தனிப்பட்ட முறையில் இனவாதத்தை எதிர்கொண்டதில்லை

தனிப்பட்ட முறையில் இனவாதத்தை எதிர்கொண்டதில்லை

2 mins read

அமைச்சர் இந்திராணி ராஜா தனிப்பட்ட முறையில் இனவாதத்தை எதிர்கொண்டதில்லை.

"என் நண்பர்கள் சிறந்தவர்கள். கான்வென்டில் படித்த எனக்கு இந்திய நண்பர்களும் சீன நண்பர்களும் இருந்தனர். நாங்கள் இந்தப் பள்ளியில் மாணவிகள் என்று மட்டுமே நினைப்போம். நிறத்தை பார்த்ததில்லை.

"என் அம்மாவின் குடும்பம் இன்னும் சுவாரஸ்யமானது. அம்மாவுடன் உடன் பிறந்தவர்கள் எட்டுப் பேர். அம்மா சீனர். இந்தியரை மணந்தவர். இன்னொரு சகோதரி பார்சி இனத்தவரை மணந்தார். மற்றொருவர் பாகிஸ்தானியரை மணம் முடித்தார். இன்னொருவர் யுரேஷியரையும், மற்றொருவர் சீனரையும் மணம் புரிந்தனர். அம்மாவின் குடும்பம் ஐக்கிய நாடுகள் சபையைப் போன்றது," என்று சிறுவயது முதலே பல இனங்களுடன் வளர்ந்த அனுபவத்தை சிரித்துக்கொண்டே கூறினார்.

"நான் அரசியலில் நுழைந்தபோது, சிறுமைபான்மை இனத்தவர், அதிலும் ஒரு பெண் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் கருத்துகளை முன்வைக்க வேண்டும் என்றும் நேர்மறையான எண்ணங்களோடு பலரால் வரவேற்கப்பட்டேன். அது என் அனுபவம்.

"எனினும் இனவாதத்ததை எதிர்கொண்டவர்களை எனக்குத் தெரியும். அது எனக்கு நெருடலை ஏற்படுத்தும் ஒன்று. எல்லா இந்தியர்களும் இனவாதத்தை எதிர்கொள்வதில்லை. ஆனாலும் அது நடக்கிறது.

"வாக்குவாதத்தில் ஈடுபட்ட பலதுறைதொழிற் கல்லூரி விரிவுரையாளர் சம்பவத்தை பெரும்பாலான சிங்கப்பூரர்கள் மிகவும் மோசமானது என்றும் அப்படிப்பட்ட கருத்துகளை சொல்லக்கூடாது என்றும் நினைத்தது நல்ல விஷயம். நம்மில் பலருக்கு இது தவறு என்று தோன்றுகிறது. அடிப்படையில் சிங்கப்பூரர்கள் அப்படிப்பட்டவர்கள் இல்லை என்பதை இது காட்டுகிறது.

"இனிமேல், இனவாத சம்பவங்கள் இடம்பெறாது என்று நம்புவோம்," என்றார் அமைச்சர் இந்திராணி ராஜா.