இந்து இளங்கோவன்
இந்தியாவில் படுமோசமடைந்துள்ள கொவிட்-19 தொற்றின் தாக்கம் பிற நாடுகளிலும் எதிரொலிக்கத் தொடங்கி இருக்கிறது. அவ்வகையில், நீண்டகால அனுமதி அட்டைதாரர்களும் குறுகிய கால வருகை அனுமதி பெற்றவர்களும் இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. எவ்வளவு காலம் நீடிக்கும் எனத் தெரியாத நிலையில், அந்தக் கட்டுப்பாடு இந்திய ஊழியர்களிடமும் தொழில் நிறுவனங்களிடத்திலும் வர்த்தகர்களிடமும் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதை அறிந்து வந்தது தமிழ் முரசு.
ஊழியர் பற்றாக்குறையும் ஊதிய அதிகரிப்பும்
கொவிட்-19 தொற்று காரணமாக வேலை அனுமதிச்சீட்டு ஊழியர்கள் பலரும் தங்களின் தாய்நாட்டிற்குத் திரும்பிவிட்ட நிலையில், இப்போது சொந்த ஊர் சென்றுள்ள இந்திய வேலை அனுமதிச்சீட்டு ஊழியர்களும் சிங்கப்பூர் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், கட்டுமானத் துறை கடும் ஊழியர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. போதுமான ஊழியர்கள் இல்லாமல் கட்டுமானப் பணிகளை ஒத்தி வைக்கும் நிலைக்கும் இப்போதுள்ள ஊழியர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கும் நிலைக்கும் கட்டுமான நிறுவனங்கள் தள்ளப்படுகின்றன.
ஊழியர் சம்பளமும் கட்டுமானப் பொருள்களின் விலையும் 30% முதல் 50% வரை அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் ஒப்பந்ததாரர்கள் சங்கம் தெரிவித்தது. இதனால் கட்டுமானத் திட்டங்களை நிறைவுசெய்ய மேலும் காலதாமதமாகலாம் என்று அச்சங்கம் குறிப்பிட்டது.
இந்தியாவிலிருந்து தமது நிறுவனத்தில் பணிபுரிவதற்காக வர இருந்த ஐவர், இப்போது பயணத் தடையால் வரமுடியாத நிலையில் இருப்பதாகக் கூறினார் 'கேஜிஎம் பிரதர்ஸ்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமணன் மேனன்.
"ஊழியர் ஒருவருக்கு சராசரியாக $800 மாத ஊதியம் கொடுத்து வந்த நிலையில், இப்போது $1,200 வரை தரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எங்கள் நிறுவனத்தில் மொத்தம் 80 பேர் வேலை செய்கின்றனர். அதில் 70% வெளிநாட்டு ஊழியர்கள். வெளிநாட்டு ஊழியர்கள் போதுமானவர்கள் இல்லாத நிலையில் நிர்வாகப் பொறுப்பில் உள்ள மற்ற 30% ஊழியர்களின் வேலை அத்தியாவசியமற்ற ஒன்றாகிறது. இது அவர்களின் வேலைகளையும் பாதிக்கக்கூடும்," என்றார் அவர்.
சாரக்கட்டு வேலைகளுக்காக இம்மாதம் இந்தியாவில் இருந்து ஒன்பது பேரை வரவழைக்கத் திட்டமிட்டு இருந்தது 'மெக்நைட் பொறியியல்' நிறுவனம். இப்போது அவர்கள் வரமுடியாமல் போயுள்ளதால் கட்டுமானப் பணிகள் மேலும் இரு மாதங்கள் தாமதமாகலாம் என எதிர்பார்ப்பதாக அந்நிறுவனம் கூறியது.
கட்டுமானத் துறைக்கு வெளிநாட்டு ஊழியர்களே முதுகெலும்பாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலார் இந்தியா மற்றும் பங்ளாதேஷைச் சேர்ந்தவர்கள். இப்போதைக்கு அவர்கள் இங்கு வர முடியாது என்பதால் வேறு நாடுகளில் இருந்து ஊழியர்களை குறைந்த செலவுகளோடும் தடுப்பூசி ஏற்பாடுகளோடும் வரவழைக்க முயற்சிகள் இருப்பதாக ஒப்பந்ததாரர்கள் சங்கம் தெரிவித்தது.
