லதா
இனவாத சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்க சிங்கப்பூரர்களையும் இங்கே பணிபுரியும் வெளிநாட்டவரையும் ஒருங்கிணைக்க சிங்கப்பூர் இன்னும் செய்ய வேண்டியது அதிகம் உள்ளது என்று நம்புகிறார் பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி ஆகியவற்றுக்கான இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா.
சிங்கப்பூருக்கு வரும் வெளிநாட்டவர்கள் இந்த நாட்டு கலாசாரத்தையும் இந்த நாட்டு பழக்க வழக்கங்களையும் புரிந்துகொள்வது மிக முக்கியம். எந்த நாட்டுக்குப் போனாலும், நீங்கள் ஒரு விருந்தினர் என்றால், உங்கள் கலாசார அடையாளங்களைப் பேணும் அதேவேளையில் அங்குள்ள பழக்கவழக்கங்களுக்கு உங்களை மாற்றிக்கொள்வது முக்கியம்.
"சிங்கப்பூரில் சாதி கருத்தியல் கிடையாது. அதை சிங்கப்பூர் விரும்பவும் இல்லை. சாதி என்ற கருத்தியல் ஒருவரை ஒரு பிரிவுக்குள் அடைத்துவிடும். அந்தப் பிரிவை மீறி முன்னேற முடியாது.
"சிங்கப்பூர் எல்லாரும் முன்னேறும், எல்லாருக்கும் வாய்ப்பு உள்ள, நியாயமான- சம உரிமை வழங்கும் சமூகமாக எப்போதும் இருந்து வருகிறது. நீங்கள் இந்தப் பிரிவில் பிறந்தவர், எனவே நீங்கள் வேறு என்று நாங்கள் சொல்வதில்லை. நாம் அனைவரும் சிங்கப்பூரர்கள், நாம் அனைவரும் ஒன்று.
"எனவே ஒருங்கிணைப்பு முக்கியம்," என்று கடந்த திங்கள்கிழமை தமிழ் முரசுக்கு அளித்த விரிவான நேர்காணலில் கூறினார் குமாரி இந்திராணி ராஜா.
"அதேநேரத்தில், வெளிப்படையான முறையான உரையாடல்களை பரஸ்பர மரியாதையோடும் நியாயமாகவும் பாதுகாப்பான சூழலில் அடிக்கடி நடத்திக்கொண்டே இருக்கவேண்டும். எல்லாம் சரியாகவே இருப்பதாக தோன்றும் நேரத்தில் எதிர்பாராத விளைவுகள் ஏற்படக்கூடும்.
"தொடர்ந்து உரையாடும்போது நமக்குள்ளே பெரிய வித்தியாசங்கள் இல்லை என்பது தெரியவரும். பல விஷயங்கள் தெரியாமல் செய்யப்படுபவை என்பதும் புரியவரும். நெருப்பு கொழுந்துவிட்டு எரியாமல் எப்படி அணைக்கிறோம் என்பதில்தான் எல்லாம் அடங்கியிருக்கிறது.
"இனவாதம் என்பது ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொர் இடத்திலும் எப்போதும் யாரோ ஒருவருக்கு எதிராக நீறுபூத்து நெருப்பாக இருந்துகொண்டே இருக்கும்.
"அவ்வப்போது போட்டித்தன்மை அதிகரித்து நிகழ்காலம் பற்றியும் எதிர்காலம் குறித்தும் பயம் ஏற்படும்போது இனவாத உணர்வுகள் விசிறி விடப்படுகின்றன, அண்மையில் சிங்கப்பூரில் நிகழ்ந்ததைப்போல," என்று விளக்கினார் அமைச்சர் இந்திராணி.
"சிங்கப்பூர் முடக்கநிலைக்குச் சென்று தொற்று தணிந்திருந்தது. நீண்டகாலமாக தொற்று இல்லாதிருந்த நிலையில், அடுத்த மிரட்டலாக இந்தியாவில் இருந்து டெல்டா கிருமி இங்கு பரவியபோது மக்கள் கவலைகொள்ளத் தொடங்கினர். கவலையும் பயமும் ஏற்படும்போது, யார் மீதாவது குற்றம் சுமத்துவோம். அந்த பயங்கள் சில சந்தர்ப்பங்களில் தேவையற்ற பேச்சாக வெளிப்பட்டன.
"மற்றொரு பக்கம், சமூக ஊடகங்களில் சிங்கப்பூர்- இந்தியா இடையேயான விரிவான பொருளியல் ஒத்துழைப்பு ஒப்பந்தம் (சீக்கா) உள்ளூர் சிங்கப்பூரர்களின் வேலைகளை இந்திய நாட்டவர்கள் கைப்பற்றுவதாக சித்திரிக்கப்பட்டது.
