சிங்கப்பூரில் 70 வயதும் அதற்கும் மேற்பட்டோரில் இதுவரை 76 விழுக்காட்டினர் கொவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் போட்டுக்கொண்டு விட்டனர். அவ்வயதுப் பிரிவினரில் இன்னும் 96,000க்கும் மேற்பட்டோர் தடுப்பூசிக்குப் பதிவு செய்யவில்லை என்று சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி கடந்த திங்கட்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருந்தார். கிருமித்தொற்றால் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் முதியோர், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்குத் தயங்குவது ஏன் என்பது குறித்து அறிந்தும் ஆராய்ந்தும் வந்தது தமிழ் முரசு.
எஸ்.வெங்கடேஷ்வரன்
கணவர், மகள், தாயார், சகோதரி என்று தம் குடும்பத்தில் பலரும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளபோதும் இன்னும் தடுப்பூசி போடாமல் இருக்கிறார் திருவாட்டி மேனகா கோபால், 62.
சிங்கப்பூரில் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் யாரும் இறக்கவில்லை என்றாலும் உலகின் மற்ற பகுதிகளில் சிலர் தடுப்பூசி போட்ட பின்னர் கடுமையான உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அச்சத்துடன் குறிப்பிட்டார் திருவாட்டி மேனகா.
"இணையத்தில் நிறைய செய்திகளைப் படிப்பேன். தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் சிலருக்கு மாரடைப்பு, பக்கவாதம் போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டதாகப் படித்தேன். அவை என்னைப் பலமுறை சிந்திக்க வைத்துள்ளன. தடுப்பூசி போடவே மாட்டேன் என்று சொல்லவில்லை. ஆனால், சிறிது காலம் காத்திருக்கலாம் என்று தோன்றுகிறது," என்றார் அவர்.
சமூக ஊடகங்களில் நண்பர்கள் பேசிக்கொள்வதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை அவர் ஒப்புக்கொண்டார்.
"தடுப்பூசி போட்டுக்கொள்வதால் 100% பாதுகாப்பு இல்லை அல்லவா! எதிர்காலத்தில் மாத்திரை வடிவில் தடுப்பு மருந்துகள் வரலாம் என்று ஒருவர்மூலம் கேள்விப்பட்டேன். தற்போது கொரோனா தடுப்பூசிமீது முழுதாய் நம்பிக்கை வரவில்லை," என்று திருவாட்டி மேனகா கூறினார்.
கொரோனா தடுப்பூசி குறித்த பல பொய்ச் செய்திகள் சமூக ஊடகங்களில் உலவி வருகின்றன. எடுத்துக்காட்டாக, தடுப்பூசி போட்டுக்கொண்டால் மாரடைப்பு, பக்கவாதம் வரலாம் என்ற வதந்தி இவ்வாண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஃபேஸ்புக்கில் பரவியது. அதனைத் தொடர்ந்து, அந்தத் தகவலில் உண்மையில்லை என்று ஏப்ரல் 15ஆம் தேதி ஓர் அறிக்கை வாயிலாக சுகாதார அமைச்சு விளக்கம் அளித்தது.
பொய்ச் செய்திகளும் வதந்திகளும் மூத்தோரின் அச்சத்திற்கு ஒரு முக்கிய காரணம் என்றார் 'சன்லவ்' இல்லத்தின் தலைமைத் திட்ட அதிகாரி திரு க.ராஜமோகன், 60.
சன்லவ் இல்லம் 2,000க்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு சேவையாற்றி வருகிறது.
"'வாட்ஸ்அப்' மூலம் வரும் பொய்ச் செய்திகள் போன்றவற்றை முதியவர்கள் சிலர் நம்பிவிடுகின்றனர். மேற்கத்திய மருந்தை நம்புவதைவிட ஆயுர்வேதம், ரசம் குடிப்பது போன்ற பாரம்பரிய முறைகளைப் பின்பற்றினால் போதும் என்றும் சிலர் நம்புகின்றனர்," என்றார் திரு ராஜமோகன்.