'பணிப்பெண்கள் தேவை'
"கடந்த சில வாரங்களில் சில குடும்பங்கள் எங்களிடம் இந்தியப் பணிப்பெண்கள் வேண்டும் எனக் கேட்டுள்ளனர். ஆனால், இப்போதைய சூழலில் இந்தியாவிலிருந்து பணிப்பெண்களை அழைத்து வருவது கடினம். அதனால் பிற நாடுகளிலிருந்து அதிகமான பணிப்பெண்களை அழைத்துவரும் பணியில் இறங்கியுள்ளோம். இங்குள்ள தமிழ்க் குடும்பங்கள் பெரும்பாலும் இந்தியப் பணிப்பெண்களையே வேலைக்கு அமர்த்த விரும்புகின்றனர். இன்னும் சில மாதங்களில் நிலைமை மாறும் என்று எதிர்பார்க்கிறோம்," என்றார் 'ரிசோர்ஸ் மேன்பவர்' பணிப்பெண் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திருவாட்டி நிர்மலா.
பாச மகள்களைக் காண ஏக்கம்
ஆண்டுக்கு நான்கு முறையேனும் தமிழ் நாட்டின் காரைக்குடியில் வசிக்கும் தமது குடும்பத்தைக் காணச் சென்று வருவார் பொறியாளரான திரு முரளி, 44 (படத்தில் குடும்பத்தினருடன்). ஆனால், கொரோனா பரவலால் கடந்த ஓராண்டுக்கு மேலாக இவரால் இந்தியாவிற்குச் செல்ல முடியவில்லை. குடும்பத்தை நேரில் காண முடியாதது வேதனை தருவதாகக் கூறிய திரு முரளி, "தமிழ்நாட்டில் மார்ச் மாத இறுதிவரை கொரோனா ஓரளவு கட்டுப் பாட்டில் இருந்ததால் ஏப்ரலில் ஊருக்குச் சென்று, என் மகள்களைக் காண ஆவலாக இருந்தேன். ஆனால், நோய்ப் பரவல் மீண்டும் அதிகரித்து, நிலைமையை மோசமாக்கிவிட்டது. அன்றாடம் நான்கு முறையேனும் கைப்பேசிவழி மகள்களுடன் பேசுவேன். ஒவ்வொரு முறையும் 'எப்போது ஊருக்கு வருவீர்கள் அப்பா?' என அவர்கள் கேட்கும்போது, என்னிடம் பதில் இருக்காது. அவர்களை மீண்டும் நேரில் காணும் நாளை எதிர்பார்த்திருக்கிறேன்," என்று சொன்னார் திரு முரளி.
திருமணத்திற்காகச் சென்றவர் திரும்பி வரமுடியாத நிலை
தனது திருமணத்திற்காக கடந்த ஜனவரி மாதம் இந்தியா சென்ற கட்டுமானப் பொறியாளர் முத்துக்குமார், 29, மூன்று மாதங்களுக்குப் பின் சிங்கப்பூர் திரும்பத் திட்டமிட்டிருந்தார். அதற்கேற்ப, மறு நுழைவு அனுமதி கோரி விண்ணப்பித்த அவருக்கு மூன்றாவது முயற்சியில்தான் வெற்றி கிடைத்தது.
அதைத் தொடர்ந்து, விமானப் பயணச்சீட்டு பெற்று கடந்த ஞாயிறன்று சிங்கப்பூர் திரும்புவதற்கான ஆயத்தங்களை அவர் செய்திருந்த நிலையில், சிங்கப்பூர் அரசாங்கத்தின் பயணத் தடை அறிவிப்பு பேரதிர்ச்சியாக அமைந்தது.
அம்மா, தங்கை, மனைவி என மொத்த குடும்பமும் திரு முத்துக்குமாரின் வருமானத்தை நம்பியே இருக்கிறது. உள்ளூரிலும் வேலை கிடைப்பது கடினம் என்ற சூழலில், வேலையைத் தொடர மீண்டும் எப்போது சிங்கப்பூருக்குத் திரும்ப முடியும் என்பதும் தெரியவில்லை.
