சிங்கப்பூர் மக்கள்தொகையில் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது பற்றிய தமிழ் முரசின் கேள்விக்கு, எண்ணிக்கை குறையாமல் இருக்க தமிழர்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும், நிறைய பிள்ளைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பதிலளித்தார் பிரதமர் அலு வலகத்தில் தேசிய மக்கள் தொகை, திறனாளர்் பிரிவுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் இந்திராணி ராஜா.
சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் குறைகிறது. வேலை முன்னேற்றம் முக்கியமாக இருப்பதால் திருமணங்கள் தாமதமாகின்றன அல்லது தனித்து வாழ முடிவு செய்கிறார்கள். இது எல்லா இன மக்களும் எதிர்கொள்ளும் பிரச்சினை. மக்கள் தொகையைப் பெருக்க வெளிநாட்டினரை வரவேற்கிறோம்.
மற்ற சமூகங்களைப் போலவே இந்திய சமூகமும் மக்கள் தொகை வளர்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் மக்கள் தொகை வளர்ச்சி 1.1 ஆகியுள்ளது.
தமிழ்ச் சமூகம் வலுவான சமூகமாக வளர தேசிய திறன் வளர்ச்சியும் மேம்பாடும் முக்கியம் என்றார் அமைச்சர். திறன் மேம்பாடு, வளர்ச்சி, திறன் மாற்றுப் பயிற்சிகள் போன்றவற்றுக்கு அரசாங்கம் பல்வேறு உதவித் திட்டங்களை வழங்குவதையும் அவர் சுட்டினார்.
ஆர்வம் உள்ளவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்
அரசியலில் இந்தியர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பது பற்றிக் கேட்டதற்கு, இந்தியர்கள் அரசியலில் ஆர்வம் காட்ட வேண்டும், தகுதியுள்ளவர்கள் பங்காற்ற முன்வரவேண்டும். உண்மையிலேயே பார்க்கப்போனால், சிங்கப்பூரில் இளம் இந்தியத் தலைவர்கள் பலர் இருக்கின்றனர் என்றார் அவர்.
"ஆனால், இளகிய மனதுடையவர்கள் அரசியலில் நுழைவதைப் பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.
"நான் அரசியலுக்கு வந்த நேரத்தில் அதிகமான பெண்கள் அரசியலில் இல்லை. கொள்கை வகுப்பதில் பெண்களின் கருத்தும் குரலும் இடம்பெற வேண்டும் என்று நினைத்தேன். என்னால் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்று நம்பினேன். மேலும், இந்த சமூகத்தால் நான் பலனடைந்துள்ளேன் என்பதை நான் திடமாக நம்புவதால் ஏதாவது ஒரு வழியில் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நினைத் தேன். அதனால் ஹோ பெங் கீ அழைத்தபோது, நான் மனமுவந்து அரசியலுக்கு வந்தேன்.
"அரசியலில் ஈடுபடும் எண்ணம் கொண்டோருக்கு அரசியல் குறித்த வலுவான கண்ணோட்டமும் மிகுந்த ஆர்வமும் வேண்டும். அரசியலில் வர விரும்புவோருக்கு உறுதியான நிலைப்பாடும் முக்கியம். சரியான பண்புநெறிகள் இருக்க வேண்டும். அத்துடன், மாற்றத்தை உருவாக்கி இருப்பதை மேலும் சிறப்பாக்கும் சிந்தனையுடன் செயல்படும் ஆர்வம் இருக்க வேண்டும்," என்றார் அமைச்சர் இந்திராணி ராஜா.