தனியாகத் தங்கியிருப்பதால் தடுப்பூசி தேவையில்லை, ஏற்கெனவே இருக்கும் உடல்நலப் பிரச்சினைகளை கொரோனா தடுப்பூசி மோசமடையச் செய்துவிடலாம், கொரோனா தொற்றினால் கடவுள் பார்த்துக்கொள்வார் என்றெல்லாம் முதியோரில் சிலர் கூறுவதாக அவர் சொன்னார்.
"தவறான சிந்தனைகளை அகற்ற மருத்துவரை நாடுங்கள் என்று வயதானவர்களிடம் சொல்வேன். தனிப்பட்ட பாதுகாப்புக்கு இல்லை என்றாலும் சுற்றியுள்ளவர்களின் பாதுகாப்புக்காவது தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்," என்று திரு ராஜமோகன் வலியுறுத்தினார்.
தடுப்பூசி என்றால் பொதுவாக 10 முதல் 15 ஆண்டு காலமாக தயாரிக்கப்படவேண்டும், ஆனால் கொவிட்-19 தடுப்பூசி ஆறு மாதங்களில் எப்படித் தயாரிக்கப்பட்டது என்ற கேள்வியும் பலரிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அறிவியலும் தொழில்நுட்பமும் பன்மடங்கு வளர்ச்சி கண்டுள்ள இந்த நவீன காலத்தில் தடுப்பூசிவேகமாகத் தயாரிக்கப்படுவதில் வியப்பேதும் இல்லை என்கிறார் டாக்டர் க.வெள்ளையப்பன், 76.
"கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக எம்ஆர்என்ஏ (mRNA) தொழில்நுட்பம் குறித்து அறிவியலாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இது முற்றிலும் புதிய தொழில்நுட்பம் என்று சொல்லிவிட முடியாது. கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என்று உறுதியான பின்னரே அவை உலகமெங்கும் விநியோகிக்கப்பட்டன. மற்ற நாடுகளைப்போல் சிங்கப்பூரும் அவற்றின் பாதுகாப்பை மதிப்பிட்ட பிறகே அவை அனுமதிக்கப்பட்டன," என்றார் டாக்டர் வெள்ளையப்பன்.
"கொவிட்-19 உட்பட எந்த நோய்க்கான தடுப்பூசியை எடுத்துக்கொண்டாலும் அதனால் 100% திறம்பட செயலாற்ற முடியாது. தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் நோய் தொற்ற வாய்ப்புள்ளது. ஆனால், தொற்றுவதற்கான வாய்ப்பு பல மடங்கு குறைகிறது. நோய் வந்தாலும் அது உடலில் விளைவிக்கக்கூடிய பாதிப்பும் குறையும். மற்றவர்களுக்குக் கிருமி தொற்றும் வாய்ப்புகளையும் குறைக்கும்," என்று அவர் விளக்கினார்.
"வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் பல கொடிய கிருமித்தொற்றுகள் ஒழிந்ததற்கு தடுப்பூசியே முக்கியக் காரணம் என்பதை அறியலாம். தட்டம்மை, இளம்பிள்ளைவாதம், காசநோய் போன்ற பல நோய்கள் ஒழிந்ததற்குத் தடுப்பூசிகளே மூலகாரணம்," என்றார் குழந்தைநல மருத்துவரான வெள்ளையப்பன்.
'அச்சம் வேண்டாம்'
ஃபைசர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட பிறகு பக்கவிளைவுகள் கடுமையாக இருக்கவில்லை என்றார் 72 வயதான திருவாட்டி ஜெயமணி ஒவிரெட்டி.
"தடுப்பூசி போட்டுக்கொண்டபின் ஓரிரு நாள்களுக்குக் கையைத் தூக்க சற்று சிரமமாக இருந்தது, இலேசான காய்ச்சல் வந்தது. 'பெனடால்' மாத்திரை சாப்பிட்டு ஓய்வு எடுத்தேன். சிரமமான நடவடிக்கை எதிலும் ஈடுபடவில்லை. அதுவே சரியாகிவிட்டது," என்று சொன்னார் திருவாட்டி ஜெயமணி.