கடன் சுமைகளைத் தீர்க்க கடன் வாங்கி சிங்கப்பூர் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்த திரு முத்துக்குமார், இப்போது அடுத்தகட்டமாக என்ன செய்வது எனத் தெரியாமல் திணறுவதாகக் கூறினார்.
'குடும்பத்துடன் இருப்பதே மனநிறைவு'
ஏழாண்டுகளாக சிங்கப்பூரில் மின்னியல் துறையில் வேலை செய்து வந்த திரு ராஜேந்திரன் விஜயகாந்த், 30, தாம் பிறந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம், உடையகுளம் கிராமத்திற்கே இன்று திரும்பிச் செல்கிறார்.
இந்தியாவிற்குச் சென்றால் இன்னும் பல மாதங்களுக்கு மீண்டும் சிங்கப்பூர் திரும்ப முடியாமல் போகலாம் என்று பலரும் தம்மை எச்சரித்ததாகக் கூறிய திரு விஜய், ஆயினும் தாம் எடுத்த முடிவே தமக்கு மனநிம்மதியைத் தரும் என்று உறுதியாக நம்புகிறார்.
2019ஆம் ஆண்டில் தமது திருமணத்திற்காக இந்தியா சென்று வந்த அவர், கிருமித்தொற்று காரணத்தினால் மீண்டும் இந்தியா செல்ல முடியாமல் இருந்தார். இதற்கு மேலும் பெற்றோரையும் மனைவியையும் பிரிந்து இங்கு தனிமையில் இருக்க முடியாத திரு விஜய், விடுப்பு பெற்று இன்று மாலை 5.30 மணி விமானத்தில் திருச்சிக்குக் கிளம்பிச் செல்கிறார்.
மீண்டும் சிங்கப்பூருக்கு வர முடியுமா முடியாதா என்ற நிச்சயமற்ற நிலையிலும் பெற்றோரையும் மனைவியையும் காணும் உற்சாகத்தில் அவர் இருக்கிறார்.
இந்தியாவில் சிங்கப்பூரர்கள்...
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம், காசாங்காடு கிராமத்தில் பிறந்து வளர்ந்த தம் தந்தையின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்ற இரு வாரங்களுக்குமுன் குடும்பத்துடன் இந்தியா சென்றார் சிங்கப்பூரரரான திரு அருண் பிரகாஷ், 28. அவரின் சகோதரர்கள் இருவரும் ஊதியமில்லா விடுப்பில் சென்றுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு வரை தமிழகத்தின் கிராமப் பகுதிகளை கொரோனா தீண்டவில்லை என்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது அது மூலை முடுக்கெல்லாம் பரவிவிட்டது கண்டு அதிர்ச்சியுற்றதாகக் கூறினார் திரு அருண். "இப்போதைய சூழலில், இலேசாக இருமல் வந்தாலும் பதைபதைத்துப் போவோம். ஆனால், இந்தியாவில் கொரோனா தொற்று சர்வ சாதாரணமான ஒன்றாகி விட்டது வியப்பளிப்பதாக உள்ளது," என்ற அவர், தந்தையின் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றிய பின் அடுத்த வாரம் சிங்கப்பூர் திரும்பவுள்ளார். இங்கு வந்தபின் அவர் 21 நாள்கள் தம்மைத் தனிமைப் படுத்திக்கொண்டாக வேண்டும். இதனால் தமது வேலையும் பாதிப்படையக் கூடும் என்று கூறினார் திரு அருண்.
