தமிழ்மொழி விழாவில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான கவிதை, கதை வாசிப்பு, தமிழ் திரைப்படங்களையும் அவற்றில் பகிரப்படும் சமூக கருத்துகளையும் பற்றிய விமர்சனங்கள், அமைப்பு சாரா தனிப்பட்ட கலைஞர்களை அங்கீகரிப்பது போன்ற நிகழ்ச்சிகள்.
தமிழ்மொழி விழாவில் சிறார்களின் தமிழ் ஆர்வத்தைத் தூண்ட, குழு கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தலாம். சிறுவர் பாடல், நாடகம் எழுத பயிலரங்குகளுக்கு ஏற்பாடு செய்யலாம். சிறார்களுக்கான மூன்று நாள் தமிழ் கற்கும் பயிலரங்கு போன்ற நிகழ்ச்சிகளை ஆராயலாம்.
பொது கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பேசுபவர்களுக்கு தமிழில் விளக்கிச் சொல்ல சரியான வார்த்தை தெரியாத சூழ்நிலையில், அங்கிருப்போர் அவருக்கு உதவலாம். அந்த வார்த்தையை மற்றவர்களுக்கும் பகிரலாம்.
வேலை செய்யும் இளையர்களுக்கான பட்டிமன்றம், கருத்தரங்குகள், உரையாடல்கள் ஏற்பாடு செய்யலாம்.
சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம், பாஸ்கர் ஆர்ட்ஸ் போன்ற கலைப் பள்ளிகளுடன் இணைந்து சிங்கப்பூர் எழுத்தாளர்களின் இலக்கியங்களைக் கலை வடிவத்தில் படைப்பது, சுய படைப்புகளை எழுத அதிக வாய்ப்புகளை உருவாக்குவது.
உள்ளூர், வெளிநாட்டு தமிழ்ச் சமூகப் பக்கங்களுடன் இணைந்து நிகழ்ச்சிகள் நடத்தலாம்.
உள்ளூர் தமிழ் எழுத்தாளர்கள், படைப்பாளர்கள், நாடகக் கலைஞர்களுடன் கலந்துரையாடல்கள், தமிழ்க் காப்பியங்கள், கதைகளை மையமாகக் கொண்ட பொம்மலாட்டம் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகளை நடத்தலாம்.
சிலப்பதிகாரம், கம்ப ராமாயாணம் போன்ற பல தமிழ் இலக்கியங்கள் குறித்து இளையர்கள் பலருக்கும் தெரியவில்லை. பழங்கதை என்று இப்போது இவற்றைப் பலரும் ஒதுக்கிவிட்டு, புதியவற்றையே நாடுகின்றனர். சிலருக்குப் பழையதாக இருப்பது பலருக்குத் தெரியாமலே உள்ளது. அதனால் பட்டிமன்றம், நீளமான உரைகளுக்குப் பதிலாக சுவாரசியமான பயிலரங்குகள், நாடகங்கள் போன்ற நிகழ்ச்சிகள் தேவை.
அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கும் வரலாறு குறித்த உரையாடல்களை ஏற்பாடு செய்யலாம்.
சிங்கப்பூர் தமிழர்கள், தமிழ்மொழி குறித்த முன்னேற்றங்கள், விமர்சனங்கள் பிரச்சினைகள், விவகாரங்கள், அக்கறைகள் போன்றவற்றைப் பகிரவும் பேசவும் அமைப்பு சாரா பொதுத் தளம் தேவை. அமைப்பு சார்ந்த பக்கங்கள் சார்புடையதாகவும் மற்றவர்களைச் சாடுபவையாகவும் உள்ளன.
வாழ்த்துரைகளுக்கான நேரத்தைக் குறைத்து, நிகழ்ச்சிகளை ஒரு மணி நேரத்துக்குள்ளாக முடிப்பது பலரும் பங்கேற்க ஊக்கப்படுத்தும்.