"ஒரே நேரத்தில் இரு விஷயங்கள் நடந்தபோது, இரண்டும் ஒன்றாகக்கப்பட்டன. அது இனவாதமாக வெளிப்பட்டது."
மே 7ஆம் தேதி, 55 வயது இந்திய சிங்கப்பூரரான செல்வி ஹிந்தோசா நிதா விஷ்ணுபாயை ஒரு சீன தம்பதி முகமூடியை சரியாக அணியுமாறு கூறினர். இது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதத்தை உண்டாக்கியது. அந்த ஆடவர், இந்தியப் பெண்ணுக்கு எதிராக இனரீதியான கருத்துகளைக் கூறி அவரைத் தாக்கினார்.
பாசிர் ரிஸ் கடற்கரைப் பூங்காவில் இந்திய நாட்டு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இனரீதியான வார்த்தைகளால் காயப்படுத்தப்பட்டது உட்பட அடுத்த சில நாட்களில் வேறு சில சம்பவங்கள் சமூக ஊடகங்களில் வெளி வந்தன.
தொடர்ந்து ஜூன் 5ஆம் தேதி, பலதுறைத் தொழிற்கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளர் டான் பூன் லீ, கலப்பின ஜோடியான தேவ் பிரகாஷ், ஜேக்லின் ஹோ இருவரிடமும் இனவாதக் கருத்துகளை கூறினார்.
"இத்தகைய தாக்குதல்கள் ஒரு குறிப்பிட்ட இனத்துக்கு எதிராக மட்டுமே நிகழ்பவை அல்ல," என்று சுட்டிய அமைச்சர், "ஆனால் அவை பொதுவாக அச்சத்தின் விளைவாக இடம்பெறுகின்றன," என்றார்.
தொடக்கத்தில் வூஹானில் இருந்து கிருமி பரவியபோது சீனர் களுக்கு எதிரான இனவாதக் கருத்துகள் கிளம்பின. சீனாவிலிருந்து வரும் விமானங்களை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததையும் லண்டனில் சிங்கப்பூர் மாணவர், சீன நாட்டவரென தவறாக எண்ணப்பட்டு தாக்கப்பட்டதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
"எனவே, (இனவாதத் தாக்குதல்கள்) பொதுவாக பயத்தாலும் சில சந்தர்ப்பங்களில் முழு உ ண் மையை அறியாமலும் உருவாகிறது.
"கொவிட்-19 கொள்ளைநோய் பரவலும் வேலைகள் குறித்த கவலையும் இல்லையென்றால் இனவாதம் சிங்கப்பூரில் ஒரு பிரச்சினையாக எழுந்திருக்காது. எல்லாவற்றையும் ஒன்றாக முடிச்சுப்போடும்போதுதான் பிரச்சினை தலைதூக்குகிறது.
"எனவே, இவை எல்லாவற்றையும் தனித்தனியாகப் பார்ப்பது முக்கியம்," என்றார் அமைச்சர்.
"இந்திய நாட்டவர் வேலைகளைப் பறித்துச் செல்கிறார்கள் என்ற கூற்றுக்கு அமைச்சர்கள் ஓங் யி காங், டான் சீ லெங் இருவரும் அண்மையில் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தனர்.
"சீக்கா, இந்திய நாட்டவர் இங்கு வந்து வேலை செய்ய கட்டுப்பாடில்லாத உரிமையை அளிக்கவில்லை. அது சிங்கப்பூரின் குடிநுழைவுக் கொள்கைகளுக்கு உட்பட்டது. அவர்கள் வேலை அனுமதி பெறத் தகுதி பெற வேண்டும்.
"ஏனைய தடையற்ற வர்த்தக உடன்பாடுகளைப்போல சீக்காவும் இருதரப்புக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. சீக்கா, சிங்கப்பூருக்கு நன்மையைத் தந்துள்ளது.
"இரு அமைச்சர்களும் கூறியதைப் போல, வேலைகள் குறித்த கவலை இங்கே உள்ளது. உள்ளூர்வாசிகளுக்கு எதிரான நியாயமற்ற வேலைக் கொள்கைகளைக் களைய மனிதவள அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது.
"முக்கியமாக, வேலைகளின் தன்மை மாறி வருவதை சிங்கப்பூர்கள் உணர வேண்டும்.
"மேம்படுத்திக் கொள்வதே வழி. இந்தப் புதிய வேலைவாய்ப்புகளைப் பெற்று, பணியில் விரைந்து முன்னேற புதிய திறன்கள் தேவை. திறன்கள் இருப்பவர்களை முதலாளிகள் இயல்பாகவே நாடுவார்கள்," என்றார் அமைச்சர் இந்திராணி.

