கொவிட்-19 பரவல் உச்சம் தொட்டதால் வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் கடந்த ஏப்ரலில் கடும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஓராண்டு முடிந்த நிலையில், இடைப்பட்ட காலத்தை வெளிநாட்டு ஊழியர்கள் எவ்வாறு கழித்தனர், அவர்களின் வாழ்க்கைமுறை மாறியுள்ளதா என்பதை அறிந்துவந்தோம்.
கடந்த ஆண்டில் கொவிட்-19 தொற்று வெளிநாட்டு ஊழியர் விடுதிகளை எட்டிப்பார்க்கும் முன் திரு மதியழகன் கார்த்திகேயனும் மேலும் பதினொருவரும் ஒரே அறையைப் பகிர்ந்துகொண்டனர்.
இப்போது அவருடன் எட்டுப் பேர் மட்டுமே உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பர்களைச் சந்திக்கவும் ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவிற்கும் லிட்டில் இந்தியாவிற்கும் சென்று வரவும் இப்போது சாத்தியமில்லாமல் போய்விட்டது. சில வாரங்களுக்கு ஒருமுறை ஒரேயொரு கேளிக்கை மையத்திற்கு மட்டுமே அவரால் சென்றுவர முடிகிறது. அதற்கும் அவர் அனுமதிச்சீட்டு பெற்றாக வேண்டும்.
மண்டாயில் உள்ள தமது விடுதி அறைக்குச் செல்ல குறிப்பிட்ட வழிகளையும் மின்தூக்கிகளையும் மட்டுமே அவர் பயன்படுத்த வேண்டும்.
தமது அறை இருக்கும் தளத்தைத் தவிர அவரால் வேறு தளத்திற்குச் செல்ல முடியாது.
ஊழியர்கள் ஒன்றுகூடுவதையும் தங்களுக்குள் கலந்துறவாடுவதையும் குறைக்கும் நோக்கில் இத்தகைய கட்டுப்பாடுகள் நடப்பில் இருக்கின்றன.
வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் கொரோனா பரவல் உச்சத்தை எட்டியதை அடுத்து, கடந்த ஆண்டு ஏப்ரலில் விடுதிக்குள்ளும் வெளியேயும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
2020 ஏப்ரல் 9ஆம் தேதியில் இருந்து, கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு விடுதிகளில் நாள்தோறும் நூற்றுக்கு மேற்பட்ட கிருமித்தொற்று பாதிப்புகள் பதிவாயின.
அதன்பின் அக்டோபர் மாதத்தில் இருந்து, விடுதிகளில் கிருமிப் பரவல் வெகுவாகக் குறைந்து, பெரும்பாலான நாள்களில் ஒருவர்கூட பாதிக்கப்படவில்லை என்ற நிலை நிலவியது.
இதையடுத்து, வெளிநாட்டு ஊழியர்களுக்கும் விடுதிகளிலும் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்த அரசாங்கம் திட்டமிட்டு வந்தது.
இந்நிலையில், வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் விடுதியில் ஏற்கெனவே கொரோனா பாதிப்புக்குள்ளாகி மீண்ட 17 பேர் உட்பட 19 பேருக்குத் தொற்று உறுதியானதை அடுத்து, அரசாங்கம் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் திட்டத்தைத் தள்ளிப்போட்டுள்ளது.
முன்னதாக, மாதம் ஒருமுறை மட்டும் விடுதி ஊழியர்களைச் சமூகத்தில் அனுமதிக்கும் முன்னோடித் திட்டம் இவ்வாண்டின் முதல் காலாண்டில் தொடங்கும் என அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆயினும், அத்திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை.
ஓராண்டிற்குமுன் வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் சராசரியாக 88 விழுக்காடாக இருந்த தங்கி இருப்போர் விகிதம், இப்போது ஏறத்தாழ 60 விழுக்காட்டிற்குக் குறைந்துவிட்டதாக மனிதவள, தேசிய வளர்ச்சி அமைச்சுகளின் பேச்சாளர் தெரிவித்தார்.
