கொவிட்-19 கொள்ளைநோய் உலகெங்கும் பல்லாயிரக்கணக்கானோரின் வேலைகளை ஏப்பம் விட்டுவிட்டது. இச்சூழலிலும் இதற்குப் பிறகான காலத்திலும் வேலையில் இருக்கவும், வாழ்க்கையில் தொடர்ந்து மேம்படவும் மக்கள் தங்களைப் பலவழிகளிலும் தயார்ப்படுத்தி வரவேண்டியுள்ளது. கொரோனா நோய்ப் பரவல் காலத்தில் வேலைகளைப் பாதுகாத்துக்கொள்வது முக்கியம் என்றால், அதைவிட வேலை இடத்தில் மனநலனைக் கட்டிக்காப்பது முக்கியமாக உள்ளது.
வேலைகள், மக்களின் மனநலம் இரண்டையும் கொரோனா சூழல் பாதித்து உள்ளதால் இரண்டையும் பேண தகுந்த அணுகுமுறைகள் அவசியமாகின்றன...
கி.ஜனார்த்தனன்
கொவிட்-19 கிருமிப்பரவலால் மாறிவிட்ட வேலை நடைமுறைகளால் உண்டான சிக்கல்களில் ஊழியர் மனநலச் சிக்கல் முக்கியமானது. நிச்சயமற்ற நிலைமை, வீட்டிலிருந்து வேலை பார்ப்பதால் ஏற்படும் தனிமை உள்ளிட்டவற்றால் ஊழியரணியின் மனநலம் மீதான அழுத்தம் கூடியுள்ளது. மனநலப் பிரச்சினைகளால் உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
அத்துடன், மருத்துவ விடுப்பு எடுப்போரின் எண்ணிக்கையும் வேலையில் இருந்து விலகுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.
உலக ஊழியரணியில் கிட்டத்தட்ட பாதிப் பேர், கிருமிப்பரவலால் கவலையையும் வேலைவாய்ப்பு குறித்த அச்சத்தையும் உணர்வதாக கருத்துக்கணிப்புகள் சுட்டுகின்றன. அலுவலகத்தில் வேலை செய்ய முடியாததால் உணரும் தனிமை, வேலை-வாழ்க்கை சமநிலையைக் கட்டிக்காக்க இயலாமை ஆகியவற்றாலும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
வேலைச் சூழல், கட்டுப்பாடுகள், வேலைப்பளு, எதிர்பார்க்கப்படும் செயல் திறன், வேலை நேரம், வேலையிடக் கட்டமைப்பு போன்ற பல்வேறு காரணங்கள் மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
கொவிட்-19 கிருமிப்பரவலின்போது, வீட்டிலிருந்து வேலை செய்வது, பிரிக்கப்பட்ட குழுக்களாக வேலை செய்வது போன்றவற்றால் வேலைச் சூழல் பலருக்கு வெகுவாக மாறியுள்ளது. இதனால் ஏற்படும் மன உளைச்சல் சிலரது மனநலனைப் பாதிக்கலாம்.
ஒவ்வொரு துறையினருக்கும்
பல்வேறு சவால்கள்
சட்ட நிறுவனம் ஒன்றில் மனிதவள நிபுணராகப் பணிபுரியும் 25 வயது அகிலா நடராசன், கிருமிப்பரவலால் ஏற்பட்டுள்ள வேலைச்சூழல் மாற்றங்களைச் சமாளிப்பதுடன், மற்ற ஊழியர்களுக்கும் மாற்றங்களைச் சமாளிக்க உதவ வேண்டிய சூழ்நிலை இருந்தது.
அடிக்கடி புதுப்பிக்கப்படும் மனிதவள அமைச்சின் விதிமுறைகளுக்கு ஏற்ப தமது நிறுவனத்தின் கொள்கைகளை மாற்றுவதும் அதனை முறையாக செயல்படுத்துவதும் தொடக்கத்தில் இவருக்குச் சவால்மிக்கதாக இருந்தது.
வீட்டிலிருந்து பணிபுரிவோருக்கு, வீட்டிலிருந்து வேலை செய்யும் வழிமுறைகள் குறித்துக் கற்பிக்க வேண்டி இருந்ததாக கடந்த நான்கு ஆண்டுகளாக இத்துறையில் பணியாற்றும் குமாரி அகிலா தெரிவித்தார்.
