கோமள விலாஸ் உணவகத்தை தோற்றுவித்த திரு முருகையா ராஜூவின் 7 பிள்ளைகளில் மூன்றாவது பிள்ளையான திரு ஆர்.டி.சேகர் 1995ஆம் ஆண்டில் கோமளாஸ் விரைவு உணவகத்தை அப்பர் டிக்சன் ரோடில் தொடங்கினார்.
நூதனமான முயற்சியாக இந்திய உணவை விரைவு உணவாக வகைப்படுத்தி அதனைக் குறுகிய நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும், காலத்துக்கு ஏற்ற இச்சேவை மக்க ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
"இந்திய உணவகங்களில் சமையல் வல்லுநர்களும் முன்னிலை ஊழியர்களும் கிடைப்பது சிரமமானது. குறைந்த ஆள்பலத்துடன் அதிக வாடிக்கையாளர்களுக்குச் சேவையாற்ற இந்த விரைவு உணவு அணுகுமுறையே உகந்தது," என்று கோமளாஸ் உணவகத்தின் உருவாக்கத்தைப் பற்றி விளக்கினார் அதன் உரிமையாளரான 62 வயது திரு ஆர்.டி.சேகர்.
உணவைத் தாமே எடுத்துச்செல்லும் அணுகுமுறை சீக்கிரமாக உணவைப் பெற்று உண்ண விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது என்று குறிப்பிட்ட திரு ஆர்.டி.சேகர், இருபது நிமிடத்திற்குள் ஒரு வாடிக்கையாளர் உணவை உண்டு செல்ல இது உதவுகிறது என்றார்.
முன்பு தீவு முழுவதும் 10க்கும் மேற்பட்ட கோமளாஸ் கிளைகள் இயங்கின. தற்போது அந்த எண்ணிக்கை ஐந்தாக குறைந்துள்ளது.
"உணவகத்திற்குத் தேவைப்படும் சமையல் வல்லுநர்களை 'எஸ்-பாஸ்' வேலை அனுமதி அடிப்படையில் இங்கு அழைப்பதற்கான விதிமுறைகள் கடுமையானதால் சில கிளைகளை மூட வேண்டியாயிற்று.
"பாரம்பரிய இந்திய உணவகங்கள் நிலைத்திருக்க அரசாங்கத்தின் தற்போதைய மனிதவளக் கொள்கைகள் சிலவற்றை மறுஆய்வு செய்தல் முக்கியமாகும்," என்று கருத்துத் தெரிவித்தார் திரு ஆர்.டி.சேகர்.
கோமளாஸ் எனும் வணிகப் பெயரைப் பயன்படுத்தி, 'கோமளாஸ் வெஜி மார்ட்' எனும் காய்கறி வியாபாரத்தை திரு ஆர்.டி.சேகரின் ஆக இளைய தம்பியான 52 வயது திரு ராஜூ சந்திரசேகரன் வழிநடத்தி வருகிறார்.
செய்தி: ப. பாலசுப்பிரமணியம்

