1964ல் ஒளிவீசிய ஒலிம்பிக் சுடர்கள்

தோக்கியோவில் நேற்று முன்தினம் தொடங்கிய 2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இத்தொடரின் 32வது விளையாட்டுகளாகும். 1896ல் கிரேக்கத் தலைநகர் ஏதென்சில் தொடங்கிய கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகள், பல பரிணாமங்களைக் கடந்து வந்துள்ளன. தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகள், முன்னதாக கடந்த ஆண்டு ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காரணமாக இந்த தோக்கியோ விளையாட்டுகள் இந்த ஆண்டு ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் இரண்டு முறை தவிர, தொடர்ந்து 17 முறை கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் தேசிய அணியாகப் பங்கேற்று உள்ளது. 1964ஆம் ஆண்டில் சிங்கப்பூர், மலேசியாவுடன் இணைந்து ஓர் அணியாகப் பங்கேற்றது. 1980 மாஸ்கோ ஒலிம்பிக் விளையாட்டுகளை அமெரிக்கா புறக்கணித்ததால், சிங்கப்பூர் உட்பட அதன் நட்பு நாடுகள் பல அந்த விளையாட்டுகளைப் புறக்கணித்தன. 1964 தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து நான்கு தமிழர்கள் குத்துச்சண்டை, ஹாக்கி, திடல்தடப் போட்டிகள், ஜூடோ ஆகிய போட்டிகளில் பங்கேற்றனர். அவர்களில் இருவர் தங்களது தோக்கியோ அனுபவங்களைத் தமிழ் முரசிடம் பகிர்ந்துகொண்டனர்.

வீ. பழனிச்சாமி

இணை ஆசிரியர்

திடல்தடப் போட்டிகளின் 100 மீட்டர், 200 மீட்டர் குறுகிய தூர ஓட்டங்களின் சிங்கப்பூர் சகாப்தமாக இன்றும் விளங்குபவர் 78 வயதாகும் திரு கனகசபை குணாளன்.

உலகம் போற்றும் ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கேற்றது தமது அனுபவத்தில் 'ஓர் இனிய விபத்து' என்று வர்ணிக்கிறார் திரு குணாளன்.

திடல்தடப் போட்டிகளில் பங்கேற்பதற்குமுன் சிங்கப்பூர் ஆசிரியர் சங்கத்துக்காக காற்பந்து விளையாடினார்.

1963ல்தான் ஓட்டப்பந்தயத்தில் தீவிரமாகப் பங்கேற்ற குணாளன், 1964 தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகளுக்குத் தேர்வாகியிருக்கும் செய்தி அறிந்ததும் தம்முள் மகிழ்ச்சி கலந்த குழப்பம் ஏற்பட்ட தாகக் கூறினார்.

1963ல் தமது 21வது வயதில் சிங்கப்பூரில் பல ஓட்டங்களில் பங்கேற்ற குணாளன், மெர்டேக்கா விளையாட்டுகளிலும் தாய்லாந்தில் நடைபெற்ற சில போட்டிகளிலும் மலேசியாவைப் பிரதிநிதித்து ஓடினார்.

அங்கு மலேசியாவின் பிரபலமான ஓட்டக்காரர்களான மணி ஜெகதீசன் (1966ல் ஆசியாவின் ஆக வேகமான ஓட்டக்காரர்), டிட்டா குடா (110 மீட்டர் தடையோட்ட வீரர்) போன்றவர்களுடன் குணாளன் பேங்காக்குக்குப் பயணமானார்.

"அவர்கள் அனைவரும் நன்றாக ஓடினார்கள். நான் மோசமாக ஓடினேன்," என்று மனமுடைந்து சிங்கப்பூர் திரும்பிய குணாளன், தமது ஆசிரியர் பயிற்சியைத் தொடர்ந்தார்.

