கொவிட்-19 இரண்டாவது அலை இந்தியாவைச் சுழற்றியடித்து வரும் நிலையில், சிங்கப்பூர் உட்பட உலக நாடுகள் பலவும் தங்களால் ஆன உதவியை அந்நாட்டிற்கு வழங்கி வருகின்றன. அவ்வகையில், சிங்கப்பூரில் உள்ள பல்வேறு அமைப்புகளும் தனிமனிதர்களும் கூட்டாகவும் தனியாகவும் நிதி திரட்டி, இந்தியாவிற்கு மருத்துவ ரீதியில் ஆதரவளித்து வருகின்றனர்.
வி.கே. சந்தோஷ் குமார்
அண்மைய மூன்று நிகழ்வுகள், சிங்கப்பூர் நிரந்தரவாசிகளான பிராந்திக் மஸும்தார், தீப்தி காமத் ஆகியோரை இந்தியாவில் சிரமப்படுவோருக்கு உதவிக்கரம் நீட்டச் செய்துள்ளது. அந்நாட்டில் பரவிவரும் பி16171 மற்றும் பி16172 உருமாறிய கொவிட்-19 கிருமித்தொற்றால் சுகாதாரக் கட்டமைப்பே குலைந்துள்ளது.
"நெருக்கமான சக பணியாளர் ஒருவரின் தந்தை, கொரோனா தொற்றியதை அடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்குப் படுக்கையோ உயிர்வாயுவோ கிடைக்கவில்லை. நல்ல வேளையாக அவர் பிழைத்துவிட்டார்," என்று டென்ட்சு இன்டர்நேஷனல் சிங்கப்பூர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான (சிஎக்ஸ்எம் குழுமம்) திரு மஸும்தார் தெரிவித்தார்.
"புதிதாக மணமான, 31 வயதேயான விநியோகப் பங்காளி ஒருவரும் டெல்லியில் உயிரிழந்துவிட்டார். அங்கு நிலவிய உயிர்வாயுப் பற்றாக்குறையால் அவரைக் காப்பாற்ற முடியாமல் போனது.
"அதற்குமுன், உரிய நேரத்தில் உயிர்வாயு கிடைக்காமல் பாட்னாவிலும் கயாவிலும் முறையே 64 மற்றும் 57 வயதான என் உறவினர்கள் இருவர் இறந்துவிட்டனர். கிருமி தொற்றும் முன் அவர்களின் உடல்நிலை ஓரளவு நன்றாகவே இருந்தது," என்றார் மஸும்தார்.
இந்தச் சூழலில், கொரோனா தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் இந்தியாவிற்கு உதவ, திரு மஸும்தாரும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றும் அவரின் மனைவி தீப்தியும் வெள்ளிக்கு வெள்ளி நிகராக அளிக்கும் நிதித்திரட்டு நடவடிக்கையை கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கினர்.
'மிலாப்' பொது நிதித்திரட்டுத் தளம் வழியாக அவர்கள் மேற்கொண்ட அம்முயற்சியின் மூலம் 48 மணி நேரத்திற்குள் 100,000 வெள்ளிக்கும் அதிகமான நன்கொடை திரண்டது. ஏழு நாள்களில் 200,000 வெள்ளியைக் கடந்தது.
"அந்தப் பணத்தைக் கொண்டு சீனா, ஹாங்காங், தைவான், சிங்கப்பூர், பிரிட்டன் ஆகிய நாடுகளில் இருந்து உயிர்வாயுச் செறிவூட்டிகளை வாங்கி, இந்தியாவுக்கு அனுப்புகிறோம்," என்றார் திரு மஸும்தார்.
தங்களது நிதித்திரட்டு முயற்சிக்கு பத்து நாடுகளைச் சேர்ந்த 1,043 பேர் ஆதரவளித்திருப்பது தங்களுக்கு உந்துசக்தி அளிப்பதாக உள்ளது என்றார் அவர்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் சிலர் ஒரு குழுவாக இணைந்து 'மிலாப்' தளம் வழியாக நிதி திரட்டி, உயிர்வாயுத் தட்டுப்பாட்டில் இருந்து இந்தியா விடுபட உதவ முயல்கின்றனர்.