"சரியான தகவல்களை அறிந்துகொள்வது முக்கியம். நலமாக இருந்தால் தடுப்பூசி தேவையில்லை என்று நினைக்கலாம். ஆனால், அதன் நன்மைகளைப் பற்றி படித்து, அறிந்து, தெரிந்துகொண்டு, கிருமித்தொற்றின் கொடிய விளைவுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்வதே சிறந்த தெரிவாகும்," என்றார் 'ஸ்ரீ நாராயண மிஷன்' இல்லவாசி திருவாட்டி கமலா கிருஷ்ணன், 85.
முன்வரும் மூத்த குடிமக்கள்
சிங்கப்பூரின் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் விகிதம் நாள்தோறும் ஒரு விழுக்காடு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூத்தோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவுசெய்கின்றனர்.
தேசிய தினவாக்கில், மக்கள்தொகையில் 70 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டிருப்பர் என்றும் அவ்விகிதம் செப்டம்பரில் 80 விழுக்காடாக உயரும் என்றும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அண்மையில் தெரிவித்து இருந்தார்.
"இதனால், உலகிலேயே ஆக அதிகமாக தடுப்பூசி போட்டுக்கொண்ட விகிதமுள்ள நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் இருக்கும். கொவிட்-19 தொற்றை எதிர்க்கும் மீள்திறன் கொண்ட சமூகமாக உருமாறுவதற்கு இது நம்மை ஒரு வலுவான நிலையில் வைக்கிறது," என்றார் திரு ஓங்.
இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட, அந்த நாடுகளில் அதிகமான முதியவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டதும் ஒரு காரணம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
கொவிட்-19 தடுப்பூசி: சுகாதார அமைச்சின் ஊக்குவிப்பு நடவடிக்கைகள்
♦ கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள 60 வயதிற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்யத் தேவையில்லை. அவர்கள் நேரடியாக ஏதேனும் ஒரு பலதுறை மருந்தகம் அல்லது தடுப்பூசி நிலையத்திற்குச் சென்று தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
♦ பொது மருத்துவர்களையும் அடிப்படைச் சுகாதாரப் பராமரிப்பு வழங்குநர்களையும் சுகாதார அமைச்சு அணுகி உள்ளது. இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாத 60 வயதிற்கும் மேற்பட்டோருக்கு ஆலோசனை வழங்கி, தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கும்படி அவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.
♦ ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பு, மூத்தோர் தலைமுறை அலுவலகம், மக்கள் கழகம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தொண்டூழியர்கள், மூத்தோர் வசிக்கும் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று, தடுப்பூசி போட்டுக்கொண்டனரா என்று விசாரித்து வருகின்றனர்.
♦ பயணம் செய்ய சிரமப்படும் மூத்தோருக்கு உதவும் வகையில் நடமாடும் தடுப்பூசிக் குழுக்களைக் குடியிருப்பு வட்டாரங்களுக்கு அனுப்பி உள்ளது சுகாதார அமைச்சு. அக்குழுக்கள் தற்போது புக்கிட் மேரா, செங்காங், தெம்பனிஸ், ஈசூன் உள்ளிட்ட பத்துக் குடியிருப்பு வட்டாரங்களில் செயல்பட்டு வருகின்றன.
♦ வீட்டைவிட்டு வெளியே செல்ல சிரமப்படும் மூத்தோருக்காக, அவர்களது வீட்டிற்கே மருத்துவர், தாதியரை அனுப்பி, தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஏற்பாடுகளைச் சுகாதார அமைச்சு வழங்கி வருகிறது.
மூத்தோரைக் கவரும் காணொளித் தொகுப்பு
தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஒருபக்கம் மேற்கொண்டு வந்தாலும், இந்திய மூத்தோரைக் கவரும் வண்ணம் பிடித்தமான நடிகர்களைச் சித்திரிக்கும் காணொளிகளைத் தமிழர் பேரவையும் சிற்பிகள் மன்றமும் இணைந்து தயாரித்துள்ளன.