அவ்வகையில், மொத்தம் 6,300 படுக்கைகளைக் கொண்ட வெஸ்ட்லைட் மண்டாய் விடுதியில் இப்போது 4,200 பேர் மட்டுமே உள்ளனர். கொவிட்-19 தொற்றுக்குமுன் அந்த எண்ணிக்கை 90 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருந்தது.
ஊழியர்கள் ஊர் திரும்பிவிட்டது, பயணக் கட்டுப்பாடுகளால் புதிய, இப்போதுள்ள வேலை அனுமதிச்சீட்டு ஊழியர்கள் சிங்கப்பூர் திரும்ப முடியாமை, ஊழியர்களுக்கு அதிக இடவசதியை அளிக்க வேண்டியிருத்தல் போன்றவற்றை அதற்குக் காரணமாகக் குறிப்பிட்டார் வெஸ்ட்லைட் விடுதிகளை நடத்தும் 'செஞ்சுரியன்' நிறுவனத்தின் தொடர்புப் பிரிவுத் தலைவர் டேவிட் ஃபே.
இருப்பினும், "பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய தேவையை உணர்ந்து, பெரும்பாலான ஊழியர்கள் அதன்படி நடந்துகொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது," என்று திரு டேவிட் சொன்னார்.
'மேம்பட்ட வசிப்பிடச் சூழல்'
பொதுவாக, வசிப்பிடச் சூழல் மேம்பாடு கண்டிருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நேர்கண்ட ஊழியர்கள் தெரிவித்தனர்.
விடுதிகளில் ஒரு சில கிருமி பாதிப்புகளே பதிவாகி வருவதாலும் பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதாலும் கிருமிப் பரவலுக்கு முந்திய நிலைமைக்கு விரைவில் திரும்ப வேண்டும் என்று ஊழியர்கள் சிலர் ஏங்குகின்றனர்.
வாழ்க்கை இயல்புநிலைக்குத் திரும்பலாம் என்பதற்கான சில அறிகுறிகள் தெரிகின்றன. அனுமதி பெற்று சில சமூக வசதிகள் படிப்படியாகத் திறக்கப்பட்டு வருகின்றன. எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து வெஸ்ட்லைட் மண்டாய் உடற்பயிற்சிக்கூடம் திறக்கப்பட்டுள்ளது.
புனித ரமலான் மாதத்தை ஒட்டி, இரவுத் தொழுகையில் அதிகபட்சம் 50 பேர் கலந்துகொள்ளும் வகையில் இடவசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.
அவ்விடுதியில் கடந்த மாதத்தில் இருந்து சில மேசைகள், நாற்காலிகளுடன் 'பியர் கார்டன்' திறக்கப்பட்டுள்ளது. ஊழியர் ஒருவர் அரைமணி நேரத்திற்குள், அதிகபட்சம் இரண்டு கலன் 'பியரை' மட்டும் அருந்தலாம். அவர்கள் தங்களது அறைகளுக்கு மதுவை எடுத்துச் செல்ல அனுமதியில்லை.
இருப்பினும், அங்கொருவர் இங்கொருவராக வசிப்பிடச் சூழல் முன்னிருந்ததைப் போலவே இப்போதும் மோசமாக உள்ளது என்று ஊழியர்கள் சிலரிடம் இருந்து புகார் வருவதாக 'டிடபிள்யூசி2' எனும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஆதரவுக் குழுவின் பொது மேலாளர் ஈத்தன் குவோ சொன்னார். அவற்றை உடனுக்குடன் மனிதவள அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு சென்று, விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஊழியர் பற்றாக்குறை
பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி நடந்துகொள்வது ஊழியர்களிடத்தில் புதிய இயல்புநிலையாக மாறி விட்டாலும் சுருங்கிவரும் வெளிநாட்டு ஊழியரணி குறித்து நிறுவனங்கள் கவலைகொள்கின்றன.
