'வந்தே பாரத்' விமானச் சேவை மூலம் இந்தியாவிற்கு 90,000 பயணங்கள்

'வந்தே பாரத்' விமானச் சேவை மூலம் இந்தியாவிற்கு 90,000 பயணங்கள்

2 mins read

வெளிநாடுகளிலிருந்து இந்திய நாட்டவர்களை மீண்டும் தாய்நாட்டிற்கு அழைத்துவரும் திட்டமான 'வந்தே பாரத்' மூலம் இதுவரை கிட்டத்தட்ட 90,000 பேர் சிங்கப்பூரிலிருந்து இந்தியா திரும்பியுள்ளனர்.

நோய்ப் பரவல் சூழல் ஏற்படுத்திய நெருக்கடியால் கடந்த ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி இந்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட திட்டம் 'வந்தே பாரத்'. சிங்கப்பூரிலிருந்து இந்தியா சென்ற பயணிகளின் எண்ணிக்கையைத் தெரிவித்த சிங்கப்பூருக்கான இந்தியத் தூதர் பெரியசாமி குமரன், அவர்களில் பல நாட்டு குடியுரிமை பெற்றவர்களும் உள்ளனர் என்பதைச் சுட்டினார். அதனால் வேலையிழந்து நாடு திரும்பிய இந்தியர்களின் எண்ணிக்கையை இதைக்கொண்டு தீர்மானிக்க முடியாது என்றார்.

"அவசர தனிப்பட்ட தேவைகளுக்காக சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் இந்தச் சேவையின் மூலம் பயணம் செய்துள்ளனர். அதனால் அனைவருமே வேலை இழந்து நாடு திரும்பியதாகக் கூறமுடியாது," என்றார் திரு குமரன்.

சிங்கப்பூருக்கும் இந்தியாவிற்கும் இடையில் கிட்டத்தட்ட தினமும் 'வந்தே பாரத்' விமானச் சேவை இயங்குகிறது.

இந்திய நாட்டு விமான நிறுவனங்களான ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் அந்தச் சேவையை வழங்குகின்றன. சிங்கப்பூர் அரசாங்கம் அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சிங்கப்பூருடனான வழக்கமான வர்த்தக விமானச் சேவையை இந்திய அரசு நிறுத்தியது. தற்போது சராசரியாக மாதத்திற்கு 70 விமானப் பயணங்கள் இயங்குகின்றன. கடந்த சில வாரங்களில் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என்றார் திரு குமரன்.

"ஒவ்வொரு விமானத்திலும் 180 முதல் 200 பேர் பயணிக்கலாம். இங்கிருந்து அங்கு செல்லும் விகிதம் 90 விழுக்காடு. அங்கிருந்து இங்கு வரும் விகிதம் 30 விழுக்காடு. தற்போது அந்த விகிதம் பாதியாகிவிட்டது. இந்தியாவில் நோய்ப் பரவல் மோசமாகியுள்ள நிலையில் பலர் செல்வதைத் தவிர்த்துள்ளது ஒரு காரணம். இங்கு வருவதற்கான அனுமதி வழங்கப்படுவது கட்டுப்படுத்தப் பட்டுள்ளது மற்றொரு காரணம்," என்றார் அவர்.