நான்கு பாகங்களைக் கொண்ட இந்தக் காணொளித் தொகுப்பு தற்போது ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழர் பேரவையின் இளையர் பிரிவுத் தலைவரான திரு அருண் வாசுதேவ் கிருஷ்ணன் இந்தப் புத்தாக்க சிந்தனையை முன்வைத்தார் என்றும் பார்வையாளர்களிடம் விரைந்து தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில், அவை கிட்டத்தட்ட இரண்டு நிமிடக் காணொளிகளாகத் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் திரு கே.எஸ். மணியம், 50, குறிப்பிட்டார்.
"சிவாஜி கணேசன், எம்ஜிஆர் போன்று மூத்தோர் நன்கு அறிந்த நடிகர்களை மையப்படுத்தி, காணொளிகள் தயாரிக்கப்பட்டு உள்ளன. மகிழ்ச்சி அளிக்கக்கூடிய, சுவாரசியமான இக்காணொளிகளில் தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்த கருத்துகள் நுட்பமாகச் சேர்க்கப்பட்டுள்ளன," என்றார் திரு மணியம்.
'பிரேம்ஸ்டார்ஸ் புரொடக் ஷன்' (PremStarz Production) நிறுவனம் நிபுணத்துவமிக்க முறையில் தயாரித்துள்ள அந்தக் காணொளிகள் மூத்தோரிடம் பழைய நினைவுகளை மலரச் செய்யலாம் என்றும் அவர் சொன்னார்.
வழிபாட்டுத் தலங்களில் தடுப்பூசி விழிப்புணர்வு மையம்
சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கமும் (சிண்டா) இந்து அறக்கட்டளை வாரியமும் இணைந்து இந்தியர்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சமூகத்தைச் சென்றடையும் மையங்களை அமைத்துள்ளன.
இந்தியர்கள் அதிகமாகச் செல்லும் வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டுள்ள 12 மையங்களில் இதுவரை 1,300க்கும் மேற்பட்டோரை அணுகியுள்ளதாக சிண்டா தெரிவித்தது.
"கடந்த சில நாள்களாக ஈரச்சந்தைகளிலும் உணவங்காடி நிலையங்களிலும் சமூகக் கிருமித்தொற்று பாதிப்புகள் அதிகரித்து உள்ளன.
"இதுபோன்ற இடங்களுக்கு முதியவர்கள் அதிகமாகச் செல்வதுண்டு. அவர்கள் தடுப்பூசி போடாமல் இருப்பதால் உடல்நலத்திற்குப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகின்றன," என்றார் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு.
தடுப்பூசி குறித்த வதந்திகளையும் பொய்ச்செய்திகளையும் ஒழிக்க சிண்டா ஊழியர்களும் தொண்டூழியர்களும் முறையான தகவல்களைப் பொதுமக்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.
"தேசிய அளவை ஒப்பிடும்போது இந்தியர்களிடையே தடுப்பூசி போட்டுக்கொள்ளும் விகிதம் குறைவாக இருக்கலாம், ஆனால், மிகக் குறைவு என்றும் சொல்ல முடியாது. இதற்கு, பதிவு செய்யும் தளத்தைப் பயன்படுத்த தெரியாதது, திறன்பேசி இல்லாதது, குடும்ப உறுப்பினர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் இருப்பது என்பன போன்ற பல காரணங்கள் இருக்கலாம்," என்றார் இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு த. ராஜசேகர்.
பத்துக் கோவில்களிலும் இரண்டு பள்ளிவாசல்களிலும் இந்த மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஜாமிஆ (சூலியா) பள்ளிவாசல் அவற்றில் ஒன்று.
"உடலில் நோய் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பதினால்தான் தொற்றுநோய்ப் பாதிப்பு ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் தடுப்பூசி பாதுகாக்கிறது. முடிந்த அளவிற்கு விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது," என்றார் ஜாமிஆ (சூலியா) பள்ளிவாசல் துணைத் தலைவர் திரு ஷேக் ஃபக்ருதின்.
இதற்கிடையே, கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் இம்மையங்களைக் குறித்த காணொளி சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு பதிவுகள் மூலமாக மொத்தம் 5,500க்கும் மேற்பட்டோர் அந்தக் காணொளியைப் பார்வையிட்டுள்ளனர்.