அதற்காக சிங்கப்பூர், பிலிப்பீன்ஸ், இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர், 'சுமோ (சிங்கப்பூர் யூனிவர்சிட்டிஸ் மிஷன் ஆக்சிஜன்)' எனும் பெயரில் ஒன்றிணைந்துள்ளனர். வெவ்வேறு துறைகளில் தங்களுக்கு உள்ள நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி, மருத்துவக் கருவிகளைக் கொள்முதல் செய்து, அவற்றை அனுப்பி வைத்து, ஊரக, நகர்ப்புறங்களுக்கு விநியோகிப்பது வரையிலான பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்கின்றனர்.
"இந்தியாவில் நிலைமை மோசமாகியுள்ள நிலையில், அண்மைய காலங்களில் ஏற்பட்ட ஆக மோசமான நெருக்கடிகளில் ஒன்றை எதிர்த்துப் போராட இந்தியாவிற்குக் கைகொடுக்க உதவுவது எனத் தீர்மானித்தோம்," என்று இந்த நிதித்திரட்டு முயற்சியைத் தொடங்கிய திரு ராகுல் சிங்.
"உலகெங்கும் இருந்து கிட்டத்தட்ட 600 பேர் நன்கொடை அளித்துள்ளதால் ஏறக்குறைய 100,000 அமெரிக்க டாலரை (S$134,000) திரட்டியுள்ளோம். இப்போது உயிர்வாயுச் செறிவூட்டிகளை வாங்கி வருகிறோம்," என்றார் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக முன்னாள் மாணவரும் வங்கிப் பணியாளருமான திரு ராகுல்.
நெதர்லாந்தில் இருந்து தருவிக்கப்பட்ட முதல் தொகுதி உயிர்வாயுச் செறிவூட்டிகள் இவ்வாரம் இந்தியாவில் விநியோகிக்கப்படவுள்ளன.
"இந்தியாவிற்குக் கைகொடுக்கும் நோக்கில் கடந்த இரு வாரங்களாக சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபை (சிக்கி) தனது உறுப்பு நிறுவனங்களிடம் உதவி கேட்டு வருகிறது. தனிமனிதர்கள் பலரும் முன்வந்து உதவியுள்ளனர். மொத்தம் $300,000 நன்கொடை திரட்ட உறுதிபூண்டுள்ள நிலையில், இதுவரையில் 200,000 வெள்ளி நேரடியாக வந்து சேர்ந்துள்ளது. திரட்டப்படும் தொகை முழுவதும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படும்," என்று 'சிக்கி' தலைவர் டி.சந்துரு தெரிவித்தார்.
இதனிடையே, 'லிஷா' எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கமும் 'சிக்கி'யுடன் சேர்ந்து கடந்த வாரம் நிதித்திரட்டு முயற்சியைத் தொடங்கியது.
லிட்டில் இந்தியாவில் நிதித் திரட்டுக்கென சிறப்புக் கூடாரம் அமைக்கப்பட்டு, நன்கொடைப் பெட்டி வைக்கப்பட்டது. நாள்தோறும் கிட்டத்தட்ட நூறு பேர் அப்பெட்டியில் நன்கொடை போட்டுச் சென்றதாகக் குறிப்பிட்ட லிஷா, தற்போது கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக அக்கூடாரம் அகற்றப்பட்டுவிட்டபோதும் நன்கொடைப் பெட்டி கேம்பல் லேனுக்கு அருகிலுள்ள 'அக்ஷயா ஜூவல்லர்ஸ்' கடையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியது. $150,000 நிதி திரட்டுவது அதன் இலக்கு.
ஃபார் ஈஸ்ட் பிளாசாவில் உள்ள 'தி கர்வ் கல்ட்' ஆடைக் கடை, இம்மாதம் 21-23 தேதிகளுக்குள் கிடைக்கும் லாபம் முழுவதையும் இந்தியாவிற்கு நன்கொடையாக வழங்கத் திட்டமிட்டுள்ளது. "கடையில் எதுவும் வாங்காமலும் மக்கள் நன்கொடை தரலாம். திரட்டப்படும் நிதியை கிவ்இந்தியா, கூஞ் (Goonj) ஆகிய அமைப்புகளிடம் வழங்கவுள்ளோம்," என்றார் அக்கடையின் உரிமையாளர் திருவாட்டி ராணி தாட்சாயனி, 32.