"எல்லை மூடல் காரணமாக இங்கேயே தங்கியுள்ள வெளிநாட்டினருக்கு ஏற்படும் தனிமை உணர்வைப் போக்க, கேளிக்கை, கலந்துறவாடலுக்கான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்கிறோம். அவை அவர்களது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன," என்றார் குமாரி அகிலா.
நேர்மறைச் சிந்தனை
மன உளைச்சலைக் குறைக்கும்
கொவிட் சூழலால் குடும்பத்தில் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டபோது நேர்மறையான எண்ணங்களால் பிரச்சினைகளைச் சமாளித்தார் பெட்ரோல் நிலைய பணியாளர் செல்வகுமார் கன்னியப்பன்.
சிறுநீரகச் சுத்திகரிப்புக்குச் செல்ல வேண்டிய மனைவியின் மருத்துவச் செலவு, இரு பிள்ளைகளின் படிப்புச் செலவு, குடும்பச் செலவுகளைச் சமாளிப்பதற்காக மக்கள் கழகம் போன்ற அமைப்புகளை நாடுவதாகக் கூறிய திரு செல்வகுமார், பிரச்சினைகளைப் பற்றி அடிக்கடி நினைப்பதைத் தவிர்த்துக்கொள்வதாகக் கூறினார்.
மனநல உதவியை அரசாங்கம் பலருக்கு வழங்க முற்பட்டாலும் வேலைஇடங்கள் இதனைப் புரிந்துகொள்ள காலதாமதம் ஆகும் என்பதால் தனக்குத் தானே தொடர்ந்து தைரியமூட்டி வருவதாக அவர் தெரிவித்தார்.
மனோதத்துவ நிபுணர் ராஜேஷ் ஜேக்கப் வழங்கும் ஆலோசனை
வேலைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான வரையறை தற்போதைய கிருமிப்பரவல் சூழலால் பலருக்கு இல்லாமலாகி வருகிறது. அலுவலகத்தில் வேலை பார்க்கும்போது குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிய வேண்டிய வேலை நேரம், அடிக்கடி நீட்டிக்கப்படுவதால் பலருக்கு மன உளைச்சல் கூடுவதாக அறியப்படுகிறது.
வேலை நேரத்திற்கு அப்பாலும் முதலாளிகள் ஊழியர்களுக்குத் தொடர்ந்து மின்னஞ்சல்களையும் குறுந்தகவல்களையும் அனுப்புவதால் எரிச்சல், மன உளைச்சல் ஆகியவற்றுடன் மன அழுத்தமும் பதற்றமும் அதிகரித்திருப்பதாக மனோதத்துவ நிபுணர் ராஜேஷ் ஜேக்கப் தெரிவித்தார்.
"வீட்டிலிருந்து வேலை செய்வதால் சக ஊழியர்களுடன் உறவாட இயலாத சிலர் தனிமையை எதிர்நோக்குகிறார்கள், அல்லது வீட்டில் தேவைப்படும் தனிமையைப் பெற முடியாமல் சிரமப்படுகின்றனர்.
"சிங்கப்பூரில் கிருமிப்பரவல் நிலவரம் சீரடையும் நிலையில் சிலர் தங்களது வேலை யிடங்களுக்குத் திரும்புகின்றனர். எனினும், கிருமித்தொற்று அபாயம் முற்றிலும் மறையவில்லை என்பதால் அதுகுறித்த பதற்றம் சிலருக்கு இருக்கலாம்," என்றார் அவர்.
"தற்போதைய நிச்சயமற்ற பொருளியல் சூழலில் சிலருக்கு ஏற்படும் பதற்றமும் குழப்பமும் மதுவருந்துதல் போன்ற தீய பழக்கங்களுக்கு வித்திடுவதாகக் கூறிய டாக்டர் ராஜேஷ், இந்த மனஉளைச்சலால் சிலர் தங்களது உயிரைக்கூட மாய்த்துக்கொள்ளும் அபாயம் இருப்பதாகத் தெரிவித்தார்.

