தமிழ் மொழிப் பயன்பாட்டுக்கு உரிய பொதுத் தளங்களுள் தனிச் சிறப்பு வாய்ந்தவை சமயம் சார்ந்த அமைப்புகளும் வழிபாடுகளும். அவற்றுள்ளும் தலையாயவை நமது ஆலயங்கள், பள்ளிவாசல்கள் மற்றும் தேவாலயங்கள் போன்றவையும் அவற்றின் தமிழ்த்தொண்டும்.
"எங்கள் பள்ளிவாசலில் மக்கள் படிக்க தினமும் தமிழ் முரசு நாளிதழை வாங்குவதோடு இங்கு பயன்படுத்தப்படும் 90% புத்தகங்கள் தமிழில்தான் உள்ளன. பாடங்கள் அரேபிய மொழியில் இருந்தாலும் அதைத் தமிழில் மொழிபெயர்த்து பிள்ளை
களுக்குக் கற்றுத்தருகிறோம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறும் பிரதான தொழுகைக்கு முன்பு நடக்கும் 30 நிமிட பிரார்த்தனையும் உபதேசமும் தமிழில் நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடத்தப்படும் உரையில் குர்ஆன் விளக்கம் தமிழில் வழங்கப்படுகிறது. இவற்றைக் கேட்க தமிழ் மக்கள் பலர் எங்களது பள்ளிவாசலுக்கு வருகின்றனர்."
-ஹாஜி எம்.ஒய். முகம்மது ரஃபீக், பென்கூலன்
பள்ளிவாசல் தலைவர்
"பல பிள்ளைகள் தமிழ் தேவார வகுப்புகளில் மூன்றிலிருந்து ஐந்து வயது இருக்கும் போது சேர்க்கப்படுகின்றனர். பக்தி நெறியோடு தமிழ்ப் புலமையும் அவர்களிடையே அதிகரிப்பதை நான் கண்டிருக்கிறேன். தமிழ் தெரியாத பிறமொழி இந்தியர்கள்கூட தமிழில் தேவாரப் பாடல்களைக் கற்றுக்கொள்கிறார்கள். வீட்டில் தமிழில் அதிகம் பேசாத பிள்ளைகள் இந்தத் தமிழ் தேவார வகுப்புகளில் தமிழில் கற்றுத்தரப்படும் சுவாரசியமான கதைகள், வாசிப்புகள் போன்றவற்றை விரும்புகிறார்கள்."
-சோ. வைத்தியநாதன்
ஓதுவார், ஸ்ரீதெண்டாயுதபாணி கோயில்
"ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தேவாலயத்துக்குச் செல்லும் பழக்கம் என் குடும்பத்திற்கு உண்டு. எனக்கு நினைவுதெரிந்த நாளிலிருந்து இன்றுவரை நாங்கள் தமிழ்ச் சபையில்தான் வழிபாடு செய்து வருகிறோம். தமிழ் திருச்சபைகளில் ஆண்டவரை வழிபட வெவ்வேறு பாடல்கள் பயன்படுத்தபடுகின்றன. தாய்மொழியில் வரிகளைக் கேட்பது அமைதியையும் மனநிம்மதியையும் அளிப்பதோடு உற்சாகத்தையும் ஊட்டுகிறது. கிறிஸ்துவர்கள் படிக்கும் பரிசுத்த வேதாகமம் தமிழில் மொழிபெயர்க்கபட்டிருக்கிறது.
-கோ நஸரேன் குமார், 24
கூடுதல் செய்தி: கி.ஜனார்த்தனன்