கட்டுமானம், கப்பல் பட்டறை, செய்முறை தொழில்துறை ஆகிய துறைகளில் கடந்த 2019 டிசம்பரில் மொத்தம் 370,100 வேலை அனுமதிச்சீட்டு ஊழியர்கள் இருந்தனர். 2020 டிசம்பரில் அந்த எண்ணிக்கை 311,000ஆகக் குறைந்துவிட்டது.
தொடக்கத்தில் சொந்த ஊரிலுள்ள குடும்பத்தினரை எண்ணி, ஊழியர்கள் சிலர் தாய்நாடு திரும்பிவிட்டனர்.
ஆனால், இப்போது நிலைமை அப்படியில்லை. இங்கிருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் ஊர் திரும்ப விரும்பவில்லை என்றும் தங்கள் நாட்டைக் காட்டிலும் சிங்கப்பூரில் கொரோனா சூழல் பெரிதும் மேம்பட்டு உள்ளதால் வேலைக்காகப் பலரும் இங்கு வருவதற்கு விரும்புகின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஆயினும், எல்லைக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால் அவர்களில் பலரும் இங்கு வர முடியாமல் போகலாம்.
தளர்வுகள் அறிவிப்பு தாமதமாகலாம் என அச்சம்
கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும், முன்போல பல இடங்களுக்கும் சென்று வரலாம் என விடுதிகளில் தங்கியுள்ள வெளிநாட்டு ஊழியர்கள் பலரும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
இந்நிலையில், வெஸ்ட்லைட் உட்லண்ட்ஸ் விடுதியில் மீண்டும் சிலரைக் கிருமி தொற்றியிருப்பது அவர்களைக் கவலையில் ஆழ்த்தி இருக்கிறது. அதனால், இப்போதைக்குக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாதோ எனும் அச்சம் அவர்களிடம் தொற்றியுள்ளது.
இவ்வாண்டு ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் திருநாளன்று பொங்கோல் எஸ்11 விடுதியில் உள்ள திரையரங்கு மீண்டும் திறக்கப்பட்டு, முன்னணி நடிகர்களின், இயக்குநர்களின் படங்கள் அங்கு திரையிடப்பட்டு வருகின்றன.
நடிகர் விஜய்யின் 'மாஸ்டர்' திரைப்படத்தை அங்கு பார்த்ததாகக் கூறினார் 24 வயதான திரு மார்க்கண்டன் பொன்ராஜ். ஒன்றரை ஆண்டுகளாக இங்கு வேலை செய்துவரும் அவர் திரை அரங்கிற்குச் சென்று பார்த்த முதல் படம் இதுதான்.
கடந்த மாதம் எஸ்11 விடுதியைச் சேர்ந்த 64 ஊழியர்கள் சிங்கப்பூர் ராட்டினத்திற்குச் சுற்றுப்பயணம் சென்றுவர மனிதவள அமைச்சு ஏற்பாடு செய்தது. விடுதி ஊழியர் திரு லட்சுமணன் முரளிதரன், 44, அப்பயணத்தை வழிநடத்தினார். "அடுத்த மாதம் செந்தோசா தீவிற்குச் சென்றுவரும் திட்டமுள்ளது. விடுதியில் சமைக்க அனுமதியுண்டு. கட்டுப்பாட்டுடன் மதுக்கடை திறக்கப்படுகிறது. ஆயினும், வெளியில் கடைகளுக்குச் செல்ல முடியவில்லையே என்ற வருத்தம் பலருக்கும் உண்டு. நாம் விரும்புவதுபோல இணையத்தில் வாங்க முடியாது. அதனால், பாதுகாப்பாகக் கடைகளுக்குச் சென்று வர அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும்," என்று அவர் கேட்டுக்கொண்டார்.

