எஸ்.வெங்கடேஷ்வரன் இர்ஷாத் முஹம்மது
பட்ட காலிலேயே படும் என்பதைப் போல தேக்கா நிலையத்திலுள்ள கடைக்காரர்கள் மீண்டும் ஒரு இக்கட்டான நிலையை எதிர்நோக்குகின்றனர்.
கொவிட்-19 உலகளவிலும் தேசிய அளவிலும் அனைத்து வர்த்தகங்களுக்கும் கடந்த சில மாதங்களில் பெரிய அளவிலான வருமான இழப்பை ஏற்படுத்தியது. நெருக்கடி காலத்திலிருந்து மீண்டு, நிலைமை மெல்ல சீரடைந்து வரும் வேளையில், கடந்த வாரம் தேக்கா நிலையத்தில் உள்ள வர்த்தகர்கள், குறிப்பாக ஈரச்சந்தையில் கடை நடத்துவோருக்கு மீண்டும் ஒரு சோதனை ஏற்பட்டுள்ளது.
"கொரோனா கிருமித்தொற்றால் இவ்வாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட வியாபார நெருக்கடியைவிட கடந்த வாரம் ஏற்பட்ட பாதிப்பு மோசமானது. அறவே வியாபாரம் இல்லை. வழக்கமாக வரும் ஒரு சிலர்கூட இந்தப் பக்கமே எட்டிப் பார்க்கவில்லை," என்று வேதனைப்பட்டார் தேக்கா ஈரச்சந்தையிலுள்ள 'பீகே ஃபிஷ் சபிலையர்' கடலுணவு கடையின் உரிமையாளர் திருவாட்டி ஹரிகிருஷ்ணன் உமா, 45.
இறால், நண்டு போன்ற கடல் உணவுகளையும் காய்கறிகளையும் பல நாட்கள் வைத்திருக்க முடியாது. அழுகிவிடும். தூக்கித்தான் வீச வேண்டும் என்று சந்தையில் கடை வைத்திருப்போர் அங்க லாய்த்தனர்.
சோகத்துடன் பிறந்த டிசம்பர்
வழக்கமாக மாதத் தொடக்கத்தில் பலருக்கும் சம்பளம் கிடைக்கும் நேரத்தில் கடைகளில் வியாபாரம் அதிகரிக்கும். போட்டிபோட்டுக்கொண்டு ஒவ்வொரு கடையும் மக்களை ஈர்க்க அதிகமான பொருட்களை மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை தருவிக்கும்.
"ஆனால், இம்மாத தொடக்கத்தில் பரவிய வதந்தியால் தேக்கா நிலைய ஈரச்சந்தையில் வியாபாரம் முழுமையாகப் படுத்துவிட்டது. அனைத்துப் பொருட்களும் தேங்கிவிட்டன," என்றார் தேக்கா நிலையத்தில் நான்கு கடைகளை நடத்திவரும் 62 வயது திரு முஸ்தஃபா ஷாஹுல் ஹமீது.
இறைச்சி வியாபாரம் பாதிப்புஅடைந்தாலும், பல உணவு கடைகளுக்கு இறைச்சி விநியோகம் செய்வதால் நஷ்டம் ஏற்படாமல் ஓரளவு சமாளிக்க முடிந்ததாக 'சீனி முகம்மது' கடை ஊழியரான 38 வயது திரு பிரபு கோவிந்தராசு தெரிவித்தார்.
"மக்கள் வந்து வாங்குவது முக்கியம். எங்கள் கடையில் மளிகைப் பொருட்களை வாங்குபவர்களும் குறைந்துள்ளனர்," என்று கூறினார் திரு பிரபு.
தேக்காவில் கொரோனா கிருமித்தொற்று குழுமம் இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்பது இறைச்சி, மளிகைக் கடைகள் வைத்திருக்கும் திரு சீனி முகம்மதுவின் கோரிக்கை.
தேக்கா நிலையத்தில் ஏற்பட்ட ஒரு கிருமித்தொற்று சம்பவம் ஒரு இறைச்சிக் கடை உரிமையாளர் தொடர்புடையது என்ற திரு சீனி முகம்மது, அந்தக் கடைக்காரர் எப்போதாவதுதான் கடைக்கு வருவார் எனக் குறிப்பிட்டார்.
"அவர் இங்கு வேலை பார்ப்பவர் இல்லை. அதனால் தேக்காவில் கிருமித்தொற்று இருக்கிறது என்று சொல்ல முடியாது என்றார் அவர்.
