சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் சுய விருப்பத்தின்பேரில் இலவச தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று பிரதமர் லீ சியன் லூங் தமது அறிவிப்பில் குறிப்பிட்டு இருந்தார். "அமைச்சரவை சகாக்களும் நானும் தடுப்பூசியை முன்கூட்டியே பெற உள்ளோம். தடுப்பூசி மருந்து பாதுகாப்பானது என்ற நம்பிக்கையை உணர்த்த இவ்வாறு செய்ய உள்ளோம்," என்றார் அவர்.
சிங்கப்பூரில் 'ஃபைசர்-பயோஎன்டெக்' (Pfizer-BioNTech) தடுப்பூசி, சுகாதார அறிவியல் ஆணையத்துறை ஒப்புதல் அளித்து உள்ள முதல் தடுப்பூசியாகும். மைனஸ் 70 டிகிரி செல்சியல் தட்பவெப்ப நிலையில் வைக்கப்படவேண்டிய தடுப்பூசி இம்மாத இறுதிக்குள் சிங்கப்பூரை வந்தடையும் என்பதும் பிரதமரின் அறிவிப்பாக இருந்தது.
தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து பிரதமர் லீ உத்தரவாதம் கொடுத்துள்ளபோதும் உபசரிப்புத் துறையில் பணியாற்றும் அற்புதராஜ், 33, போன்ற சிலர் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து அக்கறை கொள்வதாகத் தெரிவித்தனர்.
ஆயினும் உண்மையான விவரங்களை சரியாக தெரிந்து கொண்டு தடுப்பூசிக்கு விண்ணப்பிப்பது நல்லது என்று தடுப்பூசியைப் பெறவுள்ள மருத்துவமனை நிர்வாகி லட்சுமி, 50, தெரிவித்தார். "வருங்காலத்தில் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்யும் ஆசை எனக்கு உள்ளது. தடுப்பூசியை போட்டுக்கொள்ளா விட்டால் வெளியூர் பயணங்களை மறக்க வேண்டியதுதான்," என்றார் அவர்.