அப்போதுதான், 1964 தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் ஆண்களுக்கான 4 x 100 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் பங்கேற்க குணாளன் தேர்வு பெற்ற செய்தி அவர் காதுகளுக்கு எட்டியது. அவருடன் மணி ஜெகதீசன், ஹம்சா மக்லான், ஜான் டுக்கோம் ஆகியோர் அக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

அவ்வளவு பெரிய விளையாட்டு களுக்கு தாம் தேர்வாகியிருக்கிறேனா என்று தம்மைத் தாமே கேட்டுக்கொண்டார், அப்போது 22 வயது நிரம்பியிருந்த குணாளன்.

"நான் எவ்வாறு தேர்வு பெற்றேன் என்று எனக்குப் புரியவில்லை. டிட்டா குடா என்னைவிட சிறப்பாக ஓடக்கூடிய அனுபவசாலி. அவர் பங்கேற்கவிருந்த ஆண்கள் 110 மீட்டர் தடையோட்டத்தில் அவர் முழு கவனம் செலுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் அவரது இடத்தை எனக்குத் தந்திருக்கலாம்," என்று கூறினார் குணாளன்.

4 x 100 மீட்டர் அஞ்சல் ஓட்டதக் குழுவுக்கு தாம்சன் ரோட்டில் இருந்த முன்னைய போலிஸ் பயிற்சிக் கல்லூரியில் ஒருங்கிணைந்த பயிற்சி மூன்று வாரங்களுக்கு நடைபெற்றது.

"ஒருங்கிணைந்த பயிற்சி முடிந்தவுடன், எங்கள் குழுவினர் சிங்கப்பூரிலிருந்து ரயில் மூலமாக கோலாலம்பூர் சென்று சேர்ந்தோம்.அங்கு எங்களுக்கு அதிகாரபூர்வ உடைகள் வழங்கப்பட்டன.

"அங்கிருந்து புறப்பட்ட 62 பேர் கொண்ட மலேசிய அணியினர் வழியில் ஹாங்காங்கில் இறங்கியது. நாங்கள் அங்கு ஒருநாள் உல்லாசமாக தங்கியிருந்தோம். சிங்கப்பூர் திடல்தடப் போட்டிகள் சங்கத்தின் அப்போதைய தலைவராக இருந்த துணைப் போலிஸ் ஆணையாளர் திரு டி. துரைராஜா கைச்செலவுக்குக் கொடுத்த $100யைக் கொண்டு ஒரு புகைப் படக் கருவியை வாங்கினேன்.

"பின்னர் ஹாங்காங்கிலிருந்து தோக்கியோவுக்குப் புறப்பட்டோம். அந்த ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி முதல் அக்டோபர் 24ஆம் தேதி வரை தோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுகள் நடைபெற்றன," என்று நினைவுகூர்ந்தார் குணாளன்.

"ஜப்பானில் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட அற்புதமான வரவேற்பு எங்களை மெய்சிலிர்க்க வைத்தது. முன்பு ஜப்பானியர்கள் என்று சொன்னாலே போர்க்காலக் கதைகள்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் அதற்கு நேர்மாறாக, அவர்கள் எங்களிடம் மிகவும் அன்பாகப் பழகிய விதம் அவர்கள் மேல் நாங்கள் கொண்டிருந்த மதிப்பைப் பன்மடங்கு உயர்த்தியது.

"நாங்கள் ஈரடுக்கு வீட்டில் தங்க வைக்கப்பட்டோம். நானும் ஜெகதீசனும் ஒரே அறையில் தங்கியிருந்தோம். விளையாட்டுக் கிராமத்தில் உள்ள இடங்களுக்குச் செல்ல எங்களுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது. நாங்கள் விரும்பிச் சென்ற மற்றோர் இடம் உணவுக்கூடம். அங்கு பலவிதமான உணவு வகைகள் கிடைத்தன. எங்கள் வீட்டுக்கு அருகே உள்ள பயிற்சித் தடத்தில் நாங்கள் எங்கள் பயிற்சிகளை மேற்கொண்டோம்," என்றார் குணாளன்.