தேக்கா ஈரச்சந்தையில் உள்ள பல கடைக்காரர்களும் இதே கருத்தை வெளிப்படுத்தினர். எப்போதாவதுதான் அந்தக் கடை உரிமையாளர் கடைக்கு வருவார் என்றும் மிகக் குறைந்த நேரமே அவர் அங்கே இருப்பார் என்றும் அவர்கள் கூறினார்.
உணவுக் கடைகளிலும் கூட்டம் குறைந்தது
தேக்கா நிலைய, உணவங்காடிக் கடைகளிலும் கடந்த ஒரு வாரமாக வியாபாரம் சற்றுக் குறைந்துள்ளது.
கிட்டத்தட்ட 20 விழுக்காடு வியாபாரம் குறைந்துவிட்டதாகக் கூறிய 'ஏ.ஆர்.ரகுமான் கஃபே' உரிமையாளர் திரு முஜிபுர் ரஹ்மான், எனினும் அடுத்தடுத்த வாரங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வியாபாரம் திரும்பும் என்று நம்புகிறார்.
"இது செய்தியின் உடனடி விளைவு. மக்களின் பயம் சில நாட்களில் குறைந்துவிடும். அவர்கள் பழையபடி கடைகளுக்கு வரத்தொடங்குவர்" என்றார் 48 வயது திரு ரஹ்மான்.
உணவுக் கடைகளுக்குச் செல்வோர் கூட்டமாகச் செல்லாமல் இருப்பதுடன் முறையான பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்றார் அவர்.
ஜோதி ஸ்டோர் ஊழியருக்கு இந்தியாவில் தொற்றியது
லிட்டில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கடைக்காரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கண்டறியப்பட்ட இரண்டு சம்பவங்களில் ஒன்று ஜோதி ஸ்டோர் கடைஊழியர் திரு கிருஷ்ணமூர்த்தி குமார்.
அவர் அக்டோபர் மாதம் இந்தியாவிலிருந்து திரும்பியதும் வீட்டில் தங்கவேண்டிய கட்டாய உத்தரவை குறிப்பிடப்பட்ட இடத்தில் நிறைவேற்றி வந்தார். அச்சமயத்தில் அவருக்கு சிரோலஜி பரிசோதனை செய்யப்பட்டு அதில் அவருக்கு ஏற்கெனவே கொவிட்-19 கிருமி தொற்றியிருந்தது தெரியவந்துள்ளது.
"அவருக்கு நோயின் தன்மை குறைந்துள்ளது. அது பரவாது என்றும் உடலில் அதற்கான எதிர்ப்புசக்தி இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்," என்றார் ஜோதி ஸ்டோர் நிறுவனத்தின் உரிமையாளர் திரு ராஜ்குமார் சந்திரா.
அவர் தங்குமிடம் திரும்பி, வேலைக்குத் திரும்பிவிட்டார். தேக்கா வட்டாரத்தில் ஒட்டுமொத்த பரிசோதனை நடத்தப்பட்டபோது ஜோதி ஸ்டோர் ஊழியர்கள் அனைவரும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். அதில் குமாருக்கு நோய்த்தொற்று இருப்பது தெரியவந்து அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு ஏற்கெனவே இருந்த கிருமித் தொற்றுத்தான் என்பதை அறிந்து மறுநாளே மருத்துவமனையிலிருந்து அவர் வீடு திரும்பினார்.
'தேக்கா பாதுகாப்பானது'
தேக்காவில் பலரும் கொவிட்-19 பரிசோதனைகளைச் செய்து கொண்டுள்ளனர். கடைகளுக்கும் கிருமிநாசினி கொண்டு சுத்திகரிப்புப் பணிகள் நடந்துள்ளன. முன்பைவிட தற்போது தேக்கா பாதுகாப்பாக உள்ளது என்பதாலேயே தாங்கள் அங்கு பயமின்றி செயல்பட முடிவதாக வர்த்தகர்கள் பலரும் கூறினர்.
சென்ற வாரம் சனிக்கிழமை கொவிட் கிருமித்தொற்று செய்தி வந்ததிலிருந்து அதற்கு மறுநாளான ஞாயிற்றுக்கிழமையிலிருந்து கூட்டம் குறைந்துவிட்டதாகவும் தமது கடைகளில் வியாபாரம் 50% குறைந்துவிட்டது என்றும் திரு முஸ்தஃபா கூறினார்.
பஃப்ளோ சாலையில் இயங்கும் 'சென்னை டிரேடிங்' காய்கறிக் கடையில் வியாபாரம் 40% வரை குறைந்துள்ளதாக கடையின் உரிமையாளர் திரு ராமமூர்த்தி கூறனார்.
