக் கால­கட்­டத்­தின்­போது கடும் கட்­டுப்­பா­டு­கள் நில­வி­ய­தால் இவர் தனிமையை உணர்ந்தார்.

"தனி­மை­யில் இருந்­த­போது என் மனம் அங்­கு­மிங்­கும் அலை­பாய்ந்­தது. இயல்­பா­கவே நான் துணிச்­சல்­மிக்­க­வன் என்­றா­லும் ஒரு­கட்­டத்­தில் உயிர் போய்­வி­டுமோ எனத் தோன்­றி­யது. இந்­தி­யா­வில் கிருமிப்­ ப­ர­வல் மிரட்­ட­லுக்கு இடை­யில் வசிக்­கும் என் தாயா­ரி­டம் இதைப் பற்றி மனம்­விட்­டுப் பேசி­னேன்," என்று இவர் சொன்­னார்.

மே மாதம் மூன்­றாம் வாரத்­தில் மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து வெளி­யே­றிய திரு மணி, மேலும் 14 நாள்­க­ளுக்கு வீட்­டிலேயே இருந்தார்.முன்னர் திட்டமிட்டவாறே, தனி­மைக்­கா­லம் முடிந்ததும் புதிய வேலையில் சேர்ந்­தார்.

கடந்த சில மாதங்­க­ளாக வேலை­யி­லேயே மூழ்­கி­யி­ருந்த திரு மணி, குடும்­ப நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்க இயலவில்லை.

"என் ஒன்­று­விட்ட சகோ­த­ர­ருக்கு ஜூன் மாதம் பேத்தி பிறந்­தாள். இது­வ­ரை­யி­லும் நான் அந்­தக் குழந்­தை­யைக் காணச் செல்­ல­வில்லை," என்று வருத்தத்துடன் கூறிய இவர், தீபா­வளி நாளன்று முழுவதும் 'ஸ்கைப்'­ மூல­மாக தமி­ழ­கத்­திலுள்ள தம் தாயா­ரு­டன் உரை­யா­டப்­போ­வ­தா­கச் சொன்னார்.

இந்­தி­யா­வில் கிரு­மித்­தொற்று தொடர்ந்து அதி­க­ரித்­து­ வ­ரு­வ­தால் தம் தாயா­ருக்கு நம்பிக்கையை ஊட்டி, தீபா­வ­ளி­யைக் கழிக்­கப்­போ­வ­தாக இவர் கூறி­னார்.