கொவிட்-19 தொற்றுக்கு எதிராக அரண் அமைக்க தடுப்பூசி ஒன்றே தற்போதுள்ள வழி. இதைக் கருத்தில்கொண்டு தேசிய தடுப்பூசி இயக்கம் வேகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய தினத்துக்குள் மூன்றில் இரு பங்கு சிங்கப்பூரர்களுக்குத் தடுப்பூசி போட்டுவிட சிங்கப்பூர் இலக்கு கொண்டுள்ளது. எனினும், தடுப்பூசி மூலம் சமூகப் பாதுகாப்பை ஏற்படுத்துவதில் சிங்கப்பூர் பல சவால்களை எதிர்நோக்குகிறது. தடுப்பூசி போட்டுக்கொள்வதில் சிலருக்கு இன்னமும் தயக்கம் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் தடுப்பூசி போடுவது கட்டாயம் ஆகலாம் என்ற சிந்தனை ஏற்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் முதன்முதலாக கடந்த டிசம்பர் 30ஆம் தேதி மூத்த தாதிதிருவாட்டி சாரா லிம்முக்கு, 47, முதல் தடுப்பூசி போடப்பட்டது. அடுத்த ஆறு மாதங்களில் ஐந்து மில்லியன் தடுப்பூசிகள். மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் முதல் தடுப்பூசியையாவது போட்டுக்கொண்டுள்ளனர்.
சிங்கப்பூர் மக்களை கொவிட்-19 கொள்ளைநோயிலிருந்து பாதுகாக்க அரசாங்கம் தடுப்பூசி இயக்கத்தை விரைவுபடுத்தி வருகிறது.
சமூக அளவிலான நோயெதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் முயற்சியில் தடுப்பூசி இயக்கம் நோயின் தன்மையை மாற்றியுள்ளது. அது சாதாரண நோய் போல சமூகத்தில் இருக்கும். தடுப்பூசி போட்டவர்கள், கிருமித்தொற்று ஏற்பட்டால் கடுமையான நோய் பாதிப்புக்கு ஆளாக மாட்டார்கள். அத்துடன் அவர்கள் அவ்வப்போது இந்த தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டு வந்தால் அவர்களுக்குத் தொடர்ந்து நோயெதிர்ப்பு பாதுகாப்பு இருக்கும்.
அதேநேரத்தில், தடுப்பூசி போட்டுக்கொள்வது பற்றி இன்னும் எத்தனை பேர் முடிவெடுக்காமல் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.
தடுப்பூசியை இரண்டு முறை போட்டுக்கொண்டவர்கள், இல்லத் தனிமையின்போது பரிசோதனைகளைக் குறைத்துக்கொள்வதையும் விழாக்களில் அதிக அளவில் கூடு வதையும் எதிர்பார்க்கலாம் என்று சென்ற வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சுகள் நிலைப் பணிக்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான உத்திகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டாலும் தடுப்பூசி தொடர்பான கொள்கைகளில் பெரிய மாற்றம் இருக்காது என்று தொற்றுநோய், சமூகவியல், சட்டம், நகரத் திட்டமிடல் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
தடுப்பூசி போட்டுக்கொள்வதா வேண்டாமா என முடிவு செய்யும் உரிமை மக்களுக்குத் தொடர்ந்து இருக்கும் என்றார் தொற்று நோய்கள் பற்றிய நிபுணரான டியூக்-என்யுஎஸ் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் ஹுவி எங் லியோங்.
"நோய்த் தடுப்பு வெற்றி பெறுவற்கு கட்டாயத் தடுப்பூசித் திட்டம்தான் வழி என்று நான் நினைக்கவில்லை. நாட்டின் சுகாதாரத்தைப் பேணுவது, ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, இவற்றுக்கிடையே சமநிலை காணவேண்டியுள்ளது," என்றார் பேராசிரியர் ஹுவி.
இவர் உருவாக்கிய தடுப்பூசி மருந்தை 'ஆர்க்டுயரஸ் தெராபியூடிக்ஸ்' என்ற மருந்தக நிறுவனம் தற்பொழுது பரிசோதித்து வருகிறது.
தடுப்பூசியால் ஏற்படும் பலன் குறித்து மக்களுக்குத் தொடர்ந்து அறிவுறுத்தப்படும் என்று இவரும் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக பேராசிரியரான யூஜின் டானும் கூறுகின்றனர்.
தடுப்பூசி, அவசரநிலை பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால் அவை கட்டாயமாக்கப்படாது, ஆனால் அதைப் போட்டுக்கொள்ளும்படி அரசாங்க ஊக்குவிப்பு தொடரும் என்று பேராசிரியர் டான் மேலும் கூறினார்.
"தடுப்பூசியின் பலன் குறித்து மக்களுக்கு எடுத்துக்கூறுவது, அவர்கள் அதை எடுத்துக்கொள்வது என அரசாங்கம் முழு மூச்சுடன் முயற்சி செய்யும். இதில் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் தடுப்பூசி காப்புறுதித் திட்டத்தை அரசு தொடரும்," என்று அரசாங்கத்தின் தடுப்பூசி காரணமாக ஏற்படும் விளைவுகளுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம் பற்றி பேராசிரியர் டான் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் தற்போதைய நிலையில் டிப்தீரியா, தட்டம்மை போன்ற நோய்களுக்கு மட்டுமே கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது என்றார் ஆசிய-பசிஃபிக் கிருமித்தொற்று சங்கத்தின் தலைவரும் மற்றோர் தொற்றுநோய் நிபுணருமான பேராசிரியர் பால் தம்பையா.
விருப்ப அடிப்படையில் பிள்ளைகளுக்குப் போடப்படும் பிசிஜி, ஹெப்படடைடிஸ் நோய் எதிர்ப்பு தடுப்பூசியைப் போட்டுக்ெகாள்வது 100 விழுக்காட்டை எட்டியுள்ளது என்பதைச் சுட்டிய பேராசிரியர் பால் தம்பையா, கொரோனா ெகாள்ளைநோய்க்கு எதிரான தடுப்பூசி பாதுகாப்பானது, நோய் தடுப்பு ஆற்றல் கொண்டது என்று காலப்போக்கில் மக்களுக்கு தெரியவரும்போது, மேற்சொன்ன தடுப்பூசி மருந்துகளைப் போலவே மக்கள் போட்டுக்கொள்ளும் நிலை ஏற்படலாம் என்று விளக்கினார்.
சிங்கப்பூர் குடியிருப்பாளர்களில் பாதிப் பேருக்கு ஆகஸ்ட் மாதத்துக்குள் தடுப்பூசி போடுவது என்றும், அக்டோபர் மாதத்துக்குள் 75 விழுக்காட்டினருக்கு போடுவது என்றும் திட்டமிட்டிருந்தது. தடுப்பூசி மருந்து முன்கூட்டியே வந்துள்ள நிலையில், தேசிய தினத்துக்குள் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு தடுப்பூசி போட்டுவிட அரசாங்கம் முடிவெடுத்துள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் அதேவேளையில், இதற்கு மக்கள் எதனால் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் என்பதையும் கருத்தில் கொண்டு அவர்களின் அச்சத்தைப் போக்க வேண் டும் என்றார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக சமூகவியலாளர் பேராசிரியர் போலின் ஸ்டிரோகன்.
சினோவேக் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக மக்கள் நீண்டவரிசையில் காத்திருந்த காட்சியை நினைவுகூரும் இவர், தேசிய தடுப்பூசித் திட்டத்தின்கீழ் போடப்படும் ஃபைசர் யையோஎன்டெக், மொடர்னா தடுப்பூசி மருந்துகள் மீது சிலருக்கு இன்னமும் சந்தேகங்கள் இருப்பதையே இது காட்டு வதாகத் தெரிவித்தார்.
"இந்தத் தடுப்பூசி மருந்துகள் தயாரிப்பு தொடர்பாக அவர்களுக்கு அச்சம் இருக்கிறது. சுருக்கமாகச் சொல்லப்போனால், அவர்கள் வேண்டுமென்றே தடுப்பூசி போட்டுக் ெகாள்வதைத் தவிர்க்கவில்லை. அதுகுறித்து அவர்களுக்கு உண்மையிலேயே கவலை உள்ளது. அதனால், நாம் அதைப் புரிந்துகொண்டு, காலப்போக்கில் அவர்களை உள்ளடக்கிச் செயல்படும் நிலையை மேற்கொள்ள வேண்டும்," என்றார் பேராசிரியர் போலின் ஸ்டிரோகன்.
தடுப்பூசி போடாதவருக்கு பாகுபாடு
தடுப்பூசியைத் தவிர்ப்பவர்கள் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்கள் சுகாதார கட்டண மானியத்துக்குத் தகுதி பெறக்கூடாது என்பது சிலர் கருத்து.
"தடுப்பூசி போட்டுக்கொள்வது தொடர்பாக தெரிந்து எடுக்கும் முடிவுக்கு மக்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட கருத்து. தேசிய தடுப்பூசி இயக்கத்துக்கு இணங்கி நடப்பவர்களுக்கு இது நியாயமாக இருக்கும்," என்றார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக சமூகவியலாளர் டாக்டர் டான் எர்ன் செர்.
ஆனால் தடுப்பூசி போட மறுப்பவர்கள், தொற்றுநோயால் பாதிக்கப்படும் பட்சத்தில் தரம் குறைந்த அல்லது அதிக கட்டண சிகிச்சைக்கு அவர்கள் உட்படுத்தப்படுவார்கள் என்பது சாத்தியமற்றது என்பதையும் நிபுணர்கள் சுட்டினர்.
தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களை வேறுவிதமாக நடத்துவது பாரபட்சமானது என்று அவர்கள் எச்சரித்தனர்.
நடைமுறையில் இந்த வேறுபாடு இருக்கும் என தேசிய பல்கலைக்கழகத்தின் கொள்கை ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் வூ ஜுன் ஜீ கருதவில்லை.
"பல்வேறு காரணங்களுக்காக தடுப்பூசி போட முடியாதவர்கள் இருப்பார்கள் என்பதைக் கருத்தில்கொள்வது முக்கியம். தடுப்பூசி போடாதவர்களுக்கும் போட்டவர்களுக்கும் இடையே பெரிய மாறுபாடுகள் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை," என்றார் அவர்.
கொரோனா கிருமி ஒரு குறிப்பிடத்தக்க பொது சுகாதார அச்சுறுத்தலாக இருக்கும்வரையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி கிடைப்பதை உறுதி செய்வது இன்றியமையாதது என்று பேராசிரியர் டான் கூறினார்.
சிங்கப்பூர் மருத்துவ சங்கத் தலைவர் டான் யியா சுவாம், மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் தங்கள் நிபுணத்துவப் பொறுப்புகளைக் குறைத்துக்கொள்ள மாட்டார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தடுப்பூசிக்கு ஆகும் செலவு
ஒவ்வொரு தடுப்பூசிக்கும் கிட்டத்தட்ட சராசரியாக $100 வரை செலவாகிறது என்று அமைச்சுகள் நிலை பணிக்குழுவின் இணைத் தலைவராக இருக்கும் வர்த்தக தொழில் அமைச்சர் கான் கிம் யோங் மே 11ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தடுப்பூசி மையங்களை அமைத்தல், சுகாதார நிபுணர்களை அணிதிரட்டுதல் போன்றவை செலவின் குறிப்பிடத்தக்க பகுதியாக உள்ளது. இதுவரை, அனைத்து தடுப்பூசிகளுக்குமான செலவு $250 மில்லியனுக்கு குறையாது என்றார் அமைச்சர் கான்.
நீண்ட காலத்திற்கு இலவசத் தடுப்பூசிகள், கொரோனா நோயாளிகளுக்கு சுகாதாரப் பாராமரிப்பு என்பதில் பொது வளங்களை அணிதிரட்ட வேண்டிய அவசியம் உள்ளதால், சிங்கப்பூரர்கள் அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும் என்று பேராசிரியர் ஓய் கூறினார்.
ஆனால், தடுப்பூசிக்குப் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்றால், தடுப்பூசி போடுவதற்கு கட்டணம் தடையாக இருக்காது என்பதை உறுதிப்படுத்த ஓரளவு மானியம் தேவைப்படும் என்பதையும் அவர் சுட்டினார்.
எனினும் பொதுமக்கள் செலுத்த வேண்டியிருக்கும் எந்தவிதமான கட்டணமும் அத்தனை விரைவில் நடப்புக்கு வராது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
உயர்நிலை 2ல் பயிலும் மாணவிகளுக்கு மனித 'பாப்பிலோமா' கிருமிக்கான தடுப்பூசிக்கு நடைமுறையில் இருப்பதுபோல, தடுப்பூசிகளை விநியோகிப்பவர்களுக்கான சிறிய நிர்வாகக் கட்டணங்கள் பொதுமக்களுக்கு அமுல்படுத்தப்படலாம் என்று பேராசிரியர் தம்பியா கூறினார்.
"சிங்கப்பூரில், ஏதாவது இலவசமாக வழங்கப்பட்டால், பின்னர் அதற்கு கட்டணம் வசூலிப்பது சிரமம்," என்று அவர் குறிப்பிட்டார்.
"தடுப்பூசிகள் இலவசமாக இருக் கலாம், ஆனால் தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டதும், இறுதியில் தடுப்பூசிகளை நிர்வகிக்கும் பலதுறை மருந்தகங்களும் தனியார் மருந்தகங்களும் நிர்வாகக் கட்டணத்தை வசூலிக்க அனுமதிக்கப்படும்," என்றார் பேராசிரியர் தம்பையா.
கடந்த ஆண்டு கொள்ளைநோய் பரவலால் உலகம் முடங்கியபோது, அந்நோயைத் துடைத்து ஒழிப்பதற்கான தடுப்பூசியை அதி வேகத்தில் தயாரிக்க வேண்டிய நெருக்குதலுக்கு உலகளாவிய மருந்துநிறுவனங்கள் உள்ளாகின. தற்போது ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் பெருமளவில் தடுப்பூசி தயாரிக்கும் கட்டாயத்தை எதிர்நோக்கும் இவை அதற்கான முயற்சிகளில் முனைப்புக் காட்டுகின்றன.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சில்
ஹரிஸ் பஹாருடின் எழுதிய கட்டுரையின் சுருக்கம்.