பெற்றோரின் பாதுகாப்பை உறுதிசெய்யும் பிரியங்கா
நாள்தோறும் முதல் வேலையாக தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தில் வசிக்கும் தம் பெற்றோரை 'வாட்ஸ்அப்' வழி தொடர்பு கொண்டு அவர்களின் நலன் அறிந்த பின்னே அன்றைய நாளை தொடங்குகிறார் சிங்கப்பூரில் கடந்த ஈராண்டுகளாக துணை விநியோகத் தொடர் மேலாளராகப் பணிபுரிந்துவரும் திருமதி பிரியங்கா மணி, 29 (படம்). இங்கு கிருமிப் பரவல் கட்டுப் பாட்டில் உள்ளதால் தாம் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்தாலும் இந்தியாவின் நிலையை எண்ணி மனம் அமைதியின்றி இருப்பதாக இவர் குறிப்பிட்டார். ஊரிலுள்ள தம் பெற்றோர் வீட்டைவிட்டு வெளியில் செல்வதைத் தவிர்க்கும் விதமாக, இங்கு இருந்தவாறே இணையம்வழி தேவையான பொருள்களைப் பணிப்பு (order) செய்து, வீட்டு வாயிலிலேயே விநியோகிக்கவும் ஏற்பாடு செய்துவிடுகிறார்.
'உண்மையான தாக்கம் சில வாரங்களில் தெரியும்'
பாதிப்பு குறுகிய காலமே இருக்கும் என லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் நம்பிக்கை
காய்கறி, துணிமணி, மளிகைப் பொருள்கள், வழிபாட்டுப் பொருள்கள் என லிட்டில் இந்தியாவில் விற்கப்படுவனவற்றில் 50 விழுக்காட்டிற்கும்மேல் இந்தியாவில் இருந்து வருகின்றன. இந்நிலையில், அங்கு கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் என்ற அச்சம் லிட்டில் இந்தியா வர்த்தகர்களிடையே நிலவி வருகிறது.
இப்போதைக்கு அதன் தாக்கம் குறைவாக இருந்தாலும் வரும் வாரங்களில் இறக்குமதியாகும் பொருள்களின் அளவு குறைவாகவும் சரக்கு விமானப் போக்குவரத்துக் கட்டணம் அதிகமாகவும் இருந்தால் நிலைமை மோசமடையலாம் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும், இந்திய ஊழியர்கள் பலர் தாய்நாடு திரும்பிவிட்டதால் பொருள்களைத் தயாரிப்பதிலும் வர்த்தகர்கள் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.
"எங்களது கடையில் விற்கப்படும் பொருள்களில் 99% இந்தியாவில் இருந்துதான் இறக்குமதி ஆகின்றன. கடந்த சில வாரங்களிலேயே சில பொருள்கள் வரவில்லை. இது பாதிப்பின் தொடக்கம்தான். இன்னும் சில வாரங்களில் அதன் தாக்கம் முழுமையாகத் தெரியலாம். சிங்கப்பூர் இந்தியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கைவினைப் பொருள்கள், வழிபாட்டுப் பொருள்கள் ஆகியவற்றின் உற்பத்தியும் இந்தியாவில் குறைந்துள்ளது. சரக்குக் கப்பல் போக்குவரத்துக் கட்டணமும் கடுமையாக உயர்ந்துள்ளது. இவ்வாண்டு தீபாவளிக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்கான ஏற்பாடுகளை இப்போதே தொடங்கிவிட்டோம்," என்று ஜோதி ஸ்டோர் புஷ்பக்கடை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காய்கறி வரத்து வழக்கம்போல் இருப்பதால் இப்போது பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்றும் இன்னும் சில வாரங்களில்தான் உண்மையான தாக்கம் தெரியும் என்றும் 'ஸ்ரீ முருகன் டிரேடிங்' கடையினர் கூறினர். அதே வேளையில், அந்தப் பாதிப்பு குறுகிய காலமே நீடிக்கும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
"பூக்கள், மாலைகள் அனைத்தும் இந்தியாவில் இருந்துதான் வருகின்றன. கடந்த மூன்று நாள்களாக பூக்கள் இறக்குமதி செய்யப்படவில்லை. இன்று காலைதான் (கடந்த செவ்வாய்க்கிழமை) பூக்கள் கொஞ்சம் வந்திறங்கின. தொடர்ந்து இதுபோல் நிகழ்ந்தால் எங்களது வர்த்தகம் பாதிக்கப்படக்கூடும். இந்தியாவில் பூக்கள் உற்பத்தியிலும் சரக்கு விமானப் போக்குவரத்திலும் பெரிய பாதிப்பு இருக்காது என்று நம்புகிறோம்," என்று மீனாட்சி பூக்கடையினர் கூறினர்.