எனினும், கேம்பல் லேன், டன்லப் ஸ்திரீட் பகுதிகளில் உள்ள தமது கடைகளில் அவ்வளவு பாதிப்பு இல்லை என்றார் அவர்.
லிட்டில் இந்தியா செல்ல பயப்படும் சிலர் வீட்டிற்கு அனுப்பி வைக்கும் சேவையை அதிகமாக நாடத்தொடங்கியுள்ளனர்.
"வாராவாரம் தேக்கா நிலையம் சென்று மீன், இறைச்சி, கோழி, காய்கறிகளை வாங்குவேன். பார்த்து வாங்கினால்தான் எனக்கு திருப்தியாக இருக்கும். இப்போது முதல்முறையாக கடையைத் தொடர்புகொண்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கச் சொன்னேன்," என்றார் 65 வயது திரு ராம் சொக்கலிங்கம்.
மற்றொரு வாடிக்கையாளர் வழக்கமாக பொருள் வாங்கும் கடையைத் தொடர்புகொண்டு வேண்டிய பொருட்களை பஃப்ளோ சாலை கார் நிறுத்திமிடத்திற்குக் கொண்டு வந்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தேக்கா சந்தைக்குள் வரவே அவரைப் போன்ற பலரும் பயப்படுவதாக 'டோலா சிக்கன் ஸ்டோர்' கடையின் உரிமையாளர் கூறினார்.
கிருமியின் வேகத்தை மிஞ்சும் வதந்தி
தேக்கா வட்டாரத்தில் உள்ள கடைக்காரர்களுக்குச் செய்யப்பட்ட கொவிட்-19 பரிசோதனையின் மூலம் ஓரிரு சம்பவங்கள் பதிவாகியிருந்தாலும் வதந்திகளோ கட்டுப்பாடு இல்லாமல் பரவுகின்றன.
இதனால் வீண் பயமும் தேவையில்லாத இன்னல்களுமே விஞ்சுகின்றன என்றார் தேக்கா நிலையத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள 'மஹிஷா கலெக்ஷன்ஸ்' எனும் கடையின் உரிமையாளரான திரு முருகையன் இளங்கோ, 48.
"தேக்காவிற்கு வருவோரில் பலரும் முதியவர்கள். பயத்தில் பொய்யான தகவல்களை நம்பிவிடுகிறார்கள். அதிகாரபூர்வ தளங்களில் தகவல்களைப் பாருங்கள். யாரோ சொல்வதை நம்பாதீர்கள் என்று சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன்," என்று வருத்தத்துடன் கூறினார் திரு இளங்கோ.
"நான் அடிக்கடி தேக்கா வந்து செல்வேன். பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்து வந்த வேலையை சீக்கிரம் முடித்துக்கொண்டு கிளம்பி விடுவேன். தேக்கா மட்டுமின்றி சிங்கப்பூரில் எந்த இடத்திற்குச் சென்றாலும் இந்த வழிமுறையையே நான் பின்பற்றுவேன். பாதுகாப்பாக இருந்தால், கிருமித்தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளலாம். வதந்திகளை நம்பி வீணாக பயப்படத் தேவையில்லை," என்றார் பூகிஸ் பகுதியில் பணிபுரியும் திரு ஸாஹிர் ஹுசேன்.
பால் பொங்கும் நேரத்தில் பானை உடைந்தது போல, மெல்ல பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த லிட்டில் இந்தியா வர்த்தகத்தை அண்மைய கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் அடியோடு முடக்கிவிட்டன.
கடந்த வாரம் தேக்கா நிலையத்திலும் அதைச் சுற்றி உள்ள பகுதிகளிலும் செயல்படும் 876 கடைக்காரர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டதில் இருவருக்குக் கிருமித் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. ஆனால், இச்செய்தி ஊதிப் பெரிதாக்கப்பட்டது தேக்காவை பெரும் கிருமித்தொற்று பகுதியாக உருவகித்து வதந்திகள் சமூக ஊடகங்களில் நாளுக்குநாள் பல்கிப் பெருகுகின்றன.
அதனால், அச்சமடைந்த மக்கள் தேக்காவை முற்றாகத் தவிர்க்கத் தொடங்கிவிட்டனர். பல மாதங்களாக வியாபாரமின்றி வெறிச்சோடியிருந்த லிட்டில் இந்தியா தீபாவளி விழாக்காலத்தில்தான் மெல்ல மெல்ல களைகட்டத் தொடங்கியது.கடைக்காரர்கள் நீண்டகாலத்திற்குப் பின்னர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். அதற்குள் மீண்டும் வியாபாரம் படுத்துவிட்டதை நினைத்து மேலும் நொந்துப்போய் நிற்கின்றனர்.