போட்டியில் இவரது குழுவினர் சிறப்பாகச் செய்யவில்லை. தேர்வுச் சுற்றில் அக்குழு ஆறாவது நிலையில் வந்தது. முதல் ஓட்டக்காரராக டுக்கோம், இரண்டாவது ஓட்டக்காரராக மக்லான், மூன்றாவது ஓட்டக்காரராக குணாளன், நான்காவது ஓட்டக்காரராக ஜெகதீசன் பங்கேற்ற போட்டியில் அவர்கள் எடுத்துக்கொண்ட நேரம் 41.4 வினாடி. அது அவர்களை அடுத்த சுற்றுக்குச் தகுதி பெறச் செய்வதற்குப் போதுமானதாக இல்லை.

அவர்கள் பங்கேற்ற போட்டியில் இத்தாலி 39.7 வினாடியில் போட்டியை முடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஆண்களுக்கான 4 x 100 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தின் இறுதிப் போட்டியில் 39.0 வினாடியில் ஓடி தங்கப் பதக்கத்தை வென்றது அமெரிக்கா.

"நான் அந்தப் போட்டியில் 10.9 வினாடியில் ஓடினேன் என்று நினைக்கிறேன். எனக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. ஆனால் நான் அதனைக் காட்டிக்கொள்ளவில்லை. என்னை நோக்கி வரும் மக்லானிடமிருந்து குட்டைக்கோலை கீழே விழாமல் பெற்றுவிட வேண்டும் என்பதில்தான் என் கவனம் இருந்தது.

"குட்டைக்கோலை சரியாகப் பெற்று மிகவும் வேகமாக ஓடி, அதை ஜெகதீசனிடம் கொடுத்தேன். என்னைச் சுற்றி என்னை நடக்கிறது என்பதை நான் பார்க்கவில்லை. எனது பங்கைச் சிறப்பாக முடித்த திருப்தி எனக்கிருந்தது," என்றார் குணாளன்.

போட்டிக்குப் பிறகு அடுத்த சில நாட்களில் தோக்கியோவைச் சுற்றிப் பார்த்த அவர், சில ஒலிம்பிக் நினைவுப் பொருட்களையும் வாங்கினார்.

அனுபவத்துக்காக சில 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப் பந்தயங்களைப் பார்த்த குளாணன், அவற்றிலிருந்து எதையும் அவ்வளவாகக் கற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறினார்.

ஜப்பானியர்களைப் பற்றி கூறும்போது, அவர்கள் உபசரிப்பதில் மிகச் சிறந்தவர்கள் என்றும் அந்த வகையில் உணவுக்கூடத்தில் பணியாற்றிய சில ஜப்பானிய மாணவர்கள், தங்கள் வீட்டில் ஓர் இரவு தங்க தமக்கு அழைப்பு விடுத்தனர் என்றும் சொன்னார்.

மூங்கினால் ஆன அவர்களின் வீட்டில் தங்கியது தமக்கு மறக்க முடியாத அனுபவம் என்று கூறும் குணாளன், மொத்தத்தில் 1964 தோக்கியோ விளையாட்டுகள் பயணம் பற்றி கேட்டால், சொல்வதற்கு அவ்வளவாக இல்லை என்று கூறுவேன்," என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

நான்கு ஆண்டுகள் கழித்து 1968 மெக்சிக்கோ ஒலிம்பிக் விளையாட்டுகளில் சிங்கப்பூரைப் பிரதிநிதித்து ஓடிய குணாளன், அங்கு 10.38 வினாடி தேசிய சாதனையை நிகழ்த்தினார்.

33 ஆண்டுகளுக்குப்பின் குணா ளனின் சாதனையை 2001ல் தென் கிழக்காசிய விளையாட்டுகளில் உள்ளூர் ஓட்ட வீரரான யு.கே.ஷியாம் 10.37 வினாடி ஓடி முறியடித